Sunday 28 February 2016

மின்னசோட்டா - மினியாபொலிஸ்..

#குளிர்ந்த_மினியாபொலிசில்_மிளிர்ந்த_வெற்றி

அலபாமாவில் இருந்து மீண்டும் டெட்ராய்ட் வந்து அங்கிருந்து மினியாபொலிஸ் போக இரண்டு விமானங்கள் மாற வேண்டும். இந்த பயணத்தில் கிட்டத்தட்ட ஒரு 15 விமான நிலையங்களில் கால் பதித்து இருப்போம். பிற மாநிலங்களில் எலந்தைப்பழம் கொய்யாப்பழம் அளவில் இதுவரை நாங்க பார்த்த பனிப் பொழிவு மினியாபொலிசில் அன்னாசிப்பழ சைஸ் என பீதியை ஏற்படுத்தினார்கள் போய் இறங்கினோம்.. அடங்கப்பா..

ஏர்போர்ட் பார்க்கிங் பில்டிங்கே பிரம்மாண்ட ஃப்ரீசராக இருந்தது.. குளிர் வாட்டியது.. பெட்டிகளை வண்டியில் ஏற்றிய அந்த சில நிமிடங்களிலேயே க்ளவுசை மீறி கை விறைத்தது..வாயில் குபு குபு வென புகை பறக்க வண்டியில் ஓடிப் போய் ஏறி அங்கிருந்து வெளியேறினோம்.. வெளியே நட்டுவைத்த ஆல்ப்ஸ் போல ஆங்காங்கே குட்டிப் பனி மலைகள் இருந்தன.. தெருவோரம் அள்ளிய பனியை எவரெஸ்ட்டுகளாகக் கொட்டியிருந்தனர்.

இதற்கிடையே பளீர் வெண்மையில் சமதளம் தெரிந்தது அநேகமாக ஐஸ் ஹாக்கி மைதானமாக இருக்கும் என நாங்கள் நினைத்தோம் அதுதான் சாலை என்றார்கள்..  அந்த ஐஸ் ரோட்டில் எங்களை அழைத்து சென்றார் சிவானந்தம் சார். 40 நிமிடப்பயணம்.. ஊரே உஜாலாவுக்கு மாறியிருக்க நாங்கள் குளிரில் நாறியிருந்தோம்.. ஒரு வழியாக கார் ஹீட்டரில் வெப்பக் காற்று முன்பை விட நன்கு வேலை செய்ய கொஞ்சம் உயிர் வந்து குளிர் பெருமூச்சு விட்டோம்.

அமெரிக்காவின் உச்சியில் இருக்கும் மினியாபொலிஸ் அதிக குளிர் மிகுந்த நகரம் மின்னசோட்டா மாகாணத்தில் இருக்கிறது.. செயின்ட்பால் மற்றும் மினியாபொலிஸ் இரண்டும் இரட்டை நகரங்கள்.. ஒரு பாலம் தான் இதை பிரிக்கிறது.. மின்னசோட்டாவில்  மட்டும் 20 ஆயிரம் ஏரிகள் இருக்கிறதாம். இந்த ஊருக்கு டென் தவுசண்ட் லேக் சிட்டி என்று பெயர்.. யாரோ ஒரு கணக்குத் தெரியாத அமெரிக்க குமாரசாமி பேர் வைத்திருக்கலாம்.

தஞ்சாவூர்க்காரரான சிவானந்தம் ஸார் வீடு.. வழக்கம் போல அருமையான தமிழ்க் குடும்ப உபசரிப்பு விருந்தோம்பல் அவரது துணைவியார் ப்ரியா அவரும் தஞ்சாவூர். அமெரிக்காவில் பிறந்து அங்குள்ள பள்ளியில் பயிலும் அவரது பிள்ளைகள் ஆதவன்&ஆதித்யா இருவரும் கை கூப்பி வணக்கம் என வரவேற்று எங்களை வியப்பில் ஆழ்த்தினார்கள். மினியாபொலிஸ் தமிழ்ச் சங்கத் தலைவி ராணி மேடம் வந்தார்கள்... சிக்கன் தந்தார்கள்.. பின் சென்றார்கள்... அவ்வளவு தான்..!

எப்படி நிகழ்ச்சி பண்ணுவிங்க? எவ்ளோ நேரம் ஆகும்? நிகழ்ச்சி எப்படி இருக்கும்? இப்படி எதுவுமே கேள்வி இல்லை.. எங்கள் ஊர் தமிழர்கள் எல்லாம் சேர்ந்து சங்கமம் என்னும் பெயரில் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை அரங்கேற்றம் பண்ணப் போறோம்.. எல்லாரும் கடந்த 2 மாதமா ப்ராக்டிஸ் பண்றாங்க ஒரு மணிநேரம் அந்த நிகழ்ச்சி நடக்கும் அதற்குப்பின் உங்க நிகழ்ச்சி தான் என சொல்லி விட்டு அங்கிருந்து மறைந்து விட்டார்.

எங்கள் மீது அவ்வளவு நம்பிக்கை.! அல்லது இதற்கு முன் நிகழ்ச்சி நடந்த 3 இடங்களில் இருந்து வந்த ரிசல்ட்.. அல்லது கலைஞர்களை அவங்க போக்கில் சுதந்திரமா விட்டுடுவோம் நிகழ்ச்சியை வெற்றிகரமாக்குவது அவங்க பொறுப்பு இந்த மூன்றில் மூன்றாவது தான் காரணமாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். மினியாபொலிசில் முழுதாக 2 நாட்கள் இருந்தது.முதல் நாள் மால் ஆஃப் அமெரிக்காவிற்கு அழைத்துப்போனார்கள்.. அருமையாக இருந்தது.

இரண்டாவது நாள் நிகழ்ச்சி.. மாலை அரங்கிற்கு சென்றோம்..வாயடைத்து நின்றோம்.. உள்ளூர் தமிழர்கள் நிகழ்ச்சியை பள்ளிகளில் நடக்கும் மேடை நிகழ்ச்சிகள் லெவலில் இருக்கும் என அலட்சியமாக நினைத்திருந்தோம்.. ஆனால் தப்பாட்டம், மாடாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கூத்து, குறவன் குறத்தி, வில்லுப்பாட்டு, புலியாட்டம், கும்மி கோலாட்டம் என எல்லா நடனங்களையும் பிரமாதமாக ஆடினார்கள். 

அவர்கள் எல்லாரும் அங்குள்ள ஐ.டி மற்றும் வங்கிகளில் உயர் பதவிகளில் பணிபுரியும் தமிழர்கள்.. ஆனால் தமிழகத்தில் உள்ள தொழில்முறை கலைஞர்களுக்கு இணையாக ஆடி அசத்தினார்கள்..எங்களுக்கு ஏதோ தமிழக அரசு நடத்தும் பொங்கல் விழா போல இருந்தது அந்தளவு அற்புதம். அங்குள்ள அத்தனை தமிழர்களையும் இதற்காக நாங்கள் பாதம் பணிந்து பாராட்டுகின்றோம். மண்ணின் பாரம்பரியத்தை கடல் கடந்தும் போற்றுகின்ற உங்கள் அத்தனை பேருக்கும் தாயகத்தின் வணக்கங்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு சங்கமம் எனப் பெயரிட்டதற்கு பொருத்தமாய் அந்த நிகழ்ச்சியோடு எங்கள் நிகழ்ச்சியும் கலந்தது.. இப்போது தான் எங்களுக்கு கவலை அதிகரித்தது. உள்ளூர்காரர்களை விட கைத்தட்டல் வாங்க வேண்டுமே என்று.. வழக்கம் போல சசி ஆரம்பித்து கிறிஸ்டோபரும் நானும் அதைத் தொடர இங்கும் ஈரோடு மகேஷ் மெருகேற்ற இரண்டுமணிநேரம் போனது தெரியாமல் நிறைவுற்றது. இங்கும் பொன்னாடை நினைவுப்பரிசு வழங்கப்பட போட்டோ வைபவங்கள் தொடர அவசர அவசரமாக கிளம்பினோம்.ஏனெனில் அடுத்த நாள் மதியமே மேடிசன் நகரில் நிகழ்ச்சி.

சிவானந்தம் சார் சச்சிதானந்தம் ஸார் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட அனைவரும் பாராட்ட இப்போதும் ராணி மேடம் அந்த ஊர் க்ளைமேட் போல கூலாக மேடிசன் போய்ட்டு பத்திரமா வாங்க திரும்பிப் போகும் போது இங்க ஒரு டின்னர் அரேஞ்ச் பண்ணியிருக்கேன் அப்போ நிறைய பேசிக்கலாம் என்று கூறிவிட்டு வழியனுப்பினார். அவர் முகத்தில் தெரிந்த திருப்தியே எங்களுக்கு அவர் நினைப்பதை சொல்லிவிட்டது.
இப்பயணத்தில் தொடர்ந்து  நான்காவது நிகழ்ச்சியும் சக்ஸஸ்.!ஆம்.! குளிர்ந்த மினியாபொலிசில் மிளிர்ந்த வெற்றி.

No comments:

Post a Comment