Sunday 28 February 2016

டாலஸ் தட்டுக்கடை..

இன்னிக்கு நாம இந்தியன் ரெஸ்ட்டாரண்ட் போறோம் என்றார்கள் டெக்ஸாஸ் தமிழ்  நண்பர்கள்.. ஏற்கனவே அமெரிக்காவில் பல ஊர்களில் இந்திய ரெஸ்ட்டாரண்டுகள் போன அனுபவம் இந்த பயணத்திலேயே உண்டு. சப்பாத்தி, நான் ரொட்டி, ஒரு தால், தட்டைப்பயிர் க்ரேவி, ஒரு பனீர் க்ரேவி, சிக்கன் குழம்பு, தந்தூரி சிக்கன் அப்புறம் வெறும் வெள்ளைச் சோறு.. பிறகு எல்லாமே அமெரிக்க வகையான உணவுகள்.

இது தான் பெரும்பாலான அமெரிக்க இந்திய ரெஸ்ட்டாரண்டுகளின் மெனு.
வழக்கம் போல ஒரு இந்திய ரெஸ்ட்டாரண்ட் என நினைத்துக் கொண்டு கிளம்பினோம். 15 நிமிட கார் பயணத்தில் வந்தது உணவகம்.. காரை விட்டு இறங்கி கடை பெயரை பார்த்ததும் எங்களை மறந்து உற்சாகமானோம் டேஸ்ட் ஆஃப் இந்தியா, இந்தியன் மசாலா, ஃப்ளேவர் ஆஃப் பாரத், கோஹினூர் இப்படி வழக்கம் போல இருக்கும் பெயர்கள்

அது போலில்லாமல் கடையின் பெயரே அசத்தியது.. "மதுரை தட்டுக்கடை" இது தான் ரெஸ்ட்டாரண்ட்டின் பெயர்.. உள்ளே நுழைந்ததும் கரகாட்டக்காரன் முதல் மின்சாரக்கண்ணா வரை.. சுவரெங்கும் தமிழ் சினிமா போஸ்டர்கள்.. பெரிய டிவியில் இனிமையான தமிழ்ப்பாடல்கள்..புதன் கிழமை இரவே பெருங்கூட்டம் இருந்தது. பொதுவாக அமெரிக்காவில் இது போன்ற கூட்டத்தை சனி ஞாயிறுகளில் மட்டுமே பார்க்க முடியும். 

அதிலேயே கடையின் மகத்துவம் லேசாக புரிந்தது.. மெனு அயிட்டங்கள் பார்த்ததும் ஆனந்தக் கூத்தாடினோம்.. கறி தோசை, முட்டை தோசை, கைமா இட்லி, மீன் குழம்பு, ஈரல்குழம்பு, சுக்காவருவல், பிரியாணி, முட்டை கலக்கி ஆஹா.. ஆஹா.. சங்கத் தமிழ் மதுரையின் அத்தனை சிறப்பான வெரைட்டிகளும் அணி வகுத்து நின்றன. சைவ வகைகளில் இட்லி, கல் தோசை, புரோட்டா, சப்பாத்தி, மசால் தோசை, போன்ற உணவுகளும் சாம்பார் & 3 வித சட்னிகளோடு தயாராக இருந்தன.

மாயா பஜார் ரங்காராவை போல சாப்பிடத் தயாரானோம்.. சசி இடுப்பு பெல்ட்டை கொஞ்சம்  லூசாக்கிக் கொண்டான். ஆர்டர் செய்த உணவுகளை சுடச்சுட பறிமாறினார்கள்.. ஆஹா.. அப்படியே நம்ம மதுரை சுவை.அதிலும் நாங்கள் கேட்க கேட்க ஃப்ரெஷ்ஷாக மீன் பொரிப்பது ஆம்லேட் ஆப்பாயில் தருவது என சேவையும்.. கடந்த 3 நாட்களாக அடக்கமாகி இருந்த நாக்கினை மீண்டும் உயிர்தெழச் செய்தார்கள்

இந்த தோசை மைந்தர்கள்.. அதிலும் இட்லி கறிக்குழம்பு, கலக்கி ஆகா பாராட்ட வார்த்தைகளே இல்லை.. இன்னும் 3 நாட்கள் இங்கு தான் சாப்பாடு நிச்சயம் இதுவரை அமெரிக்காவில் இழந்த என் உடல் எடையை இந்த மூன்று நாட்களிலேயே பெற்று ஊர் திரும்புவேன் என்ற நம்பிக்கை எனக்கு வந்துவிட்டது.. நிச்சயம் அது நடக்கும்.. டாப்டென் பாணியில் சொன்னால் டாலஸ் தட்டுக்கடை..சுவையில் ஹிட்டுக்கடை.. வாழ்த்துகள்.!

No comments:

Post a Comment