Saturday 27 February 2016

மிசெளரி - செயின்ட் லூயிஸ்..

#மிசெளரியில்_மீண்டுமொரு_வெற்றி

டெட்ராய்ட் நகரில் இருந்து விடை பெற்றுக்கொண்டு நாங்கள் விமானம் ஏறியது மிசெளரி மாகாணத்தின் செயிண்ட் லூயிஸ் நகருக்கு. இந்த மொத்த  அமெரிக்கப் பயணத்தையும் ஏற்பாடு செய்த நண்பர் விஜய் மணிவேல் வசிக்கும் ஊர். மிசெளரி தமிழ்ச்சங்கத்தின் தலைவரும் அவரே. 

அதீத பனிப் புயலால் வாஷிங்டன் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதால் பரபரப்பின்றி கொஞ்சம் ரிலாக்ஸாக கிளம்பினோம். இந்த பயணத்தில் நாங்கள் அதிக நாள் இருந்த ஊர் செயிண்ட் லூயிஸ். விமான நிலையத்திற்கே நண்பர் சுரேஷுடன் வந்து எங்களை வரவேற்றார் விஜய்.

செயிண்ட் லூயிசும் குளிர் மிகுந்த ஊர்.. மரங்கள் வீடுகள் எல்லாமே ஜகன்மோகினிப் பேய் போல வெள்ளை வெள்ளையாக பனி படர்ந்து நின்றது.. கைகிளவுசிற்குள்ளும் காது மடல்களிலும் வந்து கிச்சு கிச்சு மூட்டியது குளிர். 40 நிமிட பிரயாணத்திற்குப் பின் விஜய் வீடு வந்து சேர்ந்தோம் வந்தவுடன் டைனிங் டேபிளை பார்த்து மலைத்து நின்றோம்.!

சுடச்சுட மதுரை இட்லி, அருமையான மட்டன் குழம்பு சிக்கன் என இரவு உணவு... ஆரம்பமே அசத்தலாக இருந்தது.. அமெரிக்காவில் ஓட்டலை விட வீடுகளில் தங்குவது தான் பெஸ்ட் ஏனெனில் பெரிய விருந்தே காத்திருக்கும் பொருளாளர் வீட்டிலிருந்து சிக்கன் குழம்பு..செயலர் வீட்டிலிருந்து ஃபிஷ்..

இப்படி ஒவ்வொருவரும் ஒரு மெனு செய்து நம் டைனிங் டேபிளை நிறைத்து விடுவார்கள்.. இதை அமெரிக்கா முழுவதும் எல்லா ஊர்களிலும் கண்டோம். நல்ல ஓய்வு சாப்பிடுவது தான் எங்கள் வேலை. நாங்கள் அங்கு போனது திங்கள் இரவு அடுத்த 4 நாட்கள் முறை வைத்து விடுப்பு எடுத்துக் கொண்டு கவனித்தனர்.

அதிலும் விஜய் வீட்டில் விதவிதமாக சமைத்து போட்டு எங்களை கவனித்துக் கொண்டதை மறக்க இயலாது..விஜயின் திருமதி சுமதி மதுரைப் பெண் என்பதால் சமையலில் ஊர்மணம் இருந்தது.. அதிலும் எந்த நேரத்திலும்
கேட்கக் கேட்க ஆப்பாயிலும் முட்டை தோசையும் தங்கு தடையின்றி சப்ளை செய்வார்.. கொஞ்சமும் முகம் சுளிக்கமாட்டார்.

செவ்வாயன்று எங்கும் போகவில்லை விஜய் ஓய்வு எடுக்கச் சொல்லிவிட்டார் நான் ஜெட் லாகில் இருந்து பரிபூரணமாக வெளி வந்து விட்டேன்.. கிறிஸ்டோபர் மட்டும் மதியம் மாலை வேளைகளில் தூங்கிவிட்டு இரவு முழுவதும் கொட்டக்கொட்ட விழித்துக் கிடந்தார். புதன்கிழமை விடிந்தது.

இன்று மெராமெக் என்னும் குகைக்கு நண்பர் கணபதி அழைத்துச் சென்றார் மதுரைக்காரர்.. அருமையான அனுபவம்.. அடுத்த நாள் லிங்கன் நினைவிடம் இதற்கு விஜயே வந்திருந்தார்..ஆபிரகாம் லிங்கனை நேரில் பார்த்த உணர்வு இரவு பஃபல்லோ விங்சில் அருமையான டின்னர் கொடுத்தார்.

அடுத்தநாள் வெள்ளிக்கிழமை ஈரோடு மகேஷ் எங்களுடன் வந்து இணைந்து கொண்டார்.. மதியம் எங்களை மெராமெக் அழைத்துச் சென்ற மதுரைக் காரர் கணபதி சார் வீட்டில் ஒரு சேஞ்சுக்காக சுத்த சைவ விருந்து.. வீட்டில் ஒரு பெரும் சரவணபவனே திறந்திருந்தார் திருமதி கணபதி.

அசைவ உணவு சாப்பிட்டு பீடா சாப்பிடும் உணர்வு வருவது இயல்பு.. சைவ உணவு சாப்பிட்டு பீடா சாப்பிடும் உணர்வு எழுந்தால் சமையல் மிக மிகப் பிரமாதம்ன்னு அர்த்தம். பீடா தேவைப்பட்டது. விடை பெறும் போது சாக்லெட் உள்ளிட்ட சில பரிசுப்பொருட்களை எங்களுக்குஅளித்தனர்.

மறுநாள் நிகழ்ச்சி என்பதால் அன்று இரவு விருந்து தமிழ்ச்சங்கத்தின் குடும்பத்தினரோடு ஏற்பாடு.. அதுவும் களை கட்டியது. மறுநாள் மாலை நிகழ்ச்சி விழா அரங்கிற்கு சென்றோம்.. 600 பேர் அமரும் அரங்கு நிரம்பி வழிந்தது.. குழந்தைகள் கலை நிகழ்ச்சிக்குபிறகு எங்கள் நிகழ்ச்சி.

டெட் ராய்ட்டில் கிறிஸ்டோபர், நான் சசி மூவரும் மட்டும் தான் நிகழ்ச்சி செய்தோம்...இம்முறை ஈரோடு மகேஷ் இணைந்து கொண்டதால் நிகழ்ச்சி இன்னும் மெருகேறியது அரங்கம் அதிர கைத்தட்டல்கள் ஒலிக்க, அலை அலையாய் சிரிப்பொலி எழுந்த வண்ணம் இருந்தது.

தமிழ்ச்சங்கத்துடன் அய்யா அப்துல் கலாம் நினைவு அமைப்பும் ஒரு அங்கமாக இருந்து சென்னை வெள்ள நிவாரணத்திற்கு  நிதி திரட்டப் பட்டது. எங்களுக்கு நினைவுப்பரிசும் பொன்னாடைகளும் வழங்கி கவுரவித்தனர்.. அடுத்த நாள் அலபாமாவில் நிகழ்ச்சி அதிகாலைப் பயணம் என்பதால் விரைந்து கொண்டிருந்தோம்.

நண்பர் விஜய் பெருமிதத்துடன் நிற்க அங்கிருந்த  முன்னாள் தலைவர் பாண்டியன், சுரேஷ், கார்த்திக், புவனா, உள்ளிட்ட தமிழ்ச்சங்க நிர்வாகிகள் அனைவரும் எங்களை வாழ்த்து மழையில் நனைத்துக் கொண்டிருந்தனர்.. எங்களுக்கு நண்பர் விஜய்யின் அபார உழைப்பு அப்படியே பற்பல மாண்டாஜ் காட்சியாக கண் முன் விரிந்தது.

நான்கு மாதத்திற்கு முன் போனில் எங்களை அழைத்தது, யார் யார் அங்கு வரவேண்டும் என தேர்வு செய்தது, நிகழ்ச்சி தேதிகளை முடிவு செய்தது, மற்ற தமிழ்ச்சங்கங்களை ஒன்றிணைத்தது, எங்களுக்கு விசா அப்ளை செய்து விசா கிடைத்ததும் மகிழ்ந்தது, பயண ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தது எங்களுக்கு போதிய தகவல்கள் தந்தது...

பயணத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து வரச்சொன்னது.. குளிர் பற்றி கூறி தற்காப்பு உடைகள் அணியச் சொன்னது, பயண விவரங்களை எல்லா விமான டிக்கெட்டுகளை முறையாக புத்தகம் போல கொடுத்தது, எங்களது அதிக லக்கேஜ் பெட்டிகளுக்கு கட்டணம் கட்டியது, முக்கியமாக எங்கள் லூசுத்தனங்களை சகித்தது. 

அப்பப்பா இத்தனையும் இந்த ஒரு மனிதர் தான் ஏற்பாடு.. அந்த உழைப்பிற்கு பலன் கிடைத்த மகிழ்ச்சியும் அவர் முகத்தில் பிரதிபலித்தது. நாங்கள் அவரிடம் விடை பெறும் போது சொன்னார் நான் அடுத்த நிகழ்ச்சிக்கு விஸ்கான்சின் வருவேன் அப்போ விடை பெற்றுக் கொள்ளலாம் என எங்களை அன்போடு அணைத்து விடை தந்தார்.

அவர் முகத்தில் மிசெளரி நிகழ்ச்சி வெற்றிக் களிப்பும் அடுத்த ஊர் நிகழ்ச்சிகளும் இதே போல அமையவேண்டுமே என ஒரு எதிர்பார்ப்பும் கலவையாக தெரிந்தது.. ஆனால் அவர் நினைத்தபடியே அது அடுத்தடுத்து நிறைவேறியது.. எங்கள் அமெரிக்கப் பயணத்தில் மிசெளரியில் (செயின்ட் லூயிஸ்)சொந்தமானது மீண்டும் ஒரு வெற்றி. 

No comments:

Post a Comment