Sunday 28 February 2016

ஃப்ரிஸ்கோ சென்னை கஃபே...

இந்த அமெரிக்க பயணத்தில் கிட்டத்தட்ட 12 மாநிலங்களில் கால் பதித்துவிட்டோம்.. எந்த மாநிலத்திலும் இல்லாத அனுபவம் டெக்ஸாஸ் மாநிலத்தில்..! அமெரிக்காவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் ஒன்றான இங்கு இரட்டை நகரங்கள்.. டாலஸ் மற்றும் ஃபோர்ட்வொர்த் இந்த இரட்டை நகரில் கெளபாயின் பேரல் கன்னின் இரட்டைக் குழல் போல செயல்பட்டு வருகிறது சென்னை கஃபே மற்றும் மால்குடி ரெஸ்ட்டாரெண்டுகள்.. அமெரிக்காவின் பிற மாநிலங்களில் ஏதாவது ஒரு இந்திய உணவுக்கடை தான் பிரபலமாக இருக்கும்.. ஆனால் டாலஸில் அப்படி இல்லை. இங்கு ஏற்கனவே மதுரை தட்டுக்கடை பற்றி எழுதியிருந்தேன்.

ஆனால் சென்னை கஃபே போன பின்பு தான் டாலசில் ஆரம்பிக்கப்பட்ட  முதல் தமிழக உணவகம் இது என அறிந்து கொண்டேன். 2011 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு இன்று ஃபிரான்ச்சைஸ் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது சென்னை கஃபே.. இவர்களின் இன்னொரு கடை தான் ப்யூர் வெஜ் ரெஸ்ட்டாரண்ட் ஆன மால்குடி கார்டன்.. ஈரோடு மகேஷுக்காக ஒரு வேளை அசைவம் துறக்க முடிவெடுத்தோம்.. Tennyson Pkwy அருகே Plano என்னுமிடத்தில் இருந்தது.. மால்குடி கார்டன்.. இங்கு தான் முதலில் அசைவம்/ சைவம் இரண்டுமுள்ள சென்னை கஃபே துவங்கியதாம்.. ஜஸ்ட் லைக் தட் என அசுவாரஸ்யமாக கடையில் நுழைந்து படு அலட்சியமாக அங்குள்ள பஃபே கவுன்ட்டரை நோட்டமிட்டோம்.

கைக்குத்தல் அரிசி காய்கறி சாதம், வெஜ் புலாவ், கம்பங்கூழ், பருப்புருண்டைக் குழம்பு, பீன்ஸ் பொரியல், நவதானியங்களில் செய்த பனீர் கூட்டு, மிளகு ரசம், கேட்டால் நம்ம ஊரு வெள்ளைச் சோறு, பழங்கள் மற்றும் குதிரை வாலி அரிசி பாயாசம்.. இது தான் மெனு.. போதாத குறைக்கு விருந்தினரான எங்களுக்கு மசால் தோசையும் பூரியும் செய்து தருவதாக சொன்னார்கள். தீவிர அசைவர்களாக சசியும் கிறிஸ்டோபரும் அம்மாவை கண்ட அமைச்சர்கள் போல கொஞ்சம் வெள்ளை சாதம் ரசம் அப்பளத்துடன் ஓரு டேபிளில் பதுங்கிக் கொண்டார்கள்.. எதையும் தாங்கும் இதயமும் இன்னும் வீங்கும் உறுதியும் உள்ள நான் களத்தில் இறங்கினேன்.. முதலில் அந்த கைக்குத்தல் அரிசி காய்கறி சாதம்.. வாவ் சூப்பரோ சூப்பர்.

சைவ பிரியாணி போல அமர்க்களம்.. புலாவும் மிகுந்த சுவை.. கம்பங்கூழை தவிர்த்திட பார்த்தேன்.. நாகரீகம் கருதி சின்ன கப்பில் இரு ஸ்பூன் அளவு எடுத்து வந்தேன்.. ஆனால் 10 நிமிடத்திற்கு பின் யாரைப் பற்றியும் கருதாதுஅநாகரிகமாக டம்ளர் டம்ளராக மொண்டு குடித்தேன்.. தயிருடன் கலந்து அலாதி சுவையில் இருந்தது.. பிறகு பருப்பு உருண்டைக் குழம்பு வத்தக் குழம்பு போல அட்டகாசப் படுத்தியது. ரசம் மிகப்பிரமாதம்.. ஓரங்கட்டி மறைந்த சசியும் கிறிஸ்டோவும் அவர்களை விட அதி தீவிர அசைவனான நான் என்ன செய்கிறேன் என என்னைப் பார்க்க வந்தார்கள்.. மேசையில்  நான் சைவ ராஜ்கிரண் போல சாப்பிட்ட ஸ்டைலை கண்டு சிலையாகினர்.. அந்த உணவின் அருமை பெருமைகளை ஏப்பப் பின்னணி இசையுடன் அவர்களுக்கு நான் சொல்ல.. அடுத்த சில நிமிடங்களில் அந்தக் கடை இன்னும் இரண்டு ராஜ்கிரண்களை பார்த்தது..

கம்பன் இருந்திருந்தால் "வெங்கியுடன் மூவரானோம்" எனப் பாடியிருக்கலாம். கடைசியாக குதிரைவாலி பாயாசம் சாப்பிட்டு குதிரை சக்தியுடன் சுற்றப்போனோம்.. அன்று இரவு ஃப்ரிஸ்கோ என்னுமிடத்தில் இருக்கும் சென்னை கஃபே போக வேண்டும் என்றார்கள்.. பெரிய கடை.. வாசலிலேயே பூச்செண்டு தந்து வரவேற்றார்கள்... முதலில் ஓட்டலைச் சுற்றிக் காட்டினார்கள். அவர்களது சமையலறைக்கு போனோம்...
பெரிய கடை, சுகாதாரமான சூழல், ஹை டெக் இயந்திரங்கள் நாசியைத் துளைக்கும் உணவுகளின் வாசனை.. உடனே சாப்பிடும் ஆவலை அடக்கிக் கொண்டு மெல்ல அங்கிருந்து அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த உணவக அரங்கில் வந்து அமர்ந்தோம்..  விருந்துக்கு ஒவ்வொரு தமிழ்க் குடும்பமாக வந்து சேர.. சரியாக இரவு 8 மணிக்கு துவங்கியது அந்த பிரசித்தி பெற்ற டின்னர்.. எங்களது நீளமான டேபிளை ஒரு ஃபேஷன் ஷோ ரேம்ப்பாக (Ramp)கற்பனை செய்து கொள்ளுங்கள்..

அந்த மேடையில் மட்டன், சிக்கன், ஃபிஷ், முட்டை போன்ற பல அழகிகள் ஒய்யாரமாக பலப்பல கெட்டப்புகளில் வந்து நாக்கு சப்புக்கொட்ட எங்கள் வயிற்றுக்குள் போனார்கள்.. கொத்து பரோட்டா சிக்கன், நெத்திலி மீன் ஃப்ரை, மட்டன் சுக்கா, எல்லாமே டாப்.. நிச்சயம் இரண்டொரு வெள்ளைக் காரர்கள் அங்கு இல்லாவிட்டால் நம்ம ஊரு தான் என நம்பியிருப்போம்.. சுவை அப்படியே அள்ளியது. இவர்கள் இன்னொரு கடை ஃபிரான்ச்சைஸ் கொடுத்தது எப்படி என்பதை இவர்களின் தரமும் ருசியும் சொன்னது.. அநேகமாக அடுத்த சில வருடங்களில் அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கிளை துவக்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை.. இவ்வளவு ஏன்? பாஸ் நீங்க ஏன் நம்ம சென்னையிலேயே ஒரு பத்து பிரான்ச் போடக்கூடாது.. சத்தியமா அந்தத் தகுதி சென்னை கஃபேவுக்கு இருக்கு.!

சென்னை கஃபேயில் சாப்பிடும் அனைவருக்கும் "அறுசுவையின் அனுபவம்" உத்திரவாதம்.. வாழ்த்துகள் இதன் உரிமையாளர்களுக்கும் இங்கு அழைத்துச் சென்ற நண்பர்களுக்கும் 

No comments:

Post a Comment