Sunday 28 February 2016

விஸ்கான்சின் - மேடிசன்..

#விஸ்கான்சினிலும்_வெற்றி

முதலில் விஸ்கான்சின் தமிழ்ச்சங்கத்திற்கு நன்றி.. ஏனெனில் இச் சங்கம் துவங்கி நீண்ண்ண்ண்ட இடைவேளைக்குப் பின் இவர்கள் ஏற்பாடு செய்த முதல் நிகழ்ச்சியே எங்கள் நிகழ்ச்சி தான். அதனால் எங்களுக்கு பொறுப்பு கொஞ்சம் கூடுதல்..ஏனெனில் மற்ற இடங்களில் நிகழ்ச்சி செய்வதை விட இங்கு சூப்பர் டூப்பராக ஹிட் தர வேண்டும்.. இவங்க ஏற்பாடு செஞ்சா அந்த நிகழ்ச்சி நன்றாக இருக்கும்.. நம்பி குடும்பத்துடன் போகலாம்.

அப்படி நினைக்க வைக்கும்படி நிகழ்ச்சி இருக்கவேண்டும். அப்போது தான் இவர்கள் அடுத்து வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் போது உறுப்பினர்கள் நம்பி வருவார்கள். இங்கு நாங்கள் கட்டாயம் 100 மதிப்பெண்கள் பெறவேண்டிய மாணவன் நிலையில் இருந்தோம்..அப்ப கோச்சிங் தரமாக வேண்டும் அல்லவா! அந்த பணியை நண்பர் இளங்கோ எடுத்துக் கொண்டார். தினசரி எங்களுக்கு அலாரம் அவரது அழைப்பு தான்.

அமெரிக்கா கிளம்புவதற்கு 1 மாதத்திற்கு முன் பேச ஆரம்பித்தவர் தொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பார் அமெரிக்க பயணம் முழுவதும் எங்களுடன் அதிகம் பேசியவர் இளங்கோ மட்டுமே.. நண்பர் சசி கூட "எங்கள் மனைவி பிள்ளைகளிடம் கூட நாங்கள் இவ்வளவு நேரம் பேசியதில்லை என்பார் வேடிக்கையாக.. ஆனால் இளங்கோவிடம்  ஒரு நல்ல குணம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய அருமையான குணம்.

அவர் ஊர் நிகழ்ச்சி என்றில்லாமல் எல்லா ஊர் நிகழ்ச்சிக்கும் எங்களை ஊக்குவித்தார். அது எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. எவ்வளவு கடின உழைப்பில் அவர்கள் ஊர் தமிழ்ச்சங்கம் உருவானது, நாங்கள் எப்படி நிகழ்ச்சி தரவேண்டும் எங்களிடம் அவர்களது எதிர்பார்ப்பு என்ன..? இந்த எல்லா விஷயங்களையும் சொல்லி எங்களை தயார் படுத்தி இருந்தார். இந்த பயணத்தில் சாலைவழியாக பயணித்துச் சென்று நிகழ்ச்சி செய்த ஒரே ஊர் விஸ்கான்சின் தான்..அங்குள்ள மேடிசன் நகரில் எங்கள் நிகழ்ச்சி.

பயணத்திற்கு முன் இந்த பனி பற்றி.. சிகாகோ பனி, டெட்ராய்ட் பனி, மிசவுரி பனி, இதெல்லாம் எலந்தப்பழம் ஆனா பெரிய அன்னாசிப்பழம் மின்னசோட்டா பனி என்றார்கள்.. இது நான்கும் போய் பார்த்து அனுபவித்து விட்டோம்... இப்போ விஸ்கான்சின் பனி என்ன பெருசா இருக்கப் போகுது என நினைத்து கிளம்பினோம்.. எங்களுக்கு பலாப்பழம் காத்திருப்பது தெரியாமல்.. அதிகாலைப் பயணம் காரில் மினியாபொலிஸ் நகரிலிருந்து..

ஏனெனில் முதல் நாள் மினியாபொலிஸ் நகரில் எங்கள் நிகழ்ச்சி அது முடிந்து வந்து உறங்கவே 1 மணி ஆகிவிட்டது வெறும் 4 மணிநேர ஓய்வு தான்.. அடுத்த நாள் மதியம் 2 மணிக்கு விஸ்கான்சின் நிகழ்ச்சி அலாரம் வைத்து எழவேண்டிய அவசியமில்லை அதுதான் இளங்கோ இருக்கிறாரே. மிகச்சரியாக அதிகாலை 4:30க்கு எழுப்பி விட்டார். பரபரவென தயாரானோம் அந்தப் பனியில் அதிகாலை குளிக்க நடுங்கி கிளம்பினோம்.

மின்னசோட்டா தமிழ்ச்சங்கத்தை சேர்ந்த சிவானந்தம் சார் கார் ஓட்ட மற்ற நண்பர்கள் சுந்தரமூர்த்தி, சச்சிதானந்தம் எங்களுடன் இணைந்து கொள்ள கார் கிளம்பியது. அங்கிருந்து 300 மைல் தூரம்.. கிட்டத்தட்ட சென்னை - மதுரை தூரம் 5 மணிநேரப் பிரயாணம்.. குளிர் என்றால் அப்படி ஒரு குளிர்.. இடையில் மழை கூட பெய்தது பனிக் காலத்தில் நல்ல வெயில் அடித்தால் அது பேட் வெதர் என்கிறார்கள். நல்ல வெயிலுக்கு பின் குளிர் ஏறுமாம்.

காருக்கு வெளியே மைனஸ் 7 முதல் 10 வரை குளிர் அடுத்த 3 நாட்களுக்கு மைனஸ் 3 என்றது வானிலை அறிக்கை.. அலட்சியமாகத்தான் போனோம் ஆனால் அது மைனஸ் 18 வரை போனது. கார் நேராக விஸ்கான்சின் சங்கத்தலைவர் மனோ வீட்டிற்கு சென்றது.. பிரம்மாண்டமான புத்தம் புதிய அழகான வீடு.. சகல வசதிகளும் நிறைந்த அவ்வீட்டில் எதாவது குறை இருக்கா குறை இருந்தா சொல்லுங்கன்னு எங்களிடம் மனோ கேட்டார். 

அவர் எங்க கிட்ட அப்படி கேட்டது தான் குறையாக இருந்ததே ஒழிய வேறு எதுவும் குறை இல்லை.. அங்கு அருமையானதொரு குளியல் போட்டு புத்துணர்வுடன் தயாராகி அடுத்த அரைமணியில் புரவலர் டாக்டர் பாலச்சந்திரன் வீட்டிற்கு கிளம்பினோம்அவர் அங்கு 40 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர். அவரது வீட்டில் தான் உணவு.. அற்புதமான தமிழக சைவ அசைவ உணவுகளுடன் ஒரு பஃபே விருந்து ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

ஒரு பிடி பிடித்தோம் வயிறு நிறைந்தது.. கிளம்பும் போது எல்லாருக்கும் ஒரு நினைவு பரிசு அளித்தார்.. இந்த இடத்தில் ஒன்று இந்த பயணத்தில் மக்கள் அதிகம் எங்களுக்கு பரிசளித்தது மேடிசனில் தான்.. அந்தக் கைராசி டாக்டர் பாலச்சந்திரனுடையது என்பதை பின்னர் தெரிந்து கொண்டோம். அங்கிருந்து விழா நடைபெறும் அரங்கிற்கு புறப்பட்டோம். நேரடியாக எங்கள் நிகழ்ச்சி தான் மதியம் 2:30 க்கு ஆரம்பித்தது நிகழ்ச்சி.

சசியின் பளீர் சிரிப்பு வெடிகள், கிறிஸ்டோபரின் கலாய்ப்பு, ஈரோடு மகேஷின் கலகலப்பு, இவை அப்படியே ஜிவ்வென்று நிகழ்ச்சியை மேலே தூக்கி செல்ல வழக்கம் போல எனது பணியும் அதில் எளிதானது.. ஆனால் இளங்கோ மட்டும் பிரசவ வார்டுக்கு வெளியே நிற்கும் கணவன் போல பரபரப்பாக அலைந்து கொண்டே இருந்தார்..அவ்வப்போது வந்து நிகழ்ச்சி அடடா சூப்பர், பிரமாதம், அருமை என எங்களை பாராட்டி விட்டும் செல்வார்.

மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி முடிவில் எங்களுக்கு நினைவுப்பரிசும் பொன்னாடையும் அணிவித்து கவுரவித்தார்கள்.. நடிகர் சத்யராஜ் அவர்களின் உடன் பிறந்த தங்கையான ரூபா மேடம் இங்கு தான் வசிக்கிறார்கள்.. அனைவரின் பாராட்டு மழையிலும் நனைந்தோம். இப்படி ஒரு நல்ல நிகழ்ச்சியை பார்த்து வெகு நாளாகிறது என பலர் சொல்ல மனோ ஸார் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளின் முகத்திலும் பெருமிதம்.

அதன்பின் இரண்டு நாட்கள் அங்கே தங்கி சுற்றிப்பார்த்து விட்டு பலர் அளித்த பரிசுப் பொருட்களை சுமந்து கொண்டு இருந்தபோது மீண்டும் டாக்டர் பாலச்சந்திரன் வந்து குளிர் தாங்கும் நீளக் கோட்டுகளை மயிலுக்கு போர்வை தந்த பேகன் போல தந்துவிட்டு போனார்.. மனோ அவர்கள் கிப்ஃட் பர்ச்சேஸ் கார்டுகளை பரிசு வழங்கினார்.. திருவாரூர் புதுமணத் தம்பதியர் சாக்லேட் பரிசளித்தனர்.. திக்குமுக்காடி கிளம்பினோம்.

மீண்டும் மின்னசோட்டா பயணம் இளங்கோ தான் எங்களைக் காரில் அழைத்து போக வேண்டும்.. கிளம்பினோம்.. மீண்டும் 5 மணிநேரப் பயணம். மனம் நிறைய மகிழ்வுடன் பேசிக்கொண்டு வந்தார் இளங்கோ.. அடடா ஒன்று சொல்ல மறந்து விட்டேன் அன்னைக்கு நிகழ்ச்சியன்று முடிவில் எங்கள் நிகழ்ச்சி எப்படி இருந்தது என சசி மேடையில் இருந்து கேட்க அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடம் இடைவிடாது கைத்தட்டினர்.. 

எங்களுக்கு ஆனந்தத்தில் கண்ணீர் மல்கியது மெல்ல அதை யாரும் அறியாதபடி துடைத்துக் கொண்டோம்.அப்போது இன்னொருவரும் யாரும் அறியாதபடி கண்களைத் துடைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தோம். அது இளங்கோ தான் என நாங்கள் சொல்லவும் வேண்டுமா.. விஸ்கான்சின் வெற்றிக்கு காரணம் நாங்கள் மட்டுமல்ல தலைவர் மனோ, டாக்டர் பாலச்சந்திரன், தேசிகன், கார்னிலியஸ் இவர்கள் அனைவருமே இந்த வெற்றிக்கு காரணமானவர்கள். 

இன்னும் பல வெற்றிகளை அவர்கள் பெற்று இடையறாத தமிழ்ப்பணிகள் பல ஆற்றி சிறக்க எங்கள் குழு சார்பில் மனதார வாழ்த்துகிறோம். வாழ்க தமிழ்..!

No comments:

Post a Comment