Sunday 28 February 2016

கலிஃபோர்னியா - சாக்ரமெண்டோ..

#கலிஃபோர்னியக்_களிப்பு

டாலஸ் நகரில் பிரியா விடை பெற்றுக்கொண்டு கலிஃபோர்னியா கிளம்பினோம்.. அதாவது பரபர ஞாயிறு நிகழ்ச்சி..அங்கு மதியம் 2 மணிக்கு எங்கள் ஷோ.. இந்தப் பயணத்திலேயே இது தான் உள் நாட்டில் பயணித்த நீண்ட விமானப்பயணம் கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் சென்னையில் இருந்து குவைத் போகும் அதே கால அளவு.. காலை 10மணிக்கு விமானம் நாங்கள் போவதற்கே மதியம் 2மணிஆகிவிடும்.. பிறகு எப்படி.?

இந்த இடத்தில் அமெரிக்காவின் ஐந்து நேர மண்டலங்கள் நினைவுக்கு வந்தது.. கலிஃபோர்னியாவில் பசிபிக் நேரம்.! டெக்ஸாஸ் நேரத்துக்கும் அதற்கும் 2 மணிநேர வித்தியாசம் அதாவது நாங்கள் அங்கு இறங்கும் போது அந்த ஊரில் மணி 12 என்றார்கள்.. விமானத்தில் நன்கு உறங்கினோம். கலிஃபோர்னியாவின் சாக்ரமெண்டோ நகரில் எங்கள் நிகழ்ச்சி. நண்பர் சுஃபி என்கிற சுப்பையா விமான நிலையம் வந்திருந்தார்.

இரண்டுமணி நேரத்தில் சாப்பிட்டு குளித்து கிளம்ப வேண்டும் என்பதால் முதலில் குளியல் பிறகு சாப்பாடு என முடிவெடுத்து விமான நிலையத்தில் இருந்து கிளம்பினோம்.. நீண்ட அந்த பயணத்தில் எங்கள் பசி வென்றிட கார் ஓட்டல் மயிலாப்பூரில் நின்றது.. அருமையான ஒரு சைவச் சாப்பாடு.. மேங்கோ லஸ்ஸி சாப்பிட்டு கிளம்பினோம்... இங்கும் க்ளைமேட் மிக அருமை லேசான ஈரக்காற்றுடன் ஊரே ஏ.சி.போட்டது போல இருந்தது.

நாங்கள் சுஃபி சார் வீட்டுக்கு போனது குளித்து உடை மாற்றிக் கிளம்பியது இதெல்லாம் ஃபார்வேர்டு செய்தது போல வேக வேகமான சினிமா காட்சி போல கற்பனை செய்து கொள்ளுங்கள். காரில் இப்போது விழா நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டோம் ஃபார்வேர்டு ஸ்டாப்... அந்த அரங்கம் ஒரு அழகிய சர்ச்சின் ஆடிட்டோரியம்.. சாக்ரமெண்டோ சிறிய ஊர் நமது மக்கள்  300 பேர் வந்திருந்தனர். சரியாக நிகழ்ச்சி 2:30 மணிக்கு துவங்கியது.

எங்கள் முதல் அமெரிக்கப் பயணத்தின் கடைசி நிகழ்ச்சி இது. இதையும் வெற்றிகரமாக முடித்தால் நூற்றுக்கு நூறு வெற்றி வசமாகும்.. இறைவனை பிரார்த்தித்த படியே நிகழ்ச்சியை ஆரம்பித்தோம்.. இறைவன் எங்களை கை விடவில்லை.. அவன் சாக்ரமெண்டா மக்களாக மாறி எங்களுக்கு அருள் பாலித்தான்.. நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து ஒரே கைத்தட்டல் அள்ளியது. அருமையான ரசிகர்கள் எங்களுக்கே நேரம் போனது தெரியவில்லை.

நினைவுப்பரிசு பொன்னாடை சம்பிரதாயங்களுக்கு பிறகு இந்த நூற்றாண்டின் தவிர்க்க முடியாத சம்பிரதாயமான போட்டோ மற்றும் செல்ஃபி சம்பிரதாயங்கள் தொடங்கி நீண்டன. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த சாக்ரமெண்டோ தலைவர் மார்க் என்கிற மாணிக்கவேல் சுஃபி சுரேஷ் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் எங்கள் கைகளைப் பிடித்து குலுக்கி ஆரத்தழுவி பாராட்டினர்.எல்லார் முகங்களிலும் மகிழ்ச்சி..!

அதுதானே வேண்டும். மறு நாள் சுஃபியின் துணைவியார் அர்ச்சனா கை வண்ண சமையலை ஒரு பிடி பிடித்துவிட்டு அவர் பிக்னிக் பேகில் பேக் செய்து தந்த லெமன் சாதம்,  தயிர் சாதம், உருளைக்கிழங்கு காரக்கறி, சிப்ஸ் ஊறுகாய் அப்பளம் உள்ளிட்ட சைடு டிஷ்கள் வாட்டர் பாட்டில்கள் சகிதம் சான்பிரான்சிஸ்கோ நகரத்தை சுற்றிப்பார்க்கக் கிளம்பினோம். உலகப்புகழ் பெற்ற கோல்டன் பிரிட்ஜில் நின்றது எங்கள் கார்.

ஏற்ற இறக்கங்கள் மிகுந்த சான்பிரான்சிஸ்கோ நகரம் மிக மிக அழகு. வாழ்வின் மேடு பள்ளங்கள் போல சரேல் சரேலென ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. படகுத்துறை ஃபேஸ்புக் தலைமையகம் எல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டு.. மாலை 6 மணிக்கு சாக்ரமெண்டோ வந்து ஓய்வு எடுத்தோம். மறுநாள் காலை இந்தியா புறப்பட்டோம் சுஃபி வழியனுப்பினார் விமான நிலையத்தில் பார்ப்பதெல்லாம் எங்களுக்கு மங்கலாக தெரிந்தது.!

ஆம் எங்கள் விழிகளில் நீர்த் திரையிட்டு இருந்தது.. 28 நாட்கள் இந்தப் பயணம் மின்னல் வேகத்தில் தொடங்கியதும் முடிந்ததும் தெரியவில்லை.. விமான நிலையத்திலிருந்து எல்லா தமிழ்ச்சங்கத் தலைவர்களிடமும் போனில் பேசி பிரியா விடை பெற்றுக்கொண்டு.. நூறு சதவீத வெற்றியுடன் எங்கள் முதல் அமெரிக்க பயணத்தை நிறைவு செய்தோம்..எங்கள் பயணக் களைப்பையும் மீறி ஒரு வெற்றிக் களிப்பு எங்கள் முகங்களில் தெரிந்தது...

ஆம் இது கலிஃபோர்னியக் களிப்பு..!

No comments:

Post a Comment