Sunday 28 February 2016

அலபாமா - பர்மிங்காம்..

#அலபாமாவில்_அசத்தல்_வெற்றி

மிசெளரியில் இருந்து அட்லான்டா போய் அங்கிருந்து அலபாமாவில் உள்ள பர்மிங்காம் நகரில் எங்கள் நிகழ்ச்சி.. இரண்டு விமானங்கள் மாற வேண்டும் இந்த பயணத்தில் மிகச்சவாலாக இருந்தது ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சிகள் தான் ஏனெனில் சனிக்கிழமை நிகழ்ச்சி முடிந்த மறு நாளே கிளம்பணும். உதாரணமாக முதல் நாள் மதுரை அடுத்த நாள் அங்கிருந்து சென்னை இது போல இருக்கும். சில நேரம் சென்னை to குவைத் தூரமும் இருக்கும்.

போய் இறங்கியவுடன் பரபரப்பாக தயாராகி மின்னல் வேகத்தில் நிகழ்ச்சி செய்ய வேண்டும் பழகிவிட்டிருந்தது பர்மிங்காம் போய் இறங்கியதும் அன்பே வா எம்.ஜி.ஆர் போல ஆடத்தோன்றியது.. கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பிறகு பனியே இல்லாது கொடைக்கானல் குளிரில் ஒரு ஊர்.. முதலில் ஜெர்கின் கையுறைகளை கழட்டி எறிந்ததிலேயே பாதி களைப்பு ஓடி விட்டது.. மதுரையின் மைந்தன் அன்பு அண்ணன் சாம்பியன் எங்களை வரவேற்றார்.

சாம்பியன் அண்ணன் கிறிஸ்டோபரின் உறவினர் இந்தியா வந்தபோது எல்லாம் அவரைப் பலமுறை சந்தித்திருக்கிறேன். ஆனால் எங்கள் முகத்து களைப்பு பார்த்து அவர் அதிர்ந்து போனார்.. என்னங்கடா இப்படி டயர்டாகி வந்து நிக்குறிங்க.? நிகழ்ச்சி பண்ணிடுவிங்களா என்றார் அக்கறையுடன். நாங்கள் அங்கு போய் இறங்கியது காலை 11:30 க்கு நிகழ்ச்சி மதியம் 2 மணிக்கு.. பண்ணிடுவோம் அண்ணே என்றோம்.. சரி வாங்கடான்னாரு.

காரில் சுகமான பயணம் பர்மிங்காம் நகரம் சுற்றிலும் மலை சூழ்ந்த நகரம் அப்படியே கொடைக்கானல் ஃபீலிங் அமைதியான ஊரும் கூட ஆண்டு முழுவதும் வெயிலோ பனியோ எப்போதும் கடுமையாக இல்லாத ஒரு தட்பவெப்பம் கொண்ட ஊர்.. தமிழர்கள் 60 குடும்பங்கள் இருக்கிறார்கள். அண்ணன் வீட்டில் அண்ணி வரவேற்றார்கள் அவர்களையும் முன்பே தெரியும் பரபரவென குளித்துவிட்டு வந்தால் மீன் குழம்பு சிக்கன் ரசம் தயிர் மோர்க்குழம்பு என அருமையான மதுரைச் சாப்பாடு.

வயிறார சாப்பிட்டதும் தூக்கம் கண்ணை கட்டியது.. அலறிப் புடைத்து குளிர்ந்த நீரில் மீண்டும் ஒரு முறை முகம் கழுவிக் கொண்டு நிகழ்ச்சி நடக்கும் லைப்ரரி அரங்கிற்கு கிளம்பினோம். 60 குடும்பங்கள் தான் மிகச்சிறிய கூட்டம் நாங்கள் போனதும் நிகழ்ச்சி துவங்கியது சில குடும்பங்கள் 180 கி.மீ தூரத்திலிருந்து வேறு வந்து சேர்ந்தனர்.. அவர்கள் வந்த பின்பு சரியாக மதியம் 2:30 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பித்தது.

மற்ற ஊருக்கும் இங்கும் ஒரு வித்யாசம் சிறிய அரங்கம் என்பதால் கிட்டத் தட்ட பார்வையாளர்கள் அருகில் நின்றபடி தான் நிகழ்ச்சி நடந்தது.. அற்புதமான ரசிகர்கள் அவர்கள் ரசிப்புத் தன்மை அபாரமாக இருந்ததால் எங்கள் வேலை சுளுவானது.. இந்த ஊரிலும் ஈரோடு மகேஷ் எங்களுடன் வரவில்லை.. 3 மணிநேரம் கல கலவென முடிந்தது.. சாக்லெட் பொக்கே என்னும் இனிப்பும் கொத்தும் நினைவுப் பரிசும் வழங்கினார்கள்.

பிறகு அனைவரும் எங்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். வெகு விரைவில் வீடு திரும்பி ஓய்வெடுத்தோம்.மறுநாள் அலபாமா பல்கலைக் கழகம் சிட்டியிலுள்ள மால் எல்லாம் பார்த்துவிட்டு.. இந்திய ரெஸ்டாரெண்ட்  ஒன்றில் மதிய உணவு.. அன்றிரவு நண்பர் சார்ல்ஸ் வீட்டில் தமிழ்ச்சங்கத்தினர் ஒன்று கூடி ஒரு மெகா விருந்து என பர்மிங்காமில் ஒரே விருந்து மழை. ஊர் திரும்பும் கடைசி நாள் சாம்பியன் அண்ணன் வீட்டில் விருந்து.

அன்றிரவு அது இசை விருந்தானது.. அண்ணனும் சார்லசும் அருமையாக கிடார் வாசிக்க நான் கிறிஸ்டோபர் பர்மிங்காம் சங்கத் தலைவர் சதீஷ் முதலானவர்கள் இளையராஜாவின் எண்பதுகளின் ஹிட் பாடல்களை பாடி மகிழ்ந்தோம்.. நல்ல இசை அறுசுவை என நாவும் மனதும் நிரம்பியது. பர்மிங்காமில் நாங்கள் கண்ட ஒரு விஷயம் அங்கிருக்கும் 60 தமிழ்க் குடும்பங்களும் அவ்வளவு அந்நியோன்யமாக இருக்கிறார்கள்.

நல்ல தகவல் தொடர்பு.. குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் நன்கு தெரிந்து ஒரு யூனிட்டியாக வாழ்கிறார்கள் சிறிய அளவு மக்கள் வசிப்பதால் தான் இது சாத்தியம் என்றாலும் இப்படி அவர்கள் ஒன்று பட்டு வாழ்வது கொஞ்சம் பொறாமையாக இருந்தது.. ஆகவே இதைப் படித்து விட்டு ஒருமுறை அவர்களுக்கு திருஷ்டி சுத்திப் போடச்சொல்லுங்கள். இங்கு சாம்பியன் அண்ணன் பற்றி ஒன்று சொல்ல வேண்டும்.

அமெரிக்கா நாங்கள் வருகிறோம் என்றதும்.. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விஜய் மணிவேலிடம் பேசி நாங்கள் இருக்கும் செயின்ட்லூயிசில் இருந்து அவர் சொந்த செலவில் விமான டிக்கெட் எடுத்துத்தந்து அழைத்தார். அவர் நினைத்திருந்தால் அவர் உறவினரான கிறிஸ்டோபரை மட்டும் கூட அழைத்து இருக்கலாம்.. அதுபற்றி கவலைப்படாது மனதாரச் செலவு செய்தார். மேலும் அண்ணி அவர்களும் அங்கு பெரிய பதவியில் பணிபுரிகிறார்கள்.

எங்களுக்காக 2 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு பிள்ளைகள் போல எங்களை கவனித்து சமைத்துப் போட்டார்கள்.. அதுமட்டுமின்றி அண்ணன் பல பாடங்களை எனக்குச் சொல்லித்தந்தார்.. நான் செய்த பல தவறுகளை அழகாக சுட்டிக்காட்டி அதை திருத்திக்கொள்ளவும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க மக்களின் குணநலன்கள் என்ன என்பது பற்றியும் அழகாக ஒரு பாடம் போல நடத்தி அதன்படி நடக்கச் சொன்னார். 

அது எனக்கு அடுத்த ஊர்களில் பேருதவியாக இருந்தது. அதன் பிறகு அவ்வாறான தவறுகள் நடக்கவே இல்லை.. இனி எப்போது அமெரிக்கா வந்தாலும் அப்படியே நடந்து கொள்வேன் தேங்ஸ் அண்ணே.. உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. அண்ணன் எங்களை விமான நிலையத்தில் ஏற்றிவிட்டுவிட்டு பிரிய மனமின்றி கண்கலங்கினார். எங்களுக்கு இப்பயணத்தில் இது ஹாட்ரிக் வெற்றி... நாங்களும் கண் கலங்கியபடியே விடை பெற்றோம். பை பை பர்மிங்காம்..!

No comments:

Post a Comment