Tuesday 17 December 2013

திருப்பாவை - 2

மார்கழி 20 ஆம் நாள் பாடல்....

பாடலுக்குள் செல்வதற்கு முன்... எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஆண்டாள் பாசுரத்தை பற்றி எழுதியதை பகிர்ந்து கொள்கிறேன்.... 

ஆண்டாள் பாசுரங்கள் ஒவ்வொன்றிலும் அழகான தமிழ்ச்சொற்கள் கிடைக்கும். அதிலுள்ள பக்தியை புறக்கணித்துவிட்டு தமிழுக்காக ரசிப்பவர்கள் இருக்கிறார்கள்.முதலில் தமிழால் உங்களை உள்ளிழுக்கும் பின் பக்தி எனும் வலை விரித்து காத்திருக்கும். .அதன் சுழற்சியிலிருந்து தப்ப முடியாது என்கிறார் கோதை.

பட்டாம்பூச்சி, வண்ணத்துப்பூச்சி என்றெல்லாம் இன்று சொல்லப்படும் ஜந்துவுக்கு ஆண்டாளின் காலத்தில் இந்திர கோபம் என்று பெயர்..இது எப்படி? ஒரு வேளை இந்திரனின் கோபத்து வண்ணமோ? திருமாலிருஞ்சோலையில் ஆண்டாள் பார்த்த பட்டாம்பூச்சிகள் அத்தனையும் சிவப்பு. ஒரே சமயத்தில் குப்பென்று எழுந்து பறந்து செல்கின்றன. நாச்சியார் திரு மொழியில் இப்பாடலைப் பாருங்கள்.....

சிந்தூரச் செம்பொடிப் போல் திருமாலிருஞ்சோலை எங்கும்

இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்

மந்தரம் நாட்டி அன்று மதுர கொழுஞ்சாறு கொண்ட

சுந்தரத் தோளுடையான் சுழலையினின்று உய்துங் கொலோ?

( இந்திரகோபம் - பட்டுப்பூச்சி : மந்தரம் - பாற்கடலைக் கடைந்த மந்தர மலை : சுழலை - விரித்த வலை : உய்துகொலோ - தப்பிக்க முடியாமல் )

விளக்கவுரை:
சிவப்பான பொடியிரைத்தது போல திருமாலிருஞ்சோலையெங்கும் பட்டுப்பூச்சிகள் பறந்து விரிந்தன. அன்று மந்தர மலையை மத்தாக வைத்து பாற்கடலைக் கடைந்து இனிப்பான அமுதம் எடுத்த அழகான தோள் கொண்டவன் விரித்த வலையிலிருந்து தப்பிக்க முடியுமா? 

நமக்கும் தினவாழ்வில் காதல், பாசம், சம்சாரம், பதவி, மோகம்,துவங்கி இன்டர்நெட் வரை எத்தனையோ விரித்த வலைகள் காத்திருக்கின்றன. கடைசியில் திருமாலின் வலையில் வந்து விழுந்தால் சரி.

நன்றி : எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (29) புத்தகத்திலிருந்து......


இனி மார்கழி 20 ஆம் நாள் பாடல்.....


தேசி ராகம் ...............                        ஆதி தாளம்................


முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே துயில்எழாய்

செப்பம் உடையாய் திறல்உடையாய் செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா துயில்எழாய்

செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்

நப்பின்னை நங்காய் திருவே துயில்எழாய்

உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்.


விளக்க உரை : 

தானாக முன் சென்று முப்பத்து மூவராகிய தேவர்களின் நடுக்கத்தை நீக்கிய மகா தீரனே! 

துயில் எழுவாயாக! ஒப்புரவு உடையவனே! துணிவு உடையவனே! விரோதிகளுக்கு காய்ச்சல் 

உண்டு பண்ணும் நிர்மலனே! துயில் எழுவாயாக! செப்பு ஒத்த மென்மையான 

கொங்கைகளையும், சிவந்த வாயினையும், சிறிய இடையினையும் உடையவளாகிய 

நப்பின்னை நங்கையே! திரு மகளே!துயில் எழுவாயாக! நோன்புக் குரிய ஆலவட்டத்தையும் 

(விசிறி) கண்ணாடியையும் தந்து , உன் மணவாளனையும் ,எங்களையும் இப்பொழுதே நீராட்டு வாயாக !


அயிலு குப்பம் ஆண்டாளு உரை : 


(குப்பத்து பொம்ன்னாட்டி நானு... ஏதோ என்க்கு தெர்ஞ்சா மேறி சொல்லிக்கிறன்.. )


தான் ஒண்டியா போயி வான்த்துல இர்க்குற அல்லா தேவரியும் ஆரும் மெர்சலாகாதிங்கோ 

நான் இர்க்கேன் அப்டின்னு தில்லா சொல்லிக்கின வீரன் நீ! எயுந்துரு கண்ணு! சமாத்தான்மா 

போறவன் நீ! படா தில்லானவன் நீ! உன் கைல ஆராச்சும் ராங் காட்னா அவங்களுக்கு 

ஜொரம் வர் சொல்லோ பாக்குறவன் நீ! படுக்கெல இர்ந்து எய்ந்திரு ராஜா! 

செப்பு கல்க்காத சுத்த தங்கொம் கண்க்கா பஞ்சு மேறி மார் ரெண்டயும், வெத்தலி போட்டு 

செவந்தா மேறி செவ்ப்பா வாயும், சின்னதா இடுப்பும் அயகா வச்சினு இர்க்குற நப்பின்ன பொண்ணே!

எங்க வூட்டு மவாலச்சுமியே! எயுந்துரு கண்ணு ! விர்தம் இர்க்க சொல்லோ வச்சினு இர்க்க 

விசிறி கண்ணாடி அல்லாம் எட்தாந்து உன்ய கண்ணாலம் கட்டிக்க போற கண்ணனையும்

எங்களியும் இப்பியே குளிக்க உட்று....

  ( இது வட்டார மொழியில் வந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையே இது... திருப்பாவையை கேலி செய்யும் நோக்கமில்லை....)


English Translation

Wake up, O warrior who leads the hosts of thirty-three celestials and allays their fears! Wake up, O strong One, Mighty One, Pure One, who strikes terror in the hearts of the evil. Wake up, O full breasted lady Nappinnai with slender waist and coral lips! Give us your fan and your mirror, and let us attend on your husband now


பதவுரை :

முப்பத்து மூவர் அமரர்க்கு

முப்பத்து முக்கோடி தேவர்கட்கு

முன் சென்று

(துன்பம் வருவதற்கு) முன்னமே எழுந்தருளி

கப்பம்

(அவர்களுடைய) நடுக்கத்தை

தவிர்க்கும்

நீக்கியருளவல்ல

கலியே

மிடுக்கையுடைய கண்ணபிரானே!

வெப்பம்

(பயமாகிற) ஜ்வரத்தை

கொடுக்கும்

கொடுக்கவல்ல

விமலா

பரிசுத்தஸ் வபாவனே!

துயில் எழாய்-’

செப்பு அன்ன

பொற்கலசம் போன்ற

மென் முலை

விரஹம் பொறாத முலைகளையும்

செம் வாய்

சிவந்த வாயையும்

சிறு மருங்குல்

நுண்ணிதான இடையையுமுடைய

நப்பின்னை நங்காய்

நப்பின்னைப் பிராட்டியே!

திருவே

ஸ்ரீ மஹாலக்ஷ்மியே!

துயில் எழாய்-’

துயில் எழாய்

படுக்கையினின்றும் எழுந்தருள்

செப்பம் உடையாய்

(ஆச்ரிதாக்ஷணத்தில்) ருஜுவாயிருக்குந் தமையை யுடையவனே

திறல் உடையாய்

பனிசுவர் மண்ணுன்னும் படியான வலிமையுடையவனே!

செற்றார்க்கு

சத்துருக்களுக்கு

(துயிலெழுந்த பின்பு.)

உக்கமும்

(நோன்புக்கு உபகரணமான) ஆலவட்டத்யும (விசிறியையும்)

தட்டொளியும்

கண்ணாடியையும்

உன் மணாளனை

உனக்கு வல்லபனான கண்ணபிரானையும்

தந்து

கொடுத்து

எம்மை

(விரஹத்தால் மெலிந்த) எங்களை

இப்போதே


இந்த க்ஷணத்திலேயே

நீராட்டு

நீராட்டக் கடவாய்’


No comments:

Post a Comment