Saturday 25 January 2014

பல்லவன் காதலி....

நண்பர்களே...! சரித்திர கதை எழுத வேண்டும் என்பது நெடு நாள் ஆசை... அந்த தகுதி இருக்கான்னு செக் பண்ணவே இந்த சாம்பிள் நல்லா இருந்தா சொல்லுங்க வாரா வாரம் எழுத முயற்சிக்கிறேன்... சாண்டில்யன் பாணி இதுல இருக்கு ஒகேன்னா இதன் படியே போகலாம் இல்லாட்டி புதிய பாணியில் போகலாம்,நீங்க ரெடியா!வாங்க பல்லவ தேசத்துக்கு!


பல்லவன் காதலி...! 

சட்டென்று விழிப்பு தட்டியது மாறவர்மனுக்கு விழிக்க சிரமமாயிருந்தது சற்று பிரயாசைப்பட்டு தான் விழிக்க வேண்டியதாயிற்று... சுற்றிலும் இருள் சூழ்ந்து கும்மிருட்டாக இருந்தது சிறிது நேரம் மெல்ல விழிகளை சுழல விட்டான்..ஆயாசமாகவும் இருந்தது தோளில் தீப்பற்றி எரிந்தது போல் வலித்தது...என்ன நடந்தது?.. நினைவுகளை அசை போட்டான்..

பல்லவ சாம்ராஜ்ஜியத்தை நோக்கி சென்ற பிரயாணத்தில் காஞ்சியை நெருங்கும் வேளையில் இரவாகி விட்டபடியால்.. சிறுவூர் என்ற இடத்தில் புரவியை நிறுத்தி விட்டு அங்கிருந்த கோவில் மண்டபத்தில் இளைப்பாற சென்றதும்,அந்த மண்டபத்தில் நுழைந்த மறுகணம் எதிரிகளால் சூழப்பட்டதும் நினைவுக்கு வந்தன..

சரேலென வாளை உருவி சுழற்றிய அந்தக் கணமே அவனது கூர்ந்த புலன் எதிரிகளுக்கு அச்சத்தை தந்துவிடது... சக்கரவியூகமாய் சுற்றி வளைத்து தாக்கியவர்களை சிதறி ஓடச்செய்தது அவன் வாள் வீச்சு... உக்கிரமான அந்த சண்டை நிறைவுறும் தருவாயில் மண்டபத்தின் தூண் மறைவிலிருந்து பாய்ந்து வந்த குத்தீட்டி அவனது தோளில் செருகியது..

அவனைத் தவிர யாரேனும் அங்கு இருந்தால் அவர்களது சிரம் தனியாக நிலத்தில் வீழ்ந்திருக்கும் துல்லியமாக கழுத்துக்கு குறி வைத்து எறியப்பட்ட குத்தீட்டி அது.. மாறவர்மனின் அபார போர்பயிற்சி அவனது செவிகளில் குத்தீட்டி காற்றை கிழித்து வரும் ஓலி கேட்ட நொடியிலேயே விலக சொன்னது அவனது விலகல் புலி பாய்ச்சலை ஒத்து இருந்தது.

சற்று தாமதித்து இருந்தாலும் கழுத்து அல்லது இதயத்தில் பாய்ந்திருக்கும்... இப்படி குத்தீட்டிகளை வீசும் கலை சாளுக்கிய தேசத்தில் தான் பிரபல்யம்... அப்படி என்றால்!! சாளுக்கியர்கள் எப்படி பல்லவ தேசத்தில்.. ஏதோ மிகப்பெரிய சதி அரங்கேறுகிறது என்று மட்டும் புலனான வேளையில் மயக்கமும் தழுவிக் கொள்ள நிலத்தில் வீழ்ந்தான் மாறவர்மன்.

இப்போது இருள் கண்ணுக்கு பழகிவிட்டது... குத்தீட்டி பாய்ந்த இடது தோளையும் இடது கரத்தையும் அசைக்கவே முடியவில்லை மெல்ல நாசிக்குள் பச்சிலை மணம் நுழைந்தது..காயத்திற்கு யாரோ மருந்து இட்டு இருக்கிறார்கள் என்று புலனான போதே தான் காப்பாற்ற பட்டுள்ளோம் எனத் தெரிந்தது.. தூரத்தில் யாரோ நடந்து வரும் காலடியோசை...

மாறவர்மன் ஒரு உபாயம் செய்தான்! தன்னைக் காப்பாற்றியவர் யார் என அறிந்து கொள்ள மயக்கத்தில் ஆழ்ந்திருப்பது போல பாவித்து விழிகளை மூடிக்கொண்டான்.. காலடியோசை சமீபித்தது... ஒருவர் அல்ல இருவர் என்பது அவனது கூரிய புலனாலும் அவர்கள் மெல்ல ரகசியமாய் பேசிய ஒலி செவிகளில் விழுந்ததாலும் அறிந்தான்,அதில் ஒரு குரல் பெண்குரல்!

அந்த பெண்ணோடு வந்தவர் ஒருவர் முதியவர்... அவர்களது பேச்சில் அந்த முதியவர் ஒரு மருத்துவர் என அறிந்தான்... சஞ்சீவினி இலைகளால் பற்று போட்டுள்ளேன் இனி ஒன்றும் பயமில்லையம்மா வலி இரு தினங்களுக்கு இருக்கும் காயம் ஒரு மாதத்தில் பூரணமாக ஆறிவிடும் என்றார்...

இன்னும் இவர் மயக்கத்தில் ஆழ்ந்துள்ளாரே நான்கு நாழிகைகளில் விழிப்பார் என்றீர்களே? என்று கேட்டாள் அப்பெண்... அது தான் புரியவில்லையம்மா வயதானவர்கள் கூட அந்நேரத்தில் விழித்து விடுவார்கள் இந்த வாலிபன் ஏன் விழிக்கவில்லை? இரம்மா நான் போய் இன்னொரு சாறு எடுத்து வருகிறேன் என்று சொல்லி அங்கிருந்து அகன்றார்...

அவரது காலடியோசை தேய்ந்ததும் மெல்ல கண்விழிப்பது போல பாவனையை முயற்சிக்கலானான் மாறவர்மன்... அப்பெண்ணிடம் இப்போது பரபரப்பு தொற்றிக் கொண்டது.. மெல்ல.. மெல்ல என்றாள்.. பிரயாசையோடு விழிப்பது போல பாவித்த மாறவர்மன் அவளை கண்டதும் மூச்சற்று போனான்... அவன் விழி மூடும் போது இருந்த இருள் இப்போதில்லை!

அறையில் மெல்லிய வெளிச்சம் வியாபித்து இருந்தது.... அதற்கு காரணம் சுவற்றில் சாளரம் அருகே இருந்த திரைச்சீலை மெல்ல விலகியிருந்தது... அந்த சாளரத்தின் வழியே பூரண சந்திரனின் ஒளிக்கிரகணங்கள் அறைக்குள் புகுந்து இருந்தன அவ்வொளி நின்றிருந்த அந்த பெண்ணின் வதனத்திலும் பட்டு அவளை பிரகாசிக்க வைத்திருந்தது..

வட்ட வடிவத்தில் பூரண சந்திரன் போன்ற பேரெழில் மிகுந்த வதனம்.. காதோரத்தில் சுருண்டிருந்த அவளது குழல் மெல்லிய காற்றில் அசைந்தது ஓர் நாட்டியம் போல இருந்தது.. கடல் போல் விரிந்த விழிகளில் கரிய திராட்சை பழங்கள் தெரிந்தது.. அதில் சற்று மருளும் கலந்திருந்தது.. 

வில் போல் வளைந்த புருவங்கள் வினோதமாய் மேலேறியது கூட அவளுக்கு பேரழகு தந்தது.. செவ்விய பவள இதழ்களை நாவால் அவள் ஈரப்படுத்தியது தனிக்கிளர்ச்சியை தந்தது... குவளை மலர் போன்ற அவளது நாசி நுனியில் ஆழ்ந்த சிவப்பு விளைந்திருந்தது...அழகிய வினாக் குறிகளை போல செவிகள் அதில் ஆடிய காதணிகள் கவிதையாய் இருந்தன.. 

மூங்கில் போன்ற தோள்கள் தந்த நிறத்தில் மிளிர்ந்தது.. படபடப்பாக இருந்ததால் அவள் வெளியிட்ட பெருமூச்சு அவளது மார்புகளை ஏற்றி இறக்கி கொண்டிருந்தது மதியை மயக்கியது.. ...!என்ன நான் கேட்டது உங்கள் செவிகளில் விழவில்லை? திடுக்கிட்டான் மாறவர்மன்... என்ன என்ன!! என விழித்தான்... இவ்வளவு கணம் அவள் அவனிடம் பேசிக் கொண்டிருந்ததும் அவள் அழகில் லயித்து தான் மெய் மறந்து இருந்ததும் புலனானது..

சொல்லுங்கள்.. என்றான்...சற்று வெட்கத்துடன்...  இப்பொழுது வலி உள்ளதா? என்றாள்..ஆம் என தலையசைத்தான்... நல்ல வேளை நேற்று அவ்வழியே வந்தேன் நீங்கள் மயங்கி சரிந்த போது அவ்வழியே பல்லக்கில் என் வீரர்களோடு கடந்து கொண்டிருந்தேன் நாங்கள் வரும் அரவம் கேட்டு சிலர் மண்டபத்திலிருந்து ஓடினார்கள்.. வந்து பார்த்தால் நீங்கள் வீழ்ந்து கிடந்தீர்கள் மூச்சு விடாமல் சொல்லி முடித்தாள்...

நன்றி... என்று பதிலுரைத்த மாறவர்மனுக்கு சட்டென்று உறைத்தது... பல்லக்கில் என் வீரர்கள் என்றாளே இப்பெண் அப்படியென்றால்... அபடியென்றால்... நீங்கள் யார்? உங்கள் பெயரென்ன? என வினவினான்.. அவள் மெல்ல பதிலுரைத்தாள்..என் பெயர் காஞ்சன மாலா!

காஞ்சன மாலா!!!!! பல்லவ இளவரசியா!!!!!!!!!!! கூவியே விட்டான் மாறவர்மன்...

தொடரும்....

No comments:

Post a Comment