Friday 24 January 2014

பாரு ஸ்வாதிதாவின் இசை மேதை

இளையராஜாவுக்கு இசை தெரியுமா..!!!!!

( சிரிக்காமல் படிக்க வேண்டிய சிரீயஸ் கட்டுரை..)

இளையராஜாவுக்கு இசை தெரியுமா? இந்த கேள்விக்கு முன் உலகமே சிலாகித்த இசை மேதை "ஓடும்பே உடம்பா" பற்றி தெரியுமா? அவரை தெரிந்து கொள்வோம் வாருங்கள்..

ஆப்பிரிக்காவின் மொசாம்பியா நாட்டிற்கு வடமேற்கே தென்கிழக்கில் வடக்கு முகம் பார்த்து தெற்காக அமைந்திருக்கும் மேற்கு நாடு தான் உஜாம்பே.! இருண்ட கண்டம் ஆப்பிரிக்காவின் இசையை வெளிச்சம் போட்ட நாடு உஜாம்பே..!! மொத்தமே 6000 சதுர கிலோ மீட்டரில் அமைந்த நாடு இது!

அங்கு ஜிலு, கொலு, தலு, வலு,பலு,விலு,மலு,யலு ஆகிய எட்டு ஆப்பிரிக்க மொழிகள் பேசப்படுகிறது... முக்கிய மொழி ஜிலு& கொலு இதில் பெரும்பான்மை கொலு மொழி..! சிறுபான்மை மொழி தான் ஜிலு நமக்கு புரியும் படி சொன்னால் தமிழகத்தில் தமிழ் கொலு என்றால் சமஸ்கிருதம் ஜிலு!

அந்த ஜிலு பழங்குடியில் பிறந்தவர் தான் இசை மேதை "ஓடும்பே உடம்பா"... இவர் தன் பெற்றோருக்கு 31வது பிள்ளையாக பிறந்தவர்... அங்கு 15 வயதில் திருமணம் என்பது சர்வ சாதாரணம் என்பதை அறிக..! நான் இங்கு செல்லும் போது பிரசவ வேதனையில் துடித்த பெண்ணுக்கு வயது 7!

ஆடு மேய்ப்பவர்களின் ஷூக்களை பாலிஷ் போடுவது அவர்களது மெர்சிடீஸ் பென்ஸ் கார்களை துடைப்பது போன்ற வேலைகளை செய்து வந்தார் உடம்பா.. அவ்வப்போது அந்த கார்களில் வழியும் ஸ்டீரியோ இசைகளை கேட்பார்... அப்போது அவர் விரல்கள் கார் பானட்டின் மீது தாளமிடும்.!

பென்ஸ் காரில் தாளம் போடும் உடம்பாவின் விரல்களை பொறாமையுடன் பார்த்தது ஆடு மேய்க்கும் கொலு ஆதிக்க வர்க்கம்... அதற்கு தண்டனையாக சூடான ரேடியேட்டரில் கையை வைத்து அழுத்தி உடம்பாவுக்கு தண்டனை அளித்தன...பொறுத்து கொண்டார்..

அவரது 15ஆம் வயதில் நடந்தது ஓர் அதிசயம்! உஜாம்பேக்கு வந்த பிரிட்டிஷ் தூதுவர் மைக் ஆர்தர் டேவிட் கண்ணில் பட்டார்... கார் பானட் மீது விளையாடிய உடம்பாவின் விரல் வேகத்தை கண்டு அதிசயித்த மைக் ஆர்தர் டேவிட்அவருக்கு பறை அடிக்க சொல்லி தந்தார் இங்கு டேவிட் பற்றி இவர்...தமிழகத்தில் கலெக்டராக இருந்தவர் என்பதை அறிக....

அந்த பறை இசை உடம்பாவை வேறு உலகிற்கு அழைத்து சென்றது,இரவு பகல் பாராமல் வாசிக்க ஆரம்பித்தார், இடையில் ஆப்பிரிக்க மூங்கில் காடுகளில் கிடைத்த புளூட்டானோ என்ற மூங்கில்களில் துளையிட்டு வாசித்தார் உடம்பா! இருண்ட ஆப்பிரிக்காவின் மொத்த சோகத்தையும் சொன்ன இசை அது..

தனது 15வது வயதில் இசையை கற்றுக் கொண்ட உடம்பா 4 ஆண்டுகளில்அதில் விற்பன்னரானார்.. அடுத்த 5 ஆண்டுகள் உஜாம்பே முழுவதும் உடம்பாவின் இசை பரவியது இப்போது உடம்பாவின் வயது 24... ஒரு இளைஞனுக்குரிய உடல் வாகு திருமணம் செய்யக்கூடிய பருவம் ... அவரது மனைவியாக வந்தவர் தான் "சம்போ விகோடா"

சம்போ விகோடா உஜாம்பா அரசு இசைக் கல்லூரியில் கழிவறை சுத்தம் செய்பவராக இருந்தார்... ஆதலால் அவரது இசை அறிவு அபாரமாக இருந்தது...அவரிடம் இருந்தும் கற்றுக் கொண்டார் உடம்பா..!இவர்கள் இருவரும் சேர்ந்து இசைத்த இசை ஆப்பிரிக்காவையே உலுக்கியது... 

மெல்ல ஒலிக்க தொடங்கி அதிரடிக்கு மாறும் வூடோ காட்டெருமை தோல் மேளம், புளூட்டானோ மூங்கிலின் ராகம்,நெஞ்சை அறுக்கும் உடம்பாவின் குரல்,நம் சங்கை அறுக்கும் சம்போவின் இணைக் குரல் இவையனைத்தும் மொத்த ஆப்பிரிக்காவையும் மகுடி கேட்ட நாகமாய் மாற்றியிருந்தது.

எனக்கென்னவோ உடம்பாவின் இசையும் அரபிப் பாடகர் அல் கவுத் அல்ஸாரின் இசையும் ஒன்றே.! இது என்னைப் போல உள்ள உலக இசை விமரிசகர்களுக்கு (மட்டும்) புரியும்..! அல் கவுத் அல்ஸார்...! ஈரானுக்கு தென்மேற்கே வடகிழக்கில் பிறந்தவர் ,உடம்பாவிற்கு 300 ஆண்டுகள் மூத்தவர் அவரது அபார இசை ஞானம் அவரது சித்தப்பா மஜீத்தால் வந்தது.. மஜீத் மதுரையில் ஒரு நாடக கம்பெனியில் வேலை பார்த்தவர்.. 

வரலாற்று குறிப்பில் மெஜுரா என்றுள்ளது ஆனால் அது உஜாம்பே அருகில் உள்ள மஜாரோவாக இருக்கும் என்பது என் எண்ணம் ஏனெனில் அல்கவுத் & உடம்போ இருவரின் இசையும் ஒரே பாணி என்பதை அங்கு தான் கண்டு கொண்டேன்..ஒரு முறை மஜோரோ வீதியில் அந்த ஊர் சாராயமான "ப்ராஜ்" குடித்து கொண்டே அந்த இசையை கேட்டேன்...! 

அந்த இரவு முழுவதும் நான் உறங்கவில்லை.. என் கண்ணில் இருந்து கர கர வென்று கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது... (சரக்கினால் அல்ல) வார்த்தைகளில் வடிக்க முடியாத இசையனுபவம் அது..அப்படி ஒரு இசைக்கோர்வை தமிழ்ப்பாடல்களில் இல்லை என்று சர்வ நிச்சயமாக சத்தியம் செய்வேன்...

மெல்லிய சோகம்,சொடுக்கும் இசை, அறுக்கும் குரல் இவை தான் அல் கவுத்தையும் உடம்பாவையும் இணைத்த ஓர் புள்ளி.. இரவுகளில் நான் அவிழ்த்து போட்டு ஆடுகையில் உடம்பாவின் இசை கேட்டால் என் உடம்பு சிலிர்க்கும் அது இசை வேள்வி...!என்னை எவனும் கேட்கக்கூடாதுகேள்வி...! 

அரேபிய இசையும் அதை நகலெடுத்த உஜாம்பே இசையுமே உலகின் மிகச் சிறந்த இசை வடிவங்கள் இது 100 சதவீதம் உண்மை என்பதை 15 வது லார்ஜில் நீங்கள் உணர்வீர்கள்... அது ஒரு சுகானுபவம்...! அடக்கி வைத்திருந்த சிறுநீர் கழிப்பதைப் போல..

யாராவது இளையராஜா இசையை பற்றி சிலாகித்தால் எனக்கு வெறுப்பாகிறது.. அல் கவுத் அளவிற்கோ உடம்பா அளவிற்கோ இளைய ராஜா இன்னும் வரவில்லை அதற்கு ஒரு 100 ஆண்டுகள் கூட ஆகலாம்..போன வாரம் தேனியில் உள்ள நெல்லைக்கு போயிருந்தேன்..

அங்கு பனிமலையின் மீது அமைந்திருந்த ரிஸார்ட்டில் ரெமி மார்ட்டின் 13 வது லார்ஜ் அடிக்கும் போது ஊற்றிக் கொடுத்த வாட்ச்மேன் முனியப்பனிடம் கேட்டேன் உனக்கு ஒடும்பே உடம்பா தெரியுமா என்று.! உடும்புக்கறி கிடைக்காது என்றான்... அந்த கூமுட்டை.....(சென்சார்) வந்த ஆத்திரத்தை அடக்கி கொண்டு பிடிச்ச பாட்டு எது என்றேன் 

அன்னக்கிளியில் வரும் மச்சானை பாத்திங்களா என்றான்... எவ்வளவு படு மட்டமான ரசனை
தமிழன் இப்படி இருந்தால் என்னா கூ....(சென்ஸார்) விளங்கும் "உடம்பா" தெரியாத நீ எப்படி தமிழகத்தில் வசிக்கிறாய்? நீ எப்படி என் புத்தகங்களை வாசிப்பாய்...! போடாங்கங்கங்கங்க்ங்கங்கங்க... (சென்சார்) உனக்கு ஆங்கில எழுத்தில் m,n,o எழுத்துக்களை தவிர்த்து அதற்கு அடுத்த எழுத்தை கரைத்து உன் வாயில் ஊற்ற வேண்டும்....

இங்கு நான் தென் அமெரிக்காவின் சிலிக்கு வடதெற்கிலுள்ள பெருச்சாலியோ நாட்டு இசை மேதை "ரொசாரியோ டி குரூஸ்" பற்றிக் குறிப்பிடவே இல்லை..அவரது இசையை இங்குள்ள ஞான சூன்யங்கள் கேட்டால் தான் தெரியும்...இளைய ராஜாவின் இசை அதன் சுண்டுவிரலைக்கூட தொடவில்லை.... அதை ஒப்பிடுவதும் தவறு... ஏனெனில் அது உன்னதத்தின் உச்சம்...


என்னை விமர்சிப்பவர்கள் உடம்பா இசையை ஒரு முறை கேட்டால் சொல்வார்கள்...

"இளையராஜாவுக்கு இசை தெரியாது என்று"....


- பாரு ஸ்வாதிதா..

(இசை விற்பன்னர், எழுத்தாளர், கட்டுரையாளர், ஆராய்ச்சியாளர், ஆய்வாளர், ஏட்டு,)

No comments:

Post a Comment