Sunday 5 January 2014

மின்னல் வேகக் கதை.....



ஃபேஸ்புக்கில் கடந்த 3 மணி நேரமாக இருக்கிறான் தினேஷ் மானிட்டர் பார்த்து பார்த்து லேசான கண் எரிச்சல் கைகளை தேய்த்து கண்ணில் வைத்தான்... ஒடிக் கொண்டிருந்த ஏ.சியை அணைத்துவிட்டு மெலிதாக சோம்பல் முறிக்கையில் காலிங் பெல் அடிக்க கதவு திறந்தான் பள்ளி சென்ற குழந்தைகள் ஹோ.. வென கத்தியபடி வந்தது...

 டாடி சோட்டா பீம் பாக்கணும் டாடி என்றன... முதலில் போய் முகம் கழுவிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வாங்க அப்பத்தான்...மனைவி இன்று இரவு தான் வருவாள்... அவள் சொல்லிவிட்டு சென்றதெல்லாம் நினைவுக்கு வந்தன... குழந்தைங்க ஸ்கூலில் இருந்து வந்ததும் ஏதாவது சாப்பிட கொடுங்க துணிய வாஷிங் மெஷின்ல போடுங்க இந்த ரெண்டு வேலைய மட்டும் பாத்தா போதும்ன்னு....

ஃபிர்ட்ஜை திறந்து பாலை எடுத்தான்.... முகம் கழுவி உடை மாற்றி வந்த குழந்தைகள் டாடி பிரட் டோஸ்ட் டாடி என்றன பின்னாலிருந்து...சற்று உற்சாகமாக பிரட் பாக்கெட்டையும் முட்டையையும் எடுத்து கொண்டான்... டோஸ்டரில் பொன் நிறமாக பிரட்டை சூடாக்கி ஆம்லேட் போடும் போது நேற்று வீட்டில் செய்த பீட்ஸா நினைவுக்கு வர ஓவனை திறந்தால் அது இருந்தது.. 

ஓவனை  போட்டு அதையும் சூடாக்கி பீட்ஸா மற்றும் டோஸ்ட் ரெடி செய்தான்.. ஹாலில் டி.வி ஓடிக் கொண்டிருக்க குழந்தைகள் டோலக்பூருக்குள் வாழ்ந்து கொண்டிருந்தன... அவர்களுக்கு இதை கொடுத்து விட்டு குழந்தைகள் கழட்டிப்போட்ட துணிகளை வாஷிங் மெஷினில் போட்டுவிட்டு சுழல விட்டான்... தொலை பேசி ஒலிக்க எடுத்தான்...

மனைவி தான்... பிள்ளைங்க வந்தாச்சா?என்ன கொடுத்திங்க? குட் வெரிகுட்.... எல்லாம் கேட்டுட்டு சாரிங்க நான் 7 மணின்னு சொன்னேன் ஆனா இப்ப 8 ஆகிடும் போல இருக்கு... பரவால்லைம்மா சொல்லு ....ஒரே ஒரு ஹெல்ப் அதை மட்டும் செய்யுங்க நைட் வந்து நானே சமைச்சுடறேன்... சரி சொல்லு என்றான்...

என்ன கிச்சன்ல அடுப்புக்கு பக்கத்துல ஒரு பாத்திரத்துல இட்லிக்கு ஊறப்போட்டு இருக்கேன் அதை எடுத்து அரைச்சு வைச்சுட்டிங்கன்னா போதும்...சரி என்றான் ...போனை வைத்து விட்டு நேராக கிச்சனுக்குள் நுழைந்தான் மனைவி சொன்ன பாத்திரத்தை எடுத்து அதில் உள்ளதை கிரைண்டரில் போட்டு ஆன் செய்தான்...

என்று இந்த கதையை முடிக்க நினைத்தேன் ஆனால் என்ன செய்ய இந்த கதையில் வருவது போல் நடக்க தடையில்லா கரண்ட் வேண்டுமே...! மின் வெட்டு 10 மணி நேரம் இருக்கும் போது இதெல்லாம் நடக்குமா?

சரி இப்படி முடிக்கிறேன் இருட்டான அந்த வீட்டுக்குள் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்த போது தினேஷின் மனைவி வீடு திரும்பினாள்.

No comments:

Post a Comment