Thursday 3 September 2015

தெருக்குரல்..

#தெருவின்_குரல்கள்

அந்த காலத்தில் மிமிக்ரியோடு எனக்கு பிஸினசும் கற்றுத்தந்தவர்கள் தான் தெருத்தெருவாக வந்து வியாபாரம் செய்வோர்.. அவர்கள் குரல் மயக்கும் அல்லது தொனி இழுக்கும் அல்லது அவர்கள் சொல்லும் ஆஃபர்கள் நம்மை மதி மயக்கும்.. இத்தனைக்கும் அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதோர்.

சிமிண்ட் தொட்டி விற்பவர்.. M.R.ராதா குரலில் சிமிண்ட்ற்ற்ற் தொட்ற்ற்ற்ற்றி என கூவி வருவதும்... ராசாவே உன்னை நம்பி என ஜானகி பாடுவது போல மாம்பழம், நடுச்சாள பழம்ம்ம்ம்ம்ம்ம்ம் என ராகமிழுக்கும் பழக்காரி.. கரகர மொறு மொறு குரலில்.. ப்ப்ப்பேப்பர் இருக்கா.. பழைய்ய்ய பேப்பர்ர்ர்ர்ர் எனப்பாடும் பழைய பேப்பர் காரர்.. அடுத்து

இஞ்சி மொரப்பா...பா..பா..பா.. என ஹஸ்கி கலந்த கரகரப்பான குரல் காரர்... கையில் கட்டும் கயிறு விற்கும் கயிறுக்காரர் கயிறேக்கெஹ்ஹேய் கயிறேக்கெஹ்ஹேய் எனக் கூவி விற்கும் லாவகம்.. அம்மி கொத்தலையோ அம்மி என வீட்டில் இருக்கும் மம்மிகளை எழுப்பிய அந்த ஹை டெசிபல் குரல்.. எல்லாவற்றிற்கும் மேலான நெஞ்சை அறுக்கும் குரல் ஒன்று...

ஓட்ட்ட்ட்டை உடைசல்ல்ல்ல் ஈஈஈஈய்யம் பித்தளைக்க்க்கு ப்ப்ப்ப்பேரீச்சம் பழம்ம்ம்ம்ம்... இதற்கு மயங்காதவர் யாரும் உண்டோ..! இதையெல்லாம் அப்போது நண்பர்களிடம் பேசிக் காட்டியதுண்டு.. ஆனால் காலங்கள் மாறிய பின்பு இது தான் மிமிக்ரி என அறிந்து கொண்டேன்.. நான் ஏகலைவனாக இருந்து கற்றுக் கொண்ட துரோணர்கள் அவர்கள்.!

ஓலக்சிலும் இ.பேவிலும் நெட்டில் பர்ச்சேஸ் செய்யும் காலமிது அப்போது எல்லாம் எங்கள் இளம்பிராயத்தில் கூவிக்கூவி விற்பது தான் மார்க்கெட்டிங் இன்று நான் விளம்பரத்துறையில் வெற்றிகரமாக கோலோச்சுவதற்கு எந்த ஒரு MBAவும் படிக்காது எனக்குள் வியாபார தந்திரங்களை விதைத்துவிட்டு சென்ற அந்த பாமரர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.

No comments:

Post a Comment