Friday 4 September 2015

டெய்லர்..

#டெய்லர்

சேலத்தில் நான் படித்த சிந்தி இந்து பள்ளியின் வரிசையில் திருமணி முத்தாறு ஓடைப்பாலத்தை தாண்டினால் ஐந்தாவது கடை சுல்தான் பாய் டைலர் கடை.. எங்களுக்கும் என் பள்ளிப் புத்தகங்களுக்கும் ஆடை தைத்து தருபவர்... ஆமாங்க ஸ்கூல் புக் வைக்க ஜோல்னா பை. முரட்டுக் காக்கியில் டபுள் ஸ்டிரிச் அடித்துத் தைக்கப்பட்ட பை அது அவ்வளவு சீக்கிரம் அறுந்து போகாது... அதையும் 6 மாதத்தில் பிய்த்து விடுவோம் அது வேறு விஷயம். 

ஆனால் சுல்தான் பாய் பையையும் எங்களையும் வேறுபடுத்தி பார்க்காதவர் ஏன்னா ஒரே மாதிரி தான் தைப்பார். நாலு இஞ்ச் நீளமாக வைப்பார் இடுப்புப் பகுதியில் இரண்டு மூன்று தரம் பிரித்து தைக்கும்படி துணி வைத்து தைப்பார்,.. வளர்ற பிள்ளைங்க அதான் கண்ணு என்பார் அன்பாக நாங்களும் 8ம் நம்பர் காலளவு உள்ளவன் 10ம் நம்பர் செருப்பு போட்டது போல டவுசரை இடுப்பில் மாட்டிக்கொண்டு அலைவோம். துணி மட்டும் தரமானதாக இருந்தால் போதும் நீண்ட காலம் அவை உழைக்கும் ஏன்னா அவரது தையல் அவ்வளவு உறுதி. 

வெள்ளை நிறச் சட்டையும் இங்க் ப்ளூ டிரவுசரும் எங்கள் பள்ளியின் சீருடை 1 முதல் 8ஆம் வகுப்புவரை.. இங்கு சுல்தான் பாய் பற்றி பார்த்துவிடுவோம். இளவயது கலைஞரைப் போல நேர் வகிடு எடுத்த சுருள் முடி அன்பே வா எம்.ஜி.ஆர் மீசை மாநிறம் நெடு நெடு உயரம் ஒல்லியான உடல்வாகு முழங்கை வரை சுருட்டி விடப்பட்ட மஞ்சள் சில்க் சட்டை வெள்ளை வேட்டி தான் ரெகுலர் காஸ்ட்யூம் அபூர்வமாக எப்போதாவது கைலி ஆனா சட்டை மாறியதே இல்லை. காதுமடலுக்கு மேல் பென்சில் ஏவுகணை போல இருக்கும். சுல்தான் பாயின் தையல் உறுதியானது நேர்த்தியானது. 

அவரது கைவண்ணத்தில் இரண்டாம் வகுப்பில் தைத்த அதே டவுசர் எங்களோடு பாஸாகி பாஸாகி ஐந்தாம் வகுப்புவரை உடனிருந்து இருக்கிறது. அப்போதெல்லாம் தீபாவளி பொங்கலுக்குத்தான் புதுத்துணி எடுக்கும் வழக்கம் எல்லாரது வீட்டிலும். அதுவும் ஒரு செட் தான் எங்கள் வீட்டில் நான்கு பிள்ளைகள் அப்பா அம்மா எல்லோருக்கும் ஒரே பீரோ.! அதிலும் அம்மாவின் ஐந்தாறு சேலைகள் 2 பட்டுச்சேலை அப்பாவின் நான்கு வேட்டி நான்கு சட்டை ஹேங்கரில் எங்கள் அனைவருக்கும் ஆளுக்கு 5 செட் உடைகள் என பீரோவில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும் துணிகள் வழியாது இந்தச்செய்தி தற்போதைய இளம் தலைமுறைக்கு மிகவும் ஆச்சரியம் தரக்கூடியதாக இருக்கும்..

ஏனெனில் இன்று என் ஒரு மகளுக்கே இரண்டு பீரோக்கள்! 80% ரெடிமேடுகள்.. அத்தனை பிராண்டுகள்.. டைலர் என்பவரிடம் இன்று வரை பெண்கள் மட்டுமே போய் தைத்து வாங்குகிறார்கள் ஆனால் ஆண்களில் வெகு குறைவானவர்களே டைலர்களிடம் செல்கிறார்கள். ஆனால் நாங்கள் அதற்கு காத்திருந்த காலங்கள் உண்டு. ஒவ்வொரு பண்டிகைக்கும். தீபாவளிக்கு ஒருவாரம் முன்பு சுல்தான் பாய் கடைக்கும் வீட்டுக்கும் ஓடி ஒடி துணி தைத்தாகிவிட்டதா எனக்கேட்போம். சிவந்த கண்களுடன் மெஷினில் இருந்து தலை நிமிர்த்தி போய்ட்டு நாளைக்கு வாங்க கண்ணு என்பார். தினமும் இது தொடரும் ஆனால் சரியாக தீபாவளிக்கு முதல் நாள் தான் டெலிவரி தருவார். அழகாக நியூஸ் பேப்பரில் மடித்து நூல் சுற்றி தருவார்.

சேலம் சித்ரா திரையரங்கில் ஷோபா நடித்த பசி என்னும் விளம்பரம் தாங்கிய நாளிதழில் மடித்து ஒருமுறை டெலிவரி தந்தது நிழலாக என் நினைவிலிருக்கிறது. தற்போதைய ஆடம்பர பாலிதீன் பைகளும் அப்போது இல்லை. வணிக நோக்கின்றி ஒரு முறை தைத்து தந்துவிட்டு வருடக்கணக்காக காத்திருக்கும் சுல்தான் பாய் போன்ற பேராசைப்படாத அப்பாவிகளும் நல்ல தரமான நீண்டு உழைக்கக் கூடிய துணிகளை தயாரித்த மில்களும் தற்போது இல்லை.

போன வாரம் ஓட்டல் கடைக்கு சில பொருட்கள் வாங்க போனார்கள் மகளும் மனைவியும். திரும்பி வரும்போது கையில் புத்தாடை.! என்ன ஓட்டலுக்கு தேவையான பொருள்ன்னு சொன்னிங்க டிரஸ் எல்லாம் வாங்கிட்டு வந்துருக்கிங்கன்னு கேட்டேன்.. இல்லிங்க பாப்பாவுக்கு ஒரு தர்கீஷ் கலர் நகை செட்டு பர்த்டேவுக்கு வாங்கினோமில்ல அதுக்கு சேம் மேட்சிங் கிடைச்சது.. லைட் மேட்சிங்கா இன்னெண்ணு வாங்க நினைச்சோம் அன்னிக்கு துணி இல்ல இப்ப கடையில பார்த்தோம் உடனே வாங்கிட்டோம் என்றார் மனைவி..!

பீரோ ஏன் நிரம்பி வழியாது..!

No comments:

Post a Comment