Saturday 12 September 2015

ஏலீன் கிரகம்

#ஏலீன்_கிரகம்

ஏலீன் கிரகத்து தலைவன் எல்ஜாவிற்கு கவிதை என்றால் உயிர்.. மஞ்சள் அமில ஆற்றில் கரையும் கப்பல்கள், எல்லா விண்வெளியிலும் என் ஓடம், கேலக்ஸி போர்க்குரல்கள், நைட்ரஜன் உமிழும் அதரங்கள் இப்படி பல (தலைப்புகள் எல்லாம் தமிழில் மொழி பெயர்த்து இருக்கிறேன்) கவிதைத் தொகுப்புகளை ஏலீன் மொழியில் எழுதி வெளியிட்டவன்.

அவனது கிரகத்தில் வீட்டுக்கொரு கவிஞன் இருந்தான்.. ஏலீன் கிரகத்து விண்கல்லும் கவிபாடும் என்னும் சொல் வழக்கு அங்கிருந்தது. எப்லி, அஜாக்கின், முஜ்ஜா, ஏக்லான், அவிகான், சோமோ, ஏகாலா, எர்போ போன்ற எட்டு அரசவைக் கவிஞர்கள் அங்கு இருந்தார்கள். 

எப்லி தான் தலைமைக் கவிஞன் அவர்கள் "எஷ்ட எக் எஜாங்கள்" என்று அழைக்கப்பட்டனர். நாம் பூமியில் வரலாற்றில் படித்த அதே அஷ்ட திக் கஜங்கள் தான் இதன் அர்த்தம்.. கவிதைகள் பல புதிது புதிதாக கேட்டுக் கேட்டு கவிதை பித்து பிடித்து அலைந்தான் எல்ஜா.

தினம் புதிது புதிதாக எத்தனை தான் பாடுவது..செய்வதறியாது திகைத்தனர் எ.எ.எக்கள்.. திடீரென ஒரு உத்தரவு போட்டான் எல்ஜா இனி புதிய கவிதை படைக்காவிட்டால் அவர்கள் ஏலீகா நதியில் வீசப்படுவார்கள் என்று அனைவரும் குலை நடுங்கிப் போனார்கள்.

ஏலீகா அங்குள்ள அமில ஆறு அதில் வீசப்படுபவர்களில் சாம்பல் கூட சாம்பலாகும்.. திடீரென எப்லி என்னிடம் ஒரு உபாயம் இருக்கிறது ஏற்கனவே ஏற்பாடு செய்து விட்டேன் கையில் கிடைத்துவிட்டால் அதை செயல்படுத்த வேண்டியது தான்.. என்ன அது..?என்றனர் மற்ற எழுவரும் ஒரே டெசிபலில்.. கொஞ்சம் பொறுங்கள் அதோ பாருங்கள் என்றான்.

வானில் ஒரு பறக்கும் தட்டு பறந்து வந்தது அதில் இருந்து இறங்கிய ஒருவன் விநோத ஜந்து போல இருந்தான்.. அவனுக்கு கண்கள் இருக்கும் இடத்தில் வாய் இருந்தது கால்கள் கை இருக்குமிடத்திலும் கைகள் காலிருக்கும் இடத்திலும் முளைத்திருந்தது முதுகு முன்புறம் இருந்தது.

நீங்கள் இங்கேயே இருங்கள் எனக்கூறிவிட்டு அவனிடம் போய் எதையோ பெற்றுக்கொண்டான் எப்லி.. அவனும் காலாட்டி விடை பெற்றான்.. பறக்கும் தட்டில் ஏறி கதவடைத்து மெல்ல மேலெழுந்து மறைந்தான்.. இப்போது மற்றவர்கள் பரபரப்பாக எப்லியை சூழ்ந்தனர்..

எப்லி யார் அந்த விநோத ஜந்து.. பார்க்கவே படு பயங்கரமாக இருந்தானே என்றார்கள்.. ஓ அவனா அவன் தான் மனிதன் பூமியிலிருந்து வந்திருக்கிறான் பூமியில் இந்தியா எனும் நாட்டில் தமிழ்நாடு என்னும் பிரதேசத்தை சேர்ந்தவன்.. அவன் தான் நம் உயிர்காக்கப் போகிறான்.

எப்படி என்றார்கள்.. இதோ இதைக் கேளுங்கள்.. அவன் தந்த டிஸ்க்கில் உள்ளதை பார்த்து படித்து விட்டு மெல்ல நிமிர்ந்து சொன்னார் எப்லோலில் எப் எப் ஏலில்லே எப்லோல் எய்லறின் எப்லிரவு.... இது எப்படி இருக்கு என்றார் எப்லி எழுவரும் ஆகா அற்புதம் அபாரம் இது யார் எழுதியது என்றார்கள் முதலில் இந்த பாடலை அந்த மொழியில் சொல்லிவிடுகிறேன்.

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு.. இதை எழுதியவர் திருவள்ளுவர் என்னும் புலவர்.. இது போல 1330 இருக்கிறது அது மட்டுமல்ல இதைக் கேளுங்கள் எண்ணாலிலோ எக்லியோ.. எண்ணிலேலோ எக்லிலியோ.. இது எப்படி இருக்கு.

ஆஹா இது இன்னும் பிரமாதம் இதை எழுதியவர் யார்.? இதை எழுதியவர் கம்பர்.. அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினால் இதுதான் அந்த வரி, அதுமட்டுமல்ல ஒளவையார், இளங்கோ, சேக்கிழார், நக்கீரர், பாரதி, பாரதிதாசன் பாசுரம், பிரபந்தம், திருப்பாவை, திருவெம்பாவை என பல நூல்கள் இருக்கிறது.

அதில் பல்லாயிரக்கணக்கான பாடல்களும் இருக்கிறது.. எல்லாவற்றையும் ஏலீன் மொழியில் மொழி பெயர்த்து எழுதவேண்டும் இப்போதைக்கு சில பாடல்கள் எழுதியிருக்கிறேன் இனி அனைத்தையும் மொழி பெயர்த்தால் நம் போல பல கவிஞர்கள் இந்த கிரகத்தில் இன்னும் பல நூறாண்டுகள் உயிர் பயம் இன்றி வாழலாம் என்றார் எப்லி. 

அது சரி இவ்வளவு எழுதிய தமிழர்கள் இதை நன்கு படித்து பயன்படுத்துகிறார்களா என்றனர் எழுவர், நிறைய தொகைக்கு என்னிடம் விற்றுவிட்டார்கள் ஒருவேளை நமக்கு வந்தது போல உயிர் பயம் வந்தால் தான் பயன்படுத்துவார்கள் என நினைக்கிறேன்என்ற போது...

ஏலீன் கிரகத்து சேவலான எக்லோ கூவ அடடே பாருங்கள் நேரம் போனதே தெரியவில்லையே மேற்கில் சந்திரன் உதித்துவிட்டான் விடிந்துவிட்டது வாருங்கள் நாம் காற்றாடிவிட்டு அரண்மனைக்கு செல்வோம் எனக்கூற எ.எ.எக்கள் கையில் இருந்த டிஸ்க்குளில் இருந்து மெல்லச் சிரித்தது தமிழ். சிரிப்பு எனக்கு கேட்டது உங்களுக்கு.????

No comments:

Post a Comment