Friday 4 September 2015

ஆசான்கள்

#குருவணக்கம்1

ஒன்றாம் வகுப்பில் ருக்மிணி டீச்சர் நெடு நெடு உயரம் நெற்றியில் நீளமான பொட்டு அவர் ஆகிருதி அச்சம் தந்தாலும் அன்பான குரல் அவருக்கு தமிழில் உச்சரிப்பு படுசுத்தமாக சொல்லித் தருவார்.. இரண்டு சுழி மூணு சுழி லகர,ளகர, வித்தியாசங்கள் ழகர உச்சரிப்பு சொல்லித்தந்த குரு.

குருவி பறந்து வந்ததாம் எனப்பாடும் போது பாவம் அதற்கு பசித்ததாம் என்பதை அவருக்கே பசித்தது போல பாடுவார்  நமக்கும் பசிக்கும்.. பிள்ளைகளை அடிக்கவே மாட்டார்.. மாம்பழமாம் மாம்பழம் பாடும் போது மாம்பழத்தை தின்றது போல இனிமையாக அவரது குரல் காதில் நிறையும்.

என் பாட்டியின் பெயர் என்பதால் இவரது பெயர் மறக்கவே மறக்காது நினைவுகளில் இதைத்தவிர வேறொன்றும் அவரைப்பற்றி வரவில்லை என் முதல் ஆசிரியர்.. இன்றும் பள்ளிக்கு அருகில் தான் வசிக்கிறார்.. என் முதல் ஆசானை வணங்கி மகிழ்கிறேன்.

#குருவணக்கம்2

இரண்டாம் வகுப்பில் கோகிலா டீச்சர் தும்பைப்பூ போல பளீரென முழுதும் தலை நரைத்திருக்கும் ஆள் அப்படி ஓர் கருப்பு நெற்றியில் ஒற்றை நாமம் போல சிவப்பு சூரணம் அப்பவே ரிடையர் ஆகும் வயது பாடல் சொல்லித்தரும் போது குரல் நடுங்கும்.. இவர் கொஞ்சம் அதிரடி..!

வீட்டுப்பாடங்கள் செய்யாவிட்டால் ஸ்கேல் அடி விழும் இவரது குரலில் நான் பாட முயற்சித்ததும் என் நினைவிலிருக்கிறது இவரும் உச்சரிப்புகளை மிகச் சரியாக சொல்லித்தருவார்.. சொல்லாவிட்டால் அடி கிடைக்கும் என்பதால் நன்றாக படித்துவிடுவோம்.இரண்டாம் ஆசானையும் வணங்கி மகிழ்கிறேன்.

#குருவணக்கம்3

மூன்றாம் வகுப்பில் நாகராஜன் ஸார்.. பதினாறு வயதினிலே பட டாக்டர் போல மீசை இல்லாத முகம் அதே கண்ணாடி..சிலோன் மனோகரைப் போல் சுருட்டை முடி மாநிறம் இது தான் நாகராஜன் ஸார்.. பெரிதாக எதையும் கண்டு கொள்ள மாட்டார்.. ஆனால் உச்சரிப்பில் கறார் காட்டுவார்.

கொஞ்சம் பெண்மை கலந்த குரல் அப்போது எங்கள் பெண் டீச்சர்களுக்கு மத்தியில் ஹீரோ அவராக இருந்திருப்பார் என இப்போது தோன்றுகிறது... யாரையும் அடிக்கவே மாட்டார் அன்பானவர்.. பண்பானவர்.. எங்களின்  ஹீரோ அவர்... என் மூன்றாம் ஆசானையும் வணங்கி மகிழ்கிறேன்.

#குருவணக்கம்4

நான்காம் வகுப்பில் இன்னொரு ருக்மணி டீச்சர் டெரர் லேடி நம்ம டி.ஆருக்கு முன்னோடி.. அடுக்கு மொழியில் அழைத்து முதுகில் அறைவது இவர் பாணி.. கீழுதடுகள் தொங்கிக் கொண்டிருக்கும் முகம்... நிழல் நிஜமாகிறது சுமித்ரா ஸ்டைலில் ஓவல் ப்ரேம் கண்ணாடி அணிந்திருப்பார்.

ஒண்ணு ஓடி வாடா கண்ணு..ஒரு அறை..ரெண்டு ரோஜாப்பூ செண்டு 2அறை மூணு முயல்குட்டி வாலு.. மூணு அறை.. நாலு நாய்க்குட்டி காலு 4 அறைகள் இப்படி வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி என்னும் ஸ்டைலில் அழைத்து அடிப்பார் உச்சரிப்பில் சுத்தம் இல்லாட்டி நிறைய அடி கிடைக்கும்.

நான்காண்டுகளுக்கு முன் வீட்டில் நான் அவரைப்போய் பார்த்தேன் 70 வயதில் அதே டெரர் ருக்மிணி சுவரைப் பிடித்துக்கொண்டு தவழ்ந்து வந்தார் என் பேரு கேட்டு ஓ..அந்த வெங்கடேசனா என்றார் போலியாக.. அவர் நினைவு அடுக்குகளில் நான் இல்லை..ஆனால் நான் வருத்தப்படக்கூடாது...

என்பதற்காக என்னை தெரிந்தது போல் காட்டிக்கொண்டார்.. திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்திருக்கிறார்.. அவரது வாழ்க்கை இப்போது எனக்கு வருத்தமளித்தாலும் என்றும் என் கேப்டன் அவர்.. என் நான்காம் ஆசானை வணங்கி மகிழ்கிறேன்.

#குருவணக்கம்5

ஐந்தாம் வகுப்பில் சாவித்திரி டீச்சர் மூக்கின் இரு பக்கமும் மூக்குத்தி குத்தி நெற்றியில் பெரிதாக அந்த காலத்து எட்டணா சைசில் மெரூன் கலர்க் குங்குமப் பொட்டு, சீனர்கள் போல வாய் அமைப்பு எப்போதும் சிரித்த முகம் கோல்டு ப்ரேம் கண்ணாடி அணிந்திருப்பார்.. மிக மிக அன்பானவர்.

இவரது வீட்டைத்தாண்டி தான் எங்கள் வீடு அதே டிரேட் மார்க் சிரிப்புடன் வீட்டிலிருந்தும் எங்களிடம் பேசுவார்.. இவரது பேரன்கள் ட்வின்ஸ் அவர்களுடன் விளையாடுவோம்.. இவருக்கு கோபம் வரும் என யாரும் சொன்னால் அது உலக மகா பொய்யாக இருக்கும்.

நமது தவறுகளை அழகாக சுட்டிக்காட்டுவார் அவ்வளவு பொறுமை தமிழைப் பிழையோடு எழுதுவது மகாக் குற்றம் என்பதை எங்களுக்குள் விதைத்தவர் இனிமையாகப் பாடுவார்.. என் ஐந்தாம் ஆசானை வணங்கி மகிழ்கிறேன்.

#குருவணக்கம்6

ஆறாம் வகுப்பில் சக்கனையன் சார்..அப்படியே காமராஜர் போலவே இருப்பார்.. வேட்டி சட்டை தான் அணிவார்.. என்ன இவர் முழுக்கை சட்டையை முழங்கை வரைக்கும் மடித்து அணிவார்.. விறு விறு விறுவென பேசுவார் கொஞ்சம் கவனிக்கலைன்னாலும் அவ்ளோதான்.. எதுவும் புரியாது. அறிவிட்டழுத அறிவிட்டழுதன்னா உங்களுக்கு புரியுதா.?!

அது தான் அறிவு கெட்ட கழுதை என்பதற்கு அவரது உச்சரிப்பு.. மகா கோபக்காரர் கையில் பிரம்பு வைத்திருப்பார் தமிழை அழகாக எழுதக் கற்றுக் கொடுத்தவர்.. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியரும் இவரே என் அப்பாவிற்கு தெரிந்தவர்.. அதனால் என் மீது கொஞ்சம் அக்கறை அதிகம்.

எனது ஆறாம் ஆசானை வணங்கி மகிழ்கிறேன்.

#குருவணக்கம்7

ஏழாம் வகுப்பில் நாமகிரி டீச்சர்... நல்ல சிவப்பானவர் ஒல்லியான உருவம் குறும்பு கொப்பளிக்கும் கண்கள் கிண்டலும் கேலியும் கலந்த பேச்சு மிக மிக கலகலப்பானவர்... இவரது வீட்டிற்கும் எங்களது வீட்டிற்கும் சம்பந்தமே இல்லாத திசைகள் ஆனாலும் இவர் வீட்டில் எங்கள் வகுப்பே இருக்கும்.

இந்த டீச்சரைத்தான் நாங்க அக்கான்னும் கூப்பிடுவோம்.. அந்தளவிற்கு பாசமானவர்.. எனது நக்கல் நையாண்டி குணமெல்லாம் நாமகிரி டீச்சர் போட்ட பிச்சை.. அது மட்டுமின்றி ஒருவரைப் போல டிட்டோவாக நடித்துக் காட்டுவார்.. வகுப்பில் சிரிப்பலைகள் எழுந்து கொண்டே இருக்கும்.

வகுப்புக்கு நேரேதிரே தலைமை ஆசிரியர் அறை என்பதால்.. அப்பப்ப போதும் மெதுவா சிரிங்கப்பா எச்.எம் வந்துடுவாருன்னு அடிக்குரலில் சொல்லுவார். ஒரு முறை இவர் கோபப்பட்டு பார்த்து மிரண்டுவிட்டேன்.. ஆனா அந்த முகம் எங்களுக்கு அடிக்கடி காட்டப்படாத முகம்.

அநேகமாக ஏழாம் வகுப்பு பிள்ளைகளை அடிக்காது இருந்த ஒரே டீச்சர் இவங்களாத்தான் இருக்க முடியும் இவர் மட்டும் இப்போதும் நண்பனாகத் தான் எங்களுக்குள் வாழ்கிறார். என் ஏழாம் ஆசானை வணங்கி மகிழ்கிறேன்.

#குருவணக்கம்8

எட்டாம் வகுப்பில் ஶ்ரீனிவாசன் சார்.. நல்ல சிவப்பு ஆறடி உயரம் வழுக்கைத்தலை ஆஜானுபாகுவான தோற்றம் நெற்றியில் பளீரென விபூதிப் பட்டை நடுவில் குங்குமம் வேட்டி சட்டை தான் அணிவார்.. கணீர் குரல் இவரது தோற்றத்திலும் குரலிலுமே ஒரு கிலி எங்களுக்கு.

பிரம்பு வைத்துக்கொண்டதில்லை ஆனால் காதை கிள்ளுவார் பாருங்கள்... சினிமாவில் எதிரிகளின் சித்திரவதைகளை தவிடு பொடியாக்கும் விஜயகாந்தே அந்த சித்திரவதையில் சுருண்டு விடுவார்.. அதற்கு பயந்தே ஒழுங்காக படித்தோம்..நான் படித்தது இரு பாலர் பள்ளி.

கொஞ்சம் விவரம் தெரிந்தும் தெரியாத வயது.. திடீர் திடீரென பாவாடை சட்டை அணியும் என் வகுப்பு பெண்கள் 15 நாட்கள் விடுமுறையில் போய்விட்டு மஞ்சள் பூசி பூரித்த கன்னங்களுடன் தாவணியுடன் வருவார்கள் கண்கள் அலைபாயும் வெட்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.

பெண்கள் மத்தியில் திடீர் தலைவி ஆகிவிடுவார்கள் அவர்களை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும்.. ஆண்களிடம் பேச மாட்டார்கள் எதாவது கேட்டால் போடா பசங்க கிட்ட பேசாதேன்னு அம்மா சொல்லியிருக்காங்க என்பார்.. எங்கள் குறுகுறுப்பு அவர்களை ரசிப்பதோடு முடிந்து விடும்.

இந்த ரெண்டுங்கெட்டான்களை அழகாக சமாளித்தவர் ஶ்ரீனிவாசன் சார் எந்த விஷயத்தை பெண்களுக்கு முன்னால் ஆணுக்கு செய்யணுமோ அதைச் செய்வார் எதை செய்யக்கூடாதோ அதைச் செய்ய மாட்டார்.. பெண்கள் முன்னால் எங்களையோ எங்கள் முன் அவர்களையோ மட்டம் தட்ட மாட்டார். 

ஆனால் சாதிக்க வேண்டிய விஷயங்களை சவாலாக செய்யச் சொல்லுவார் எங்கள் டீன் ஏஜ் குறும்புகளை திசை மாற்றி படிப்பில் கவனம் செலுத்த வைத்த அந்த அணுகுமுறை அபாரமானது என இப்போது புரிகிறது.. என் எட்டாம் ஆசானை வணங்கி மகிழ்கிறேன்.


#குருவணக்கம்

சேலத்தில் சிந்தி இந்து நடுநிலைப் பள்ளி... எனது இந்தப் பள்ளி தான் தமிழை எனக்கு பிழையில்லாது பேசவும் எழுதவும் கற்றுக் கொடுத்த பள்ளி.. இதைப் பல பள்ளிகள் செய்திருக்கலாம் ஆனால் எங்கள் பள்ளி ஒரு படி மேல் எங்களுக்கு எழுத்தை உச்சரிப்பதையும் அக்கறையோடு சொல்லித்தந்த ஆசான்கள் பணிபுரிந்த ஆலயம்.

தலைமை ஆசிரியர் திரு.சிவப்பிராகசம் எங்களுக்கு எட்டாம் வகுப்பில் ஆங்கிலம் எடுத்தவர் கிட்டத்தட்ட அசப்பில் நடிகர் முத்துராமன் போலவே இருப்பார்.. ஆங்கில நாடகங்களை வசனத்துடன் நடிப்புடன் சொல்லித் தந்தவர். பள்ளி ஆண்டுவிழாவில் நான் நடித்த ஒருஆங்கில நாடகம்.

அக்பர் பீர்பால் கதையான Half of whatever Emperor gives என்னும் அந் நாடகத்தின் வசனங்கள் 30 வருடங்களுக்கு பின் இன்றும் என நினைவில் இருக்கிறது.. தமிழ் மீடியம் படித்த எங்களுக்கு அவ்வளவு அழகாக ஆங்கிலம் பேச சொல்லித்தந்தவர் எங்கள் தலைமை ஆசிரியர். இவரது வளர்ப்பில் நாங்கள் நல்ல செடிகளானோம்

ஆசிரியர் திருநாளான இன்று என் தலைமை ஆசிரியரை வணங்கி இன்றைய பதிவுகள் அனைத்தும் என் ஆசிரியர்களை பற்றி எழுத உத்தேசித்துள்ளேன்.. உங்களுக்கும் மனதில் உங்கள் கால காட்சிகள் வரலாம் என் கைப்பிடித்து வாங்களேன் கொஞ்சம் இளமையாகி விட்டு வருவோம்.

வரும்..

No comments:

Post a Comment