Wednesday 9 September 2015

ரெவாட்டோ..

பரபரப்பாக இருந்தது நாசா அத்தனை விஞ்ஞானிகளும் ஒரு சேரக் கூடியிருந்தார்கள் நாசாவின் தலைமை அதிகாரி பெஞ்சமின் பெல்ப்ஸ் அழைப்பில் மிக மிக அவசரமாக கூடியிருந்தனர்.. அவர் முகம் பயங்கர பீதியில் இருந்தது.. சற்று செருமிவிட்டு நடுங்கும் குரலோடு ஆரம்பித்தார் டியர் கைஸ்.! இந்த பூமிக்கு மிகப்பெரும் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது இன்னும் 48மணிநேரத்தில் மிகப்பெரிய யுத்தம் நடக்க உள்ளது என்றார்.

இப்போது அனைவரும் திகிலுடன் அவரைப்பார்க்க.. ஒரு இளம் விஞ்ஞானி மிஸ்டர் சீஃப்.. எந்தெந்த நாட்டுக்கு நடுவே போர் என்றார்.. விரக்தியாக அவரைப்பார்த்து புன்னகைத்து இது நாடுகளுக்கு இடையேயான போர் அல்ல யங்மேன் நம் பூமியின் மீது ஒரு வேற்றுகிரக தாக்குதல்... அதாவது கேலக்ஸி வார்.. என்றார். அனைவரும் ஓஹ்....மைகாட் என்றனர் சேர்ந்திசையாக.

மிஸ்டர் சீஃப்.. அது எந்தக்கிரகம்.?தகவல் உண்மையானது தானா எனக் கேட்டார் நாசாவில் வேலை பார்க்கும் தமிழரான கிருஷ்ணமூர்த்தி.. கிருஷ்ணமூர்த்தி என்னும் க்ருஷ் 15 ஆண்டுகளாக இங்கு பணி புரிகிறவர் மிஸ்டர் கூல் எனப் பேரெடுத்தவர் தன் அபாரத்திறமையால் உதவி தலைவர் பதவிக்கு வந்தவர்.. ஏன் அடுத்த நாசா தலைமை பதவிக்கு அவர் பெயரும் பரிசீலனையில் உள்ளது. ஆம் உண்மைதான் மிஸ்டர் க்ருஷ் என்றார் சீஃப்.

பூமியின் மீது தாக்குதல் நடத்தவரும் கிரகம் ரெவாட்டோ என்னும் கிரகம் பால் வெளியில் யுரெனசின் தெற்கு பகுதியில் இருக்கிறது அதை ஆராய்ச்சி மேற்கொள்ள பூமியில்240 ஆண்டுகள் செலவழிக்க வேண்டும் இப்போது தான் ஒரளவு நாம் விஞ்ஞானத்தில் உயர்ந்திருக்கிறோம்.. அங்கு உயிரினங்கள் இருப்பதும் அவர்கள் நம்மை தாக்கவருவதும் இப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நமது 100 வருடங்கள் அவர்களுக்கு 1மாதம்.

அவர்களது கணக்கில் 2மாதங்களுக்கு முன்பே புறப்பட்டு விட்டனர் தற்போது இன்னும் 48 மணிநேரம் அதாவது அவர்களுக்கு 4விநாடிகள் நாம் தாக்கப்படுவோம் நேற்று நமது சாட்டிலைட்டுகளை அவர்கள் கடந்த போது தான் இவையெல்லாம் நமக்கு தெரிந்தன என்றார் கவலையுடன்.. என்ன நடக்கும் என எதிர்பார்க்கிறீர்கள் சீஃப் என்றார் க்ருஷ். 

அதுதான் தெரியவில்லை அவர்கள் எப்படி இருப்பார்கள் என்ன விதத்தில் தாகுவார்கள் எப்படி ஆயுதங்கள் வைத்திருப்பார்கள் எனத் தெரியவில்லை கையறு நிலையில் இருக்கிறோம்.. என்று சொன்ன போது வேகமாக அறை திறக்கப்பட்டது கண்ட்ரோல் பானலின் தலைமை அதிகாரி ஜேம்ஸ் பரபரப்பாக நுழைந்தார்.. சீஃப் ஆபத்து அவர்கள் பூமியைத் தாக்கிக் கொண்டே வருகிறார்கள் ஆயுதங்களை வீச ஆரம்பித்துவிட்டார்கள்.

முதல் குறியே நம் அலுவலகம் தான் என்ற போது ப்ப்ப்ப்ப்பூம் என்ற பேரொலியோடு ரோஜா நிறக் கதிர் கற்றை ஒன்று நாஸாவின் எதிரே உள்ள கட்டிடத்தை அப்படியே கபளீகரம் செய்தது.. அங்கு ஒரு புல் பூண்டு கூட இல்லை.. நாம் கணித்ததற்கும் மேல் தாக்குதல் அனைவரும் ஓடுங்கள் என்றார் சீஃப்.. தலை தெறிக்க ஓடினார்கள் அடுத்த 48 மணிநேரத்தில் பூமி ரெவாட்டோ கிரக வாசிகளின் பிடிக்கு போனது.

அவர்கள் வந்தகலங்கள் நாம்அணியும் கூலிங்கிளாஸ் வடிவத்தில் இருந்தன. செதில் செதிலான மஞ்சள் தோலும் பிங்க் கலரில் ஆட்டு முகமும் பயங்கரமாக இருந்தன ஆக்சிஜனை சுவாசிக்காதவர்கள் என்பதால் அவர்கள் பிரத்யேக மாஸ்க் அணிந்து இருந்தனர் ஒவ்வொருவரும் மூன்றடி உயரமே இருந்தனர்.. காதுகள் மடிந்து தொங்கின..

நெஞ்சிலும் ஒரு கை இருந்தது வாய் வயிற்றில் இருந்தது. அவர்களின் ஆயுதங்கள் நவீனமாக இருந்தன. பதுங்கி இருந்த மனிதர்களை வீடு வீடாக சென்று பிடித்து இழுத்து வந்து ஒரு பெரிய மைதானத்தில் நிறுத்தி வைத்துக் கொண்டிருந்தார்கள்.. தலை தெறிக்க ஓடிய விஞ்ஞானிகள் அனைவரும் வெகுதூரம் ஓடி விஞ்ஞானி க்ருஷ் வீட்டில் ஒளிந்திருந்தனர். என்ன செய்யலாம் என சீஃப் பை பார்த்து கேட்க அவர் உதடு பிதுக்கினார்.

கிருஷ் பார்த்தார் சரி இன்றோடு நம் வாழ்வு முடிந்தது இனி நொந்து என்ன ஆகப்போகிறது மனைவி வைதேகியை அழைத்து உன் கையால நம்ம ஊர் சாப்பாடு செய் நிம்மதியாக அதை சாப்பிட்டுட்டு போறேன் என்றவரை ஆச்சர்யமாக பார்த்தனர் விஞ்ஞானிகள் இவரு மிஸ்டர் கூல் தான் அதுக்காக இப்படியா.. என்றவர்கள் சாப்பாடு வேண்டாம் என்றார்கள்.

சரி நீங்க இருங்க நான் போய் குளிச்சுட்டு ஃபிரெஷ்ஷா வந்துடறேன்னு போனார்.. அவர் குளிக்கப் போன கொஞ்ச நேரத்தில் ரெவாட்டோ வாசிகள் அந்த வீட்டை சுற்றி வளைத்து நுழைய அதற்குள் க்ருஷ்ஷின் மனைவியும் சமையலையறையில் இருந்து வெளிப்பட வேற்றுகிரக வாசிகளைக் கண்டு அலறி தான் சமைத்ததை கீழே கொட்டிவிட யாரும் எதிர்பாரா அந்தப் பேரதிசயம் நடந்தது..

ரெவாட்டோ வாசிகள் அனைவரும் உயிர் போவது போல அலறி அடித்து ஓடினார்கள் அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் வந்த கலங்கள் எல்லாம் சர் சர்ரென்று விண்ணில் ஏறி தப்பிப் பறந்தன.. எதுவுமே தெரியாத க்ருஷ் தலை துவட்டியபடி குளியலறையில் இருந்து வெளிப்பட அனைவரும் பட படவென கையைத்தட்டி அவரை தூக்கிக் கொண்டார்கள்.

சீஃப் ஒருபடி மேலே போய் முத்தமே தந்துவிட்டார்... யூ மேட் எ ஒண்டர் ஜாப் க்ருஷ்.. கத்தியின்றி ரத்தமின்றி ரெவாட்டோவாசிகளை கதிகலங்கடித்து விட்டீரே.. உங்கள் ஐடியாவால் ரெவாட்டோவாசிகளின் பிடியில் இருந்து பூமி தப்பியது அவர்கள் ஓடிவிட்டனர் என்றார் சீஃப்.. என்ன ஓடிவிட்டார்களா எப்படி என்றார் ஆச்சர்யத்துடன் க்ருஷ்..!

ஆம் நம்மை சிறைபிடிக்க வந்தாரகள் உங்கள் மனைவி அவர்களை பார்த்து அலறி கையில் இருப்பதை கொட்டிவிட அவர்கள் ஓடிவிட்டனர் என்றபோது அது என்ன என ஆவலுடன் பார்த்தார் க்ருஷ்..! அங்கு தரையில் கொட்டிக் கிடந்தது உப்புமா..!

No comments:

Post a Comment