Friday 18 September 2015

ஹிட்லரின் அப்பா...

#கற்பனையாக_ஒரு_கொலை

தன் ஆராய்ச்சி லேபில் இருந்து உற்சாகமாக வெளிவந்தான் குரு. இன்னும் 3 மணிநேரத்தில் அவன் கிளம்பவேண்டும் அதன் பின்னே அவன் லட்சியங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறிவிடும். அவன் கடுமையான உழைப்பு வீண் போகவில்லை வெற்றிகரமாக தன் கண்டுபிடிப்பை தயாரித்து விட்டான் பயணத்துக்காக சில பொருட்கள் வாங்கத்தான் கிளம்பியிருக்கிறான்.

அவன் சென்று வருவதற்குள் அவன் கண்டுபிடிப்பை பார்ப்போமா.. குரு தயாரித்து முடித்தது டைம் மெஷினை ஆம் இது கடந்த காலத்துக்கு மட்டும் செல்லும் சிறப்பு டைம் மிஷின்..  அந்த இறந்த காலத்தில் அவன் சிலரின் தந்தைகளை கொலை செய்ய வேண்டியிருக்கிறது.

பதறாதீர்கள்.. இவன் ஒரு பட்டியல் வைத்திருக்கிறான் அதில் முதலாவாதாக இருப்பவர் ஹிட்லரின் தந்தை.! நோக்கம்..சிம்பிள் ஹிட்லரின் தந்தை இருந்தால் தானே ஹிட்லர் பிறக்கப்போகிறார் ஆனால் அதற்கு முன்பே அவரைக் கொன்றுவிட்டால் ஹிட்லரே பிறக்கப்போவதில்லை அல்லவா.

சிரத்தையெடுத்து டச்சு மொழி கற்றுக்கொண்டான் ஹிட்லரின் பிறந்த ஊரான ஆஸ்திரியாவைப் பற்றி அறிந்து கொண்டான்.. ஹிட்லரின் தந்தை பெயர் அலாய்ஸ் ஷிக்கில்பெர்க் என்பதையும் 1837 ஜுன் 7 ஆம் தேதி ஆஸ்திரியாவில் உள்ள strones என்னும் ஊரில் waldviertel என்ற இடத்தில் பிறந்தவர் என்பதையும் தெரிந்து கொண்டான்.

அவர் பிறந்த மருத்துவமனை அதைப்பற்றிய விவரங்கள் அவர் பிறந்த நேரம்
எல்லாம் அறிந்து கொண்டான் அவன் மூளைக்குள் இருந்த திட்டம் இது தான்..டைம் மிஷினில் ஏற வேண்டியது 1837 ஜுன் 7 ஆம் தேதிக்கு போக வேண்டியது ஆஸ்பத்திரியில் குழந்தையை மூச்சடக்கி கொல்ல வேண்டியது. சத்தமில்லாமல் திரும்பி வந்துவிட வேண்டியது. அவ்வளவு தான்.

திட்டத்தில் ஒரே ஒரு பாதகமான விஷயம் அவனது மிஷினில் ஒரு ஆண்டின் ஒரு நாளுக்கு ஒருமுறை மட்டுமே போக முடியும்.. தவறினால் அந்த ஆண்டு மிஷினில் இருந்து மறைந்து விடும் ஒரு முறை சென்று வந்த அதே ஊருக்கு அடுத்தது 50 ஆண்டுகள் கழித்து தான் போக முடியும் ஆகவே கவனக் குறைவின்றி நடந்து கொள்ளவேண்டும்.. 18 ஆம் நூற்றாண்டின் உடைகளோடு அதோ திரும்பிவிட்டான் குரு.. இனி நடப்பதை பார்ப்போம்.

நீட்டாக ஷேவ் செய்து கொண்டான் ஒரு சுகமான குளியல் போட்டான்.. மெல்லிய இசைக் கேட்டுக் கொண்டே ஒரு சூடான க்ரீன் டீ குடித்தான் உணவு உட்பட பயணத்துக்கு தேவையான பொருட்கள் எல்லாம் இருக்கிறதா என சரிபார்த்தான் எல்லாம் சரியாக இருந்தது.. உற்சாக விசில் அடித்தபடியே 18 ஆம் நூற்றாண்டின் உடையணிந்தான்.

கண்ணாடியில் அவன் உருவம் பார்த்ததும் விசில் பெரிதானது அவ்வுடை அவனுக்கு அப்படியே பொருந்தியிருந்தது.. பெரிய தொப்பி முகத்தை நன்றாக மறைத்தது.. மிஷினில் ஏறினான்.. எரிபொருள், முதலுதவி, ரிப்பேர் சாதனங்கள் எல்லாம் சரி பார்த்தான். மிகச்சரியாக ஆண்டு மாதத்தை செட் செய்தான் ஒரு எண் தவறினாலும் எல்லாம் போச்சு இல்லியா.

செட் செய்த எண்ணை மீண்டும் சரிபார்த்தான் 1837 ஜுன் 7 சரிதான் ஓகே கொடுத்தான்.. மிஷின் கிளம்பியது.. ஆஸ்திரியா காற்று கொஞ்சம் ஏசியாய் வீசிக்கொண்டிருக்க அவனது மிஷின் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இறங்கியது. அதை பத்திரமாக மறைத்தான் மெல்ல ஊர் செல்லும் பாதையில் நடந்து ஆங்காங்கே விசாரித்து சரியாக மருத்துவமனையை அடைந்தான்.

சாலையில் கோச் வண்டிகளும் குதிரைகளும் சென்று கொண்டிருந்தன.. குருவை யாரும் வித்யாசமாக பார்க்கவில்லை.. நேரத்தை பார்த்தான் அது அந்த காலத்து அவர்கள் நாட்டு நேரப்படி காட்டியது பாக்கெட்டில் கைவிட்டு குறிப்பை பார்த்தான் ஹிட்லரின் தந்தை பிறந்து 5 மணிநேரம் ஆகியிருந்தது..மெல்ல மருத்துவமனைக்குள் சென்றான்.

ஒரு நடுத்தர வயது செவிலியிடம் ஷிக்கில்பெர்க் குடும்பத்து குழந்தை அலாய்ஸ் ஷிக்கில்பெர்க் என்றான் (அங்கு குழந்தைக்கு பேரிட்டு தான் அட்மிட் செய்வார்கள் என்பதையும் படித்திருந்தான்) 8 ஆம் எண் அறை என்றாள் நர்ஸ்.. மெல்ல நடந்தான் 8 ஆம் எண் அறையில் இருந்து ஒரு ஆண் வெளியேறினார் (ஹிட்லரின் தாத்தா) குஷியுடன் நடந்தான்.

பிரசவ மயக்கத்தில் அப்பெண் இருக்க குழந்தை தொட்டிலில்.. யாருமில்லை தன் அதிர்ஷ்டத்தை நினைத்து மகிழ்ந்தான் அடுத்த 10 நிமிடம் எல்லாம் முடிந்தது.. வந்த வழியே ஓசையின்றி கிளம்பி தெருவில் இறங்கி பதறாமல் நடந்து மிஷின் நின்ற இடத்திற்கு வந்து மிஷினில் ஏறி 2015 ஆம் ஆண்டை அழுத்தி கிளம்பினான்.. அட எவ்வளவு சுலபமாக முடிந்தது.

இன்னும் அவனாலேயே நம்ப முடியவில்லை.. ஒரு சரித்திரத்தையே அல்லவா மாற்றி இருக்கிறான்! இதோ மிஷின் லேபை அடைந்தது.. வெற்றிகரமான பயணம்.. இறங்கியவுடன் நேராக ஓடினான் கம்ப்யூட்டரை ஆன் செய்து கூகுளில் அடால்ஃப் ஹிட்லர் என அடித்தான்..அப்படிஎன்றால் யார் என்று கேட்கும் என அலட்சியமாகப் பார்த்தவன் அதிர்ந்து போனான்.

ஹிட்லரைப் பற்றி எல்லாம் இருந்தது ஹிட்லரின் அப்பாவே பிறந்த 5 மணிநேரத்தில் கொல்லப்பட்ட போது ஹிட்லர் எப்படி.? ஆண்டு நாள் மாதம் இடம் எதுவும் மாறவில்லையே வெறிபிடித்தது போல கத்தினான்.. எப்படி நிகழ்ந்தது தவறு இனி அங்கு செல்ல 50 ஆண்டுகள் ஆகுமே.! குழம்பினான் அதே நேரத்தில் நாம் மீண்டும் 1837ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் தேதிக்கு போய்வருவோம் அதோ அந்த பெஞ்சில் பேப்பர் படிக்கிறாரே...

அவருக்கு பின்னால் போவோமா The Wiener  என்னும் நாளிதழை விரித்து வைத்து இருக்கிறாரா அதில் வலப்பக்கம் ஓரத்தில் ஒரு குட்டிச் செய்தி தெரிகிறதா படியுங்கள் என்ன விழிக்கிறீர்கள்.! ஓ டச்சு தெரியாதா நானே சொல்கிறேன்..  Strones என்ற ஊரில் Waldviertel என்ற இடத்தில் நேற்று ஒரு குழந்தை அடையாளம் தெரியாதவரால் கொல்லப்பட்டது.

அக்குழந்தை பிறந்து 5 மணி நேரத்தில் இச்சோக சம்பவம் நடைபெற்றது. அக்குழந்தையின் பெயர் மிலாஸ் நிக்கில்பெர்க் ஆஸ்திரிய மன்னர் அங்கு பலத்த பாதுகாப்பு போட... வெயிட் வெயிட் ஹிட்லரின் தந்தை பெயர் அலாய்ஸ் ஷிக்கில்பெர்க் தானே.!இங்கு தான் இருக்கு ட்விஸ்ட் குருவுக்கு குழந்தையை அடையாளம் சொன்ன அந்த நர்சுக்கு காது கொஞ்சம் மந்தம்.

No comments:

Post a Comment