Saturday 19 September 2015

கனவான கனவு..

#இதுவும்_சயின்ஸ்ஃபிக்ஷனே

ஜான் இந்த ஊருக்கு புதிதானவன் அவன் சொந்த ஊர் தமிழ்நாடு. இந்த ஊருக்கு அவன் வருவது இதுவே முதன்முறை..அவ்வூரின் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தான்.. சாலையில் மக்கள் அனைவரும் சீரான வேகத்தில் சாலைவிதிகளை மதித்து வாகனம் செலுத்திக் கொண்டிருந்தனர்.. ஹெல்மெட் இல்லாதவர்களையோ சீட் பெல்ட் அணியாதவர்களையோ அங்கு பார்க்கவே முடியவில்லை.

சிக்னல்களை தாய் தந்தையரை விட அதிகம் மதித்தார்கள். ஒழுங்கு என்றால் அப்படி ஒரு ஒழுங்கு.. பேருந்து நிறுத்தங்களில் பேருந்து வரும் வரை மக்கள் அமைதியாக நின்று வரிசையில் ஏறினார்கள்.. எந்தத்தள்ளு முள்ளும் இல்லை. கொஞ்சம் தமிழ்நாட்டை நினைத்துப் பார்த்தான்.. சிரிப்பு பொத்துக் கொண்டுவந்தது. அவனது பேருந்து வந்தது.

அடடா இதுவல்லவா அரசுப்பேருந்து.. புளிபோட்டு துடைத்த வெள்ளி குத்து விளக்கு போல பளபளத்தது.. உள்ளே ஒரு காஷ்மீர் போல ஏ.சி.. அழகிய குஷன் சீட்டுகள் பார்த்ததும் குஷியைத் தந்தது. சுத்தமாக பராமரிக்கப்பட்ட பேருந்து பஸ்ஸிற்குள் ஓடிகலோன் ஸ்ப்ரே மணத்தது. இத்தனைக்கும் இது டவுன்பஸ் தான் தனியார் ஆம்னி பஸ்களை விட சிறப்பாக இருந்தது.

அப்படியே நம்ம ஊரு டவுன் பஸ்களைப் பற்றி நினைத்துக் கொண்டே மெல்ல கைப் பையிலிருந்த வாழைப்பழத்தை தின்ன எடுத்தான் பதறி ஓடிவந்தார் கண்டக்டர் சார் பேருந்தில் உணவுப் பொருட்களை சாப்பிட அனுமதி இல்லை மன்னிக்கவும் என்றார் மிக அன்பாக. அவன் செல்லும் இடத்தை சொல்லி 500 ரூபாய் தந்து டிக்கெட் கேட்டான்.

கொஞ்சமும் முணுமுணுப்பின்றி 12.50 பைசா டிக்கெட்டுக்கு மிகச்சரியாக சில்லறை தந்துவிட்டு தங்கள் பயணம் இனிதாகட்டும் என்று கூறிச் சென்றார் கண்டக்டர். அவனுக்கு ஆச்சரியம் தாளவில்லை.. கையில் இருந்த ரூபாய்களும் சலவைத்தாள்களாக இருந்தன.. எப்படி இந்த ஊரில் மட்டும் இப்படி.!ஒரு சிக்னலில் நின்ற போது எதிரே ஒரு ஷாமியானா பந்தல்.

அதில் மந்திரிகள் நின்றுகொண்டு நாற்காலியில் அமர்ந்திருந்த பொது மக்கள் ஒவ்வொருவரிடமும் போய் மனு சேகரித்து கொண்டிருந்தார்கள். அந்த மனு இத்தனாம் தேதிக்குள் சரிபார்த்து ஆவன செய்யப்படும் என அங்கேயே உறுதிமொழிப் பத்திரம் எழுதித் தந்தார்கள். மக்கள் சராமரியாக கேட்ட கேள்விகளுக்கு பொறுமையுடன் பதில் சொன்னார்கள்.

ஆச்சரியம் அவனுக்கு அதிகரித்துக் கொண்டே போனது அவன் வரும் இடம் வர இறங்கினான்.. மெல்ல நடந்தான் பொதுமக்கள் நடைபாதையில் நடந்து கொண்டிருந்தனர்.. நடைபாதைக் கடைகளே இல்லை சாலைகள் எல்லாம் அவ்வளவு சுத்தம். இப்போது இன்னொரு காட்சி ஹெல்மெட் இல்லாது வண்டி ஓட்டி வந்த ஒரு இன்ஸ்பெக்டரை மக்கள் நிறுத்தினர்.

அவர்கள் அவரிடம் லைசென்ஸ் கேட்டு R.C, இன்சூரன்ஸ், புகை பரிசோதனை முதலிய ஆவணங்களைக் கேட்டு வாங்கி அவைகளை பரிசோதித்து அவரை திட்டி அறிவுரை சொல்ல அவரும் நடந்த தவறுக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்டு வண்டியை தள்ளிக் கொண்டு போனார். ஜான் இப்படி ஒரு ஊரில் பிறக்கவில்லையே என வருந்தினான்.

சாலையில் ரேஷன் கடைகளில் இருந்து சரக்குகள் வண்டியில் ஏற்றப்பட்டு வீடுவீடாக விநியோகிக்கப்படும் அதிசயத்தையும் கண்டான். சுத்தமான ஆறு எங்கும் மரங்கள் எல்லா இடத்திலும் குடிநீர் கல்வி மருத்துவம் இலவசம் இப்படி அடுத்ததடுத்து அவன் பார்க்க பார்க்க அவன் பிரமித்து போனான். லஞ்சம் ஊழல் என்றால் என்னவென்று கேட்டார்கள்.

புத்தம் புதிதாக போட்டது போல இருக்கும் இச்சாலைகள் அமைத்து 8 வருடங்கள் ஆனது என்பதை அங்குள்ள திட்டப்பலகைகளில் அறிந்தான்  திட்டப்பல.. அட என்ன இந்த ஊரின் பெயர் இந்தப் பலகையில் எழுதப் பட்டுள்ளது இது தான் இந்த ஊரின் பெயரா..? சற்று அருகே சென்று படித்தான் அதே தான் "தமிழ்நாடு அரசு"... ஓ..ஓஒ..ஓஒ..ஓஒ..ஓஒ...

அலறியபடி ஜான் எழுந்தபோது அதிகாலை மணி 5 ஜன்னல் வழியாக பார்த்தான் சாலையெங்கும் குப்பை நிறைந்திருக்க நடுரோட்டில் நான்கு மாடுகள் படுத்திருக்க பொங்கி வழிந்த சாக்கடை நீரின் துர்நாற்றம் காற்றில் வந்து அவன் நாசியில் மோத சற்று நிதானித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டு யோசித்தான் புரிந்தது அவன் கண்டது கனவென்று.

No comments:

Post a Comment