Saturday 5 September 2015

அரவிந்தனுக்கு...

#யாதுமாகி_நின்றேன்

தம்பி இரா.அரவிந்த் எழுதிய புத்தகம்.. கவி இளவல் தமிழ் என்றால் முகநூலில் அனைவருக்கும் தெரியும். மிக இளைஞர் அவரது எழுத்துகளில் ரெளத்திரம் தெரியும்.. அவரது சொல்லாடலும் கற்பனைத்திறனும் பலரை இங்கு வியக்க வைத்திருக்கிறது. சிலாகிக்க வேண்டிய கவிஞன் அவன்.

நண்பர் ஷான் கருப்பசாமி அவர்களின் பார்வதி படைப்பகம் மூலம் வெளி வந்த முதல் புத்தகம் யாதுமாகி நின்றேன்.. இப்புத்தகத்தில் கவிதையின் பல பரிணாமங்களை தொட்டிருப்பார்.. மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைகூ எல்லா வடிவங்களும் அதில் இருக்கும். வியக்க வைக்கும் சிந்தனை வரிகள்..

வேலத்தில் கிளையினிலே விழித்ததொரு காகம்
வேளைக்கேற்றபடி வெயில் கீற்றிங்கில்லை
மேலே கீழ்த்திசையில் மிசையில் சுடரில்லை
மேகக்கூட்டமதில் ஏனோ ஒளியில்லை
மேதினி மேவுமொளி மேனி நொந்ததுவோ..

என்று உயிர்த்துளி என்னும் கவிதையில் மகாகவி பாரதியாரின் எழுத்து தெரியும் இதை பல கவிதைகளில் காணலாம் அதே போல தீதும் நன்றும் என்ற கவிதையில்..

தண்நிறை வாடைக்காற்று.. கார் இறை கருக்கங்கூட..
வெண்நரைப் பூவிதழன்ன.. மென்பறை மேகம் புழைய..
பட்சியால் பரவை கூட.. பேய்மழை பெய்யுது என்பார்

இப்படி மரபுக் கவிதைகளிலும்..

கசிந்துருகி நீ எழுதிய கவிதை காகிதத்தின் மேல் 
என் கண்ணீர்த்துளிகளைத் தூவிவிட்டிருக்கிறேன்
பறந்து விடாமலிருக்க...

தாஜ்மகால் வேண்டாம் - தாலி கட்டி விடு என்னும் புதுக் கவிதை இப்படித் தான் முதல் பந்திலேயே சிக்சர் அடித்தது போல ஆரம்பித்து வாசிக்கத் தூண்டுகிறது. தெருவோர தேவதை கவிதையை இப்படி துவக்குகிறார்....

கஞ்சி ஊத்த ஆளுமில்ல.. கட்டிக்கிட துணியுமில்ல..
வக்கத்த ஜென்மத்துக்கு.. வெக்கமுன்னு ஒண்ணுமில்ல..
கையேந்தி பிச்ச கேட்டும்.. காசு போட யாருமில்ல..

மண் மணக்கும் வட்டாரத் தமிழில் அந்தக் கவிதை.. முரண் என்னும் தலைப்பில் எழுதிய கவிதைகள் சில ஹைகூவுக்கு நிகராக வருகிறது..

மரங்களை வெட்டாதே
எழுதிப்போடப்பட்டிருந்தது
மரப்பலகையில்.       

மெழுகுத் திரி டப்பாவிற்குள்ளும் 
மென்மையாய் படர்ந்திருக்கிறது 
ஒரு இருட்டு.
                
இன்னும் ரசிக்க வைக்கும் கவிதைகள் பல இருக்கிறது  இப்புத்தகத்தில்.. இந்த இளைஞனுக்கு வாய்ப்பளித்த நண்பர் ஷான் கருப்பசாமிக்கு பூங்கொத்துடன் வாழ்த்துகள்.. நீங்கள் படிக்கவும் பரிசளிக்கவும் ஒரு நல்ல புத்தகம். வாழ்த்துகள்டா தம்பி அரவிந்த் நீ இன்னும் பல சிகரம் தொடுவாய்.

மதுரை புத்தக கண்காட்சி அரங்கு எண்134 & 122 இந்த புத்தகம் கிடைக்கிறது வளரும் கலைஞனை வாழ்த்துவதோடு அல்லாமல் புத்தகங்களை வாங்கி ஆதரிப்போம் நண்பர்களே.

No comments:

Post a Comment