Saturday 26 September 2015

மணி மாமா

#தாய்மாமன்_சீராட்டு

வெங்கடேசா... நம்ம மணி மாமாவுக்கு சீரியஸ், இன்னும் 3 நாட்கள் தான்... டாக்டர்கள் கெடு விதிச்சிட்டாங்க எல்லாரும் வந்து பார்த்துட்டு போறாங்க நீயும் வாடா.. சேலத்திலிருந்து தம்பியின் அலைபேசிக் குரல் என்னை அசைத்தது.. மாமாவைக் காணப் புறப்பட்டேன்.. காரில் விரையும் போது பயணத்தில் தன் சிறகினை விரித்தன பழம் நினைவுகள்.

மணி வெங்கட்ராமன் என்கிற மணி மாமா.. என் தாத்தா பாட்டிக்கு 8 குழந்தைகள்.. மிகச்சரியாக 4 ஆண்கள் 4 பெண்கள்... என் தாயார் தான் மூத்தவர் அதற்கு அடுத்தவர் மணி மாமா.. என் அம்மா ஒருவர் தான் அவருக்கு மூத்தவர்... மற்றபடி வீட்டில் மற்ற அறுவருக்கும் மூத்தவர் மாமா.

என் அம்மாவுக்கு தலைமகன் நான்.. அந்த வீட்டின் முதல் பேரன்.. இந்த ஒரு கோட்டாவில் நான் கொஞ்சம் எல்லாருக்கும் ஸ்பெஷல்.. மாமாவின் தோள்களில் குழந்தையான நான் செவ்வாய்பேட்டைக்கும் நாராயண நகருக்கும் மாமாவின் தோள் சர்வீசில் வாராவாரம் டிரிப் அடிப்பதுண்டு.

என்னை போல ஒரு கனத்த குழந்தையை ஒரு 10 நிமிடம் சுமப்பதே கடினம் ஆனால் என்னை சுகமான சுமையாய் கையில்,தோளில்,முதுகில், சுமந்தவர் மாமா...தாத்தாவின் விடாப்பிடி குணமும், பாட்டியின் ஹ்யூமர் சென்சும், இன்ன பிறசொந்தங்களின் ஒரு சில ஜீன்களும் எனக்குள் காக்டெயிலாக இருந்ததாம்.

இது அடிக்கடி மாமா என்னிடம் சொல்லும் வார்த்தை.. தாத்தாவின் அப்பா பெயர் தான் என் பெயர்.. என்னில் அவரையும் கண்டதாக தாத்தா சொல்லுவாராம்.. தாத்தா இறக்கும்போது எனக்கு 4 வயது தான்.. அவர்கள் சிலாகித்தது பற்றி எனக்கேதும் தெரியாது.. மாமா தான் சொல்லுவார்.

சிறு வயதில் வீட்டில் கோபித்துக்கொண்டு வெளியேறியவர் 4ஆண்டுகள் கழித்துதான் திரும்பினார்.. அதாவது என் 4 வயதில் காணாமல் போன மாமா என் 8 வயதில் தான் திரும்ப காணக்கிடைத்தார். அதன் பிறகு இன்றுவரை அவர் எனக்குள் நிரம்பிய தருணங்கள் ஏராளம்..ஏராளம்..

கொஞ்சம் சாயலில் இளவயது நடிகர் விஜயகுமார் போல இருப்பார்..கனத்த சரீரம், நெற்றி நிறைய விபூதி நடுவில் குங்குமம் சந்தனம், வெள்ளை வேட்டி சட்டை, காதில் வெண்ணிறக்கல் ஜொலிக்கும் கடுக்கன். வலது கையில் ஃபீவேர் லீபோ கருப்பு ஸ்டிராப் வாட்ச் கொஞ்சம் ஜவ்வாது மணக்கும்.

கணீர் குரல்.. பஜனை பாடல்கள் பக்திப்பாடல்கள் பாடுவதில் நல்ல குரல் வளம்... அருமையாக மிருதங்கம் வாசிப்பார்.. கேள்வி ஞானம் மட்டுமே அபார நினைவுத்திறன்.. (இதிலும் நான் அவரைப்போல என்பாள் பாட்டி) மாமாவிடம் பேசிப் பார்த்தவர்கள் பொதுவாக ஒன்று சொல்லுவதுண்டு..

மணியிடம் பேசி ஜெயித்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய வக்கீலையும் வென்றுவிடலாம் என்று.. தர்க்கம், குதர்க்கம், எள்ளல், நகைச்சுவை, எதார்த்தம் என மாமா பேசுவதை பல முறைக் கேட்டதுண்டு.. தன் தரப்பை அழகாக சொல்லி அடுக்கடுக்காக வாதங்களை முன் வைப்பார்.

சில நேரங்களில் எதிரில் வாதாடுபவரே ஆவென்று ரசித்து கேட்டு சிலாகித்த காமெடியும் நடந்திருக்கிறது. அவ்வளவு அழகான வாதங்கள்.. அறிவான வாதங்கள்.. நிச்சயம் மாமா வக்கீலுக்கு படித்திருந்தால் இன்று ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிகளில் ஒருவராய் இருந்திருப்பார். 

மாமாவுடன் தான் நான் நிறைய தெலுங்குபடங்கள் இந்திப்படங்கள் பார்த்திருக்கிறேன்..மாமா சரளமாக இந்தி,தெலுங்கு,கன்னடம், ஆங்கிலம் பேசுவார்.எங்கு அழைத்துப்போனாலும் பிரியப்பட்டதை வாங்கித் தருவார் அதைவிட இதுதான் வாங்கித்தரமுடியும் எனச்சொல்லி அழைத்துச் செல்வார். மொழி புரியாத போது அதை அழகாகச் சொல்லித்தருவார்.

என் 11 வது வயதில் தாயாரை இழந்திட்ட பின் எங்கள் மீதான அவர் பாசம் இன்னும் அதிகமாகிப்போனது.. அப்போது அவரும் ஒரு சராசரிக் குடும்பம் ஆனாலும் அக்கா குழந்தைகள் என்று அவரால் முடிந்தவரை எங்களுக்கு உதவுவார். என் அப்பாவிடம் ஓட்டல் தொழிலைக் கற்றுக் கொண்டார்.
 
அதன்பின் என் சேலத்து வாழ்க்கையை 15 வயதில் துறந்து மதுரை குடியேறிய பின்பு ஆண்டுக்கொருமுறை உறவினர் ஆனார் மாமா.. என் 21 வயதில் என் தந்தையும் மறைந்து மொத்தக் குடும்பப் பொறுப்பும் என் தோளில் விழுந்த போது எனக்கு தைரியம் சொன்னவரும் அவரே.

அதன் பிறகு எனது திருமணம் தங்கை தம்பிகள் திருமணம் எனது பணி பிறகு சொந்தத்தொழில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பட்டம் புகழ் என நான் படிப்படியாக உயர்ந்தபோது பலர் என்னை பாராட்டினர்..மாமா மட்டும் இப்படி சொன்னார் வெங்கடேசா இந்த நிலைக்கு நீ வராது இருந்து இருந்தா தான்அது ஆச்சரியம் அதற்கான தகுதிகள் உனக்கிருக்கு என்றார்.

மாமாவிற்கும் ஒரு ஓட்டல் கனவு உண்டு உயர்வான தரம் நல்ல சுவை குறைந்த அளவே வியாபாரம் என்பது அவர் கோட்பாடு.. அதாவது தினமும் 100 இட்லி,50 பொங்கல், 60 பூரிசெட் இவ்வளவு தான் வியாபாரம். குறைவாகச் செய் அதை நிறைவாகச்செய் என்பதே தாரக மந்திரம்.

அதுதான் டிமாண்ட்டை அதிகரிக்கும் 10 மணிக்கு மேல் போனால் பொங்கல் கிடைக்காதே என வாடிக்கையாளர்கள் பதறும் படி அதன் சுவையும் தரமும் இருக்கவேண்டும் என்பார். இதை ஒரு லட்சம் தடவையாவது என்னிடம் சொல்லியிருப்பார்.. அவ்வளவு ஆவல்.

பொதுவாக மாமாவிடம் ஒரு பழக்கம் உண்டு.. தான் சொல்லுவதை மறை பொருளாக சொல்லிவிட்டு ஒரு சின்ன கேப் விட்டு நம்மை பார்ப்பார் நாம் அதை புரிந்து கொண்டோம் என்றதும் அவர் கண்களில் ஒரு குறும்பும் புரிந்து கொண்டாயா என்ற குறும் புன்னகையும் அவர் இதழில் விரியும்.

என் கார் மாமாவின் வீட்டு வாசலில் நின்றது.. உள்ளே விரைகிறேன் சித்திகள், மாமாக்கள், தம்பி, தங்கைகள் அவர்களது பிள்ளைகள் என கல்யாணச்சத்திரம் போல இருந்தது வீடு ரெண்டு நாட்களுக்கு முன் வீட்டில் ஒரு ஹோமம் என நடுஹாலில் இருந்த ஹோம குண்டம் சொல்லியது.

வாடா வெங்கிட்டா.. ( பாட்டி வீட்டில் அழைப்பது) மாமா எழுந்துட்டார் ஒரிரு வார்த்தை பேசறார் எல்லாரையும் பார்த்தது அவருக்கு ஒரு புத்துணர்ச்சி வா வா உன்னை பார்த்தால் இன்னும் தெம்பாவார் என்றாள் சாந்தி சித்தி.. ஜெயபாரதி சித்தியும் வந்தார் அறைக்குள் நுழைந்தோம்..

கட்டிலில் மாமா.. பேரதிர்வுகள் அலையலையாய் தாக்கியது கணீர் குரலில் ஆஜானுபாகுவாக பளிச் விபூதிப் படையுடன் இருக்கும் மாமா கசக்கி எறிந்த காகிதமாக கட்டிலில் குவிந்திருந்தார்.. ஏதோ சோமாலியா மனிதர் போல ஒருவரைக் காட்டி தாய் மாமன் என்றார்கள்.. அழுகை பீறிட்டது..

யார் வந்திருக்காங்க பாருண்ணா என சித்தி சொல்ல அலங்க மலங்க விழித்தார்.. யாரு என்றார் காற்றாக... வெங்கடேசன், நம்ம வெங்கிட்டா தெருவில் கேட்கும் படி கத்தினாள் சித்தி.. காது கேட்காதாம்..! ஏற்கனவே பைபாஸ் போட்ட இதயம், கிட்னி கோளாறு, தற்போது கல்லீரல் பழுது..!

ஒரு படத்தில் நடிகர் விவேக்கிடம் தாடி பாலாஜி சொன்ன காமெடி போல நோய்களை அடுக்கினார்கள் காலில் ரத்த ஓட்டமில்லையாம்.. வாழைப்பூ கலரில் இருந்தன கால்கள்.. என் கண்களில் இருந்து கசிந்த நீரை நிறுத்தியது வெங்கடேசனா.. என்ற மாமாவின் குரல்..

எல்லாருக்கும் ஆச்சரியம்.. எழுப்பி தன்னை உட்கார வைக்கச்சொன்னார்.. செய்தார்கள் என் கைகளை ஆசையோடு தன் நடுங்கும் கைகளால் பற்றிக் கொண்டார்.. வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார்..மிக மிக சிரமப்பட்டு என் நலம் என் குடும்ப நலம் எல்லாம் விசாரித்தார். மெல்ல நான்

"மாமா ஒரு ஓட்டல் ஆரம்பிச்சு இருக்கா என் மனைவி என ஆரம்பிக்க அடுத்து நடந்தது தான் ஆச்சரியம்..!! தொண்டையை செருமிக் கொண்டார் அடுத்த 20 நிமிடம் தன் ஓட்டல் அனுபவங்களை குழந்தை போல கூறத் தொடங்கினார்.. அதில் அவரது லட்சிய ஓட்டல் கதையும் இருந்தது.

அன்றும் ஒருகிலோ கோதுமைக்கு எவ்வளவு பூரி வரவேண்டும் எவ்வளவு செலவு எவ்வளவு வரவு எனக்கேட்டு ஒரு கேப் விட்டு என்னைப்பார்த்தார்... கணக்கிட்டு 500 ரூபாய் மாமா என்றதும் அவரது கண்ணில் அதே பழைய குறும்பும் உலர்ந்த உதடுகளில் அதே குறும்புன்னகையும் விரிந்தது..!

வசூல் ராஜா MBBS படத்தில் கேரம் போர்டு சத்தத்தில் எழுந்து வரும் காகா ராதாகிருஷ்ணன் எனக்கு ஞாபகம் வருகிறார்.. நினைவுகளுக்குள் ஒளிந்திருக்கும் பிடித்த விஷயங்களை பேசுவது நோயுள்ளோருக்கு எவ்வளவு பெரிய மருந்து என்பதை அனுபவப் பூர்வமாக தெரிந்து கொண்டேன்.

அன்று நிம்மதியாக உறங்கினார்.. மறுநாள் விழித்ததும் கொஞ்சம் அதிகம் சாப்பிட்டாராம்.. வீடெல்லாம் ஆனந்தம்.. வெங்கட்டா இது போதுண்டா மாமா இன்னும் கொஞ்சம் ஆயுளுடன் இருப்பார் என்றனர் ஆனந்தக் கண்ணீருடன்.. இப்போது எல்லாரும் தினமும் அவருடன் பேசி மகிழ்கிறார்கள்.

என் தாய்மாமானுக்கு இதைவிட பெரிதாக நான் என்ன செய்திருக்க முடியும்..!

1 comment: