Saturday 12 September 2015

அவிலா கிரகம்

#அவிலா_கிரகம்

அவிலா கிரகத்தில் வடக்கே சூரியன்கள் உதித்தன.. ஆம் அங்கு மூன்று சூரியன்கள்.. வெளிர் மஞ்சள் நிறத்து மரங்களில் ப்ளோரசண்ட் ஆரஞ்சு இலைகள் ஒளிர்ந்தன.. மரத்தில் அமர்ந்திருந்த பச்சை நிற காகங்கள் இனிமையாகக்கூவின அதிகாலை உடற்பயிற்சிக்கு அவிலா கிரகவாசிகள் அனைவரும் கிளம்பிக்கொண்டிருந்தனர். ஆம் அங்கு அது கட்டாயம்.

உடற்பயிற்சி செய்யாதது தேசத் (கிரகத்) துரோகம்.. அஜ்லாவும் கிளம்பினான் அவன் மனைவி அஜிலாவும் மகள் சிண்ட்லாவும் கிளம்பிக் கொண்டிருந்தனர். அவிலா கிரகவாசிகள் அனைவரின் பெயரும் லா என்றே முடியவேண்டும் இதுவும் அந்த கிரக லா"க்களில் ஒன்று. அரசு உடற்பயிற்சி கூடங்களில் அனைவரும் அவர்களின் ஹாய் ஆன  ஹவ்லா சொல்லிக் கொண்டார்கள். அங்கு தூரத்தில் அவளைப்பார்த்து திடுக்கிட்டான் அஜ்லா.

அது..அது.. சிண்ட்லா போல இல்லை... அவளா... ச்சே ச்சே.. இருக்காது அவள் தான் போன ஒளியாண்டில் டெஸ்ட்ராய் செய்யப்பட்டவள் ஆயிற்றே.. அவ்லா கிரகத்தில் எல்லாருக்கும் இறக்கும் நாள் தெரியும் அங்கு அந்த நாளில் அவர்களை நாற்காலிகளில் அமரவைத்து லேசர் பாய்ச்சி அழித்து விடுவார்கள். கிரக விதிகளை மீறினாலும் அதே தண்டனை தான் சிண்ட்லா தண்டனை பெற்றவள் அதுவும் உடற்பயிற்சி செய்யாதக் குற்றத்திற்காக.

லேசர் நாற்காலியில் அவன் கண் முன்னே பொசுக்கப்பட்டவள் அவள்.. அவன் முன்னாள் காதலி அவள்..! அவள் நினைவாகத்தான் அவன் குழந்தைக்கும் அவளின் பெயரிட்டு இருந்தான். இவள் எப்படி இங்கு கொஞ்சம் வியந்து போனான்.. மெல்ல நெருங்கி அவ்லா என்றான்.. அவள் புன்னகைத்து திரும்பி ஒரு நிமிடம் என்பது போல கைகாட்டிவிட்டு காதுகளில் ஒரு ப்ளூடூத் போன்ற செட்டை அணிந்து கொண்டாள்.

அவள் கண்களில் இவன் நமக்கு தெரிந்தவன் என்பது போலவே எதுவும் காட்டிக் கொள்ளவில்லை.. இப்போது சொல்லுங்கள் என்றாள்.. நீ..நீ.. நீங்கள் சிண்ட்லா தானே... புன்னகைத்தாள் என் பெயர் அகிலா நான் பூமியைச் சேர்ந்தவள்.. அவிலா கிரகம் பூமியில் நடத்திய விண்வெளிப் புதிர் போட்டியில் வென்று முதல் பரிசும் மூன்று மாதம் இந்த கிரகத்தின் சிறப்பு விருந்தினராக சுற்றிப்பார்க்கும் வாய்ப்பும் பெற்றிருக்கிறேன்.

உங்கள் மொழி எனக்கு தெரியாது நான் காதில் அணிந்திருக்கும் இந்த டிரான்ஸ்லேட்டர் இருந்தால் தான் நான் பேசுவது உங்களுக்கும் நீங்கள் பேசுவது எனக்கும் புரியும் என்றாள். அஜ்லாவால் நம்பவே முடியவில்லை இது எப்படி என எண்ணி எண்ணி வியந்தான்.. பரஸ்பரம் தன்னையும் தன் குடும்பத்தையும் அறிமுகப்படுத்திக் கொண்டான். அதற்கடுத்த நாட்களில் அடிக்கடி அவளை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றான்.

அக்கிரகத்தின் கோவிலான ஜெகலா அம்மன் கோவிலில்.. கோயில் மிருகமான ரோஸ் நிறத்து தும்பிக்கை வைத்த சிங்கத்திடம் ஆசி பெரும் போது.. அங்கு இருக்கும் மஞ்சள் நிறத்து கடலின் பச்சை நிற பீச் மண்ணில் அவள் விளையாடிய போது.. கிரகத்தின் பெளர்ணமி தினத்தில் ஆரஞ்சு நிற வானில் தெரிந்த மஞ்சள் சதுர நிலா வெளிச்சத்தில் இரவு நேர வாக்கிங்..

இப்படி அவளை சந்திக்கும் வாய்ப்பு பெருகப் பெருக மீண்டும் அவன் காதல் துளிர் விட்டது. அகிலாவும் அஜ்லாவிடம் நெருங்கிப் பழகலானாள்.. கிரகத்தின் விருந்தாளி ஊர் திரும்பும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது இன்னும் இரண்டே தினங்கள் இருந்த போது இனி தாமதிக்க வேண்டாம் என நினைத்து அவளுக்கு அவளது அவிலா கிரக மொபைலான வோடோலாவை எடுத்தான் திரையில்  முப்பரிமாணத்தில் அகிலா என ஒளிர்ந்தது.

அட என்ன அவளே அழைக்கிறாள்!எடுத்து பேசியவன் இன்னும் குஷியானான் ஆம் அவனை நாளை சந்திக்க விரும்புவதாக அகிலா அழைத்தாள்.. அப்படியென்றால் அவளும் என்னை.. உற்சாகமானான் அவர்கள் தேசத்து உற்சாகப்பாடலான ஹேப்பிலா எனும் பாடலை மூக்கில் சீட்டியடித்து பாடினான்.. விடிந்தது.. பரபரப்பாக தன்னை அலங்கரித்து கொண்டு கிளம்பினான்.. அகிலாவை பார்த்ததும் மீண்டும் அவன் மூக்கில் ஒரு விசில்.

புடவையில் இருந்தாள்.. நான் நாளையே பூமி திரும்பவேண்டும் அதற்கு முன் நான் உங்களுக்கு ஒரு பரிசு தரவேண்டும் என்றாள். காதல் பொங்க அவளைப் பார்த்தான்... தன் கைப்பையில் இருந்து மஞ்சள் கயிறொன்றை எடுத்தாள் அகிலா..  (இந்த இடத்திலிருந்து இன்னொரு முடிவு படிக்க விரும்பினால் அடுத்த நான்கு பாராவை தாவி கடைசி 5வது பாராவை மட்டும் படிக்கவும்***** )

அவிலா கிரகத்தின் புனித நிறம் மஞ்சள் அதை இடுப்பில் கட்டுவது தான் அங்கு திருமணம் குதூகலித்தான் அஜ்லா.. மெல்ல அவனை நெருங்கி அவன் இடுப்பைத் தொட்டாள் அகிலா.. மெய்மறந்து கண்களை மூடினான்

சிறிது நேரம் ஆனது...என்ன இது ஒன்றும் ஆகவில்லையே கண்களைத் திறந்தான் அவன் இடுப்பின் மீது ஊன்றி இருந்த அவன் கைகளில் அதைக் கட்டிக் கொண்டிருந்தாள் அகிலா.. ஒரு வேளை பூமி முறைப்படி திருமணமோ.. என நினைத்து என்ன இது கைகளில் கட்டுகிறாய் அகிலா என்றான். இன்று பூமியில் ரக்ஷா பந்தன் என் சகோதரனாக நினைத்து உனக்கு கட்டினேன்... என்றாள் அகிலா.

அஜ்லாவின் மஞ்சள் ரத்தம் வெளிறிப் போய் அவன் முகம் சிவந்தது.. பை பை அண்ணா உன்னை இந்தத் தங்கை என்றும் மறக்க மாட்டாள்.. அவன் புறங்கையில் முத்தமிட்டாள் மெல்லக் கையசைத்து விடை பெற்றாள்.. அஜ்லாவின் முதுகில் இருந்த இதயம் ஒரு கணம் நின்று துடித்தது.. மறுநாள் பூமிக்கு செல்ல கலத்தில் ஏறினாள் அகிலா..

 அதற்கு அடுத்த நாள்அஜ்லா உடற்பயிற்சிக்கு போகாததால் டெஸ்ட்ராய் செய்யப்பட்டான்.


#இன்னொரு_முடிவு *****

தன் கைப்பையில் இருந்து மஞ்சள் நிறக்கயிறு ஒன்றை எடுத்தாள்.. இப்போது அவள் கண்ணில் காதல் மின்ன இதை என் கழுத்தில் கட்டுங்கள் அஜ்லா என்றாள்... மறுகணம் வீலா" என அலறி தலை வெடித்து இறந்து போனான் அஜ்லா.. 

அவிலாவில் பெண்கள் கழுத்தில் ஆண்கள் கயிறுகட்டுவது தான் அந்த கிரகத்தின் ரக்ஷா பந்தன் என்பதை அறியாத அகிலா அஜ்லா ஏன் தலை வெடித்து இறந்தான் என்பது புரியாமல் திகைத்து நின்றாள்.


No comments:

Post a Comment