Saturday 12 September 2015

பால்ட்டோ கிரகம்

#பால்ட்டோ_கிரகம்

பால்ட்டோ கிரகம் எங்கும் கடும் பஞ்சம் சுழலும் ப்ரொபல்லர் முன் லூஸ் ஹேராய் பறந்தது.. கிரகவாசிகள் போதிய உணவின்றி அவதிப்பட்டனர். முதலில் பால்ட்டோ கிரகத்தின் உணவுப் பொருட்களைப்பற்றி தெரிந்து கொள்வோம் அவர்கள் விண்ணில் விவசாயம் செய்பவர்கள்.

மக்களின் முக்கிய உணவுப் பொருள் ரிசியாவும் மைதுகோவும் தான். அங்குள்ள தாமாகோ என்னும் மிருகத்தின் மடியில் இருந்து சுரக்கும் நீல நிற ரத்தம் தான் அவர்களது பால்.. பஞ்சத்தில் அந்த மிருகங்களும் இறந்து விட எங்கும் பசி பட்டினி என கிரகமே அகோரப் பசியில் இருந்தது.

கிரகத்தின் சீஃப் ஆன வெலாண்டோ தன் அமைச்சரவையை கூட்டினான். முதலில் ஏனிந்த பஞ்சம்..? அதற்கு காரணம் என்ன..? எனக்கேட்டான்.
பால்ட்டோவின் வேளாண்துறை மந்திரியான பிலூக்கா பதிலுரைத்தார் 
நமது அண்டைக் கிரகம் லிலாவோ என்பது உங்களுக்குத் தெரியும்

கடந்த ஆண்டு அங்கு விண் புழுதிப் புயல் ஏற்பட்டதும் தெரியும் அதன் புகையில் இருந்து கிளம்பிய தூசுக்கள் நம் கிரகத்தில் படிந்துவிட்டன அதுவே காரணம்.மேலும் அந்த தூசினால் நம் விண்வளம் பாதிக்கப்பட்டு எதுவுமே பயிரிட முடியவில்லை என்றார் கவலையாக. 

சரி உணவுக் கையிருப்பு எவ்வளவு? என்றான் வெலாண்டோ.. இன்னும் 1 மாதம் மட்டுமே என்றார் தலைகுனிந்து..ஓ.. பாஜியஸ்..(பால்ட்டோ கடவுள்) என்றவன் இப்போது என்ன செய்ய என்றான் மிகுந்த வேதனையுடன் நான் ஒன்று சொல்லவா என்றார் வெளியுறவுத்துறை அமைச்சர் பெகிலோ.

எல்லோரும் அவரைப் பார்த்தனர்.. நமது கிரகத்திற்கு ஏற்ற உணவு பொருட்களை நம் அண்டை கிரகங்களில் இருந்து ஏன் தருவிக்க கூடாது என்றார்.. அருமையான யோசனை நமது கிரகத்திற்கு அந்த உணவு ஒத்து வரவேண்டுமே என்றான் வெலாண்டோ.. அது அல்லவோ சிக்கல்.?

இல்லை நான் முன்பே நமது ஆட்களை அனுப்பி தேடச் சொல்லிவிட்டேன் இப்போது தான் அந்த நல்ல சேதி வந்திருக்கிறது.. நமது உணவைப் போலவே உணவு இருக்கும் ஒரு கிரகத்தை நம் விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள் நமக்கு உணவு தரவும் சம்மதித்துவிட்டார்கள் என்றார்.

வெலாண்டோ 'அப்படியா! அது எந்தக் கிரகம்.? அந்த கிரகத்தின் பெயர் பூமி..! ஆம் நாம் ரிசியோ என்கிறோம் அது அரிசி நமது மைதுகோ தான் அங்கு கோதுமை ரித்தகக் காய் என்னும் நமது காய் அங்கு கத்தரிக்காய் நமக்கு விண்ணில் விளைச்சல் அங்கு மண்ணில் விளைச்சல்

முதலில் அவர்கள் நமக்கு 1 மாதத்திற்கான உணவுப் பொருட்களை வழங்க சம்மதித்துள்ளார்கள் என்றார் பெகிலோ. ஓடிவந்து அவரைக் கட்டிக் கொண்டான் வெலாண்டோ அருமை.. அந்நிய கிரக முதலீட்டாளர்களை அழைத்து வந்து அனாசயமாக பஞ்சத்தை முறியடித்து விட்டீர் என்றான்.

எப்போது அவை இங்கு வருகிறது என்றான் நாளை மறுதினம் நம் விண் கப்பல்களில் உணவுகளை ஏற்றிக்கொண்டு விஞ்ஞானிகள் வந்து கொண்டு இருக்கின்றனர்.. எல்லோரும் பெகிலோவிற்கு தங்கள் தலையை கழட்டி கையில் வைத்து மரியாதை அளித்தனர் அது அங்கு உயரிய கவுரவம்.

அடுத்த வரியில் இந்தக் கதை முடிந்துவிடும் என்பதை நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஆம் பூமியின் ரசாயன விளை பொருட்களை சாப்பிட்ட பால்ட்டோ வாசிகள் அவர்கள் கடவுளான பாஜியஸ் திருவடிகளை அடைந்தார்கள்..அந்த கிரகம் அழிந்தது.

No comments:

Post a Comment