Tuesday 22 September 2015

ஸ்பார்டஸ் கிரகம்

#ஸ்பார்டஸ்_கிரகம்

ஸ்பார்டஸ் கிரகத்தில் இரவு நீல நிறத்தில் இருந்தது.. அந்நிறமே அவர்களின் தேசிய நிறம்.. அங்குள்ள ஆளும் கட்சியான ஸ்பா.கி.மு.க கட்சிக் கொடியின் கலரும் அது தான்.. அக்கிரகத்தின் காலை நேரம் வெளிர் மஞ்சளில் இருப்பதால் எதிர்க்கட்சியான அ.ஸ்பா.கி.மு.க கட்சிக் கொடியின் கலர் வெளிர் மஞ்சள்.. உதிரிகட்சிகள் எதிராக பிரிந்து..

இந்த இருவர் அணியிலும் இருந்தனர்... ஆளும்கட்சியான நீலக்கலருக்கு கொஞ்சம் அதிக கட்சிகள் சப்போர்ட் இருந்ததால் அவர்கள் ஆட்சி நடந்தது.. வெகு விரைவில் தேர்தலை சந்திக்க இருந்தது ஸ்பார்டஸ் கிரகம்.. மக்களைக் கவர்ந்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க ஆளுங்கட்சி தலைவரான ஜிகோன் ஒரு யோசனை தந்தான்.

அந்நிய கிரகத்து முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதே அந்த யோசனை.. ஆளுங்கட்சியினர் எல்லாரும் அதனை கைதட்டி வரவேற்றனர்... ஒவ்வொரு கிரகத்திலிருந்தும் 10 நாடுகளை அழைக்க வேண்டும்.. அங்குள்ள அரசியல் அமைப்பு விதிகளின் படி சம அதிகாரம் எதிர்கட்சிக்கும் உண்டு. அதாவது 10 நாடுகளில் 5 ஐ ஆளுங்கட்சியும் 5ஐ எதிர்கட்சியும் தேர்வு செய்யலாம்.

அதன்படி எல்லா கிரகத்திலும் 10 நாடுகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.. மாநாடு நடைபெறும் நாளும் வந்தது..எல்லா கிரகங்களிலிருந்தும் முதலீட்டாளர்கள் பறந்து வந்து குவிந்தனர். அனைவரும் அதிகம் எதிர்பார்த்தது பூமியைத் தான்.. ஏனெனில் மொத்த முதலீட்டின் மதிப்பில் சரிபாதி பூமியிலிருந்து கிடைக்கும் என எதிர்பார்த்தனர்.. காரணம்..

அமெரிக்காவில் இருந்து தகவல் தொழில்நுட்பத்துறையும், சீனாவில் இருந்து பல விதமான பொருட்களும், சவுதியில் இருந்து எரிவாயு, ஜப்பானில் இருந்து மோட்டார் வாகனமும், கொரியா மொபைல்களும், ஜெர்மனியில் இருந்து தொழில் நுட்பமும் அதீதமாக குவியும் என்று எதிர்பார்த்தார்கள்.. இதில் இந்தியாவும் கலந்து கொண்டது.

ஆனால் அவர்கள் எதில் முதலீடு செய்வார்கள் என சொல்லவில்லை.. ஸ்பார்டஸ் கிரகமே ஸ்பார்க்கிளிங் ஆக இருந்தது.. ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அதகளப்பட்டது.. எதிர்பார்த்ததை விட பூமியின் முதலீடு தான் அதிகம் இருந்தது.. எல்லா நாடுகளும் தங்கள் முதலீட்டு திட்டங்களை அறிவிக்க இந்தியா மட்டும் பல பேச்சுவார்த்தைகளில்..

கலந்து கொண்டிருந்தது.. தொடர்ந்து பல தலைவர்களை அமைச்சர்களை சந்தித்துக் கொண்டே இருந்தது.. முதலீட்டாளர்கள் மாநாடு முடியும் கடைசி தினமும் சந்திப்புகள் தொடர்ந்தன.. இதோ ஊர் திரும்ப அனைவரும் ரெடி.. ஊருக்கு போய் மெயில் அனுப்பறேன்னு மாப்பிள்ளை வீட்டுக்காரரிடம் சொல்வது போல இந்தியா கையசைத்து திரும்பியது.

சரியாக ஒரே வாரத்தில் அங்கு ஆளுங்கட்சிக்கு அளித்த ஆதரவை உதிரிக் கட்சிகள் விலக்கிக் கொள்ள முதல் முறையாக ஆட்சிக் கவிழ்ப்பு பற்றி கேள்விப்படாத ஸ்பார்டஸ் வாசிகள் அதிர்ந்து போனார்கள்..அதற்கு மறுநாள் எதிர்கட்சித் தலைவர் முதல்வர் ஆனார்.. அவரது பதவியேற்பு முடிந்து தன் கேபினுக்குள் போய் உதவியாளரை அழைத்துச் சொன்னார்..

நம் நண்பன் இந்தியாவுக்கு ஒரு கான்ஃபரன்ஸ் போடு....

No comments:

Post a Comment