Wednesday 15 June 2016

ஃப்ளோரிடா புராணம் 1

இந்தியாவில் தமிழ்நாடு போல அமெரிக்காவின் தென் பகுதி மாநிலம் ஃப்ளோரிடா.. இந்த வார்த்தை ஸ்பானிஷ் மொழிச் சொல்லாகும்.. ஃப்ளோரிடா என்றால் மலர்களின் பூமி என்று அர்த்தம். அமெரிக்கர்களுக்கு மட்டுமல்ல சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் பிடித்த ஊர் ஃப்ளோரிடா. ஏனெனில் இங்கு சுற்றுலாதலங்கள் அதிகம் மிக முக்கிய காரணம் இங்கு அடிக்கும் வெயில்.! இதை அனுபவிக்க தான் இங்கு படையெடுக்கிறார்கள்.

நாமெல்லாம் வெயிலில் வாடி ஊட்டி கொடைக்கானல் போவது போல வருடத்தில் 4 மாதம் கடும் பனியையும் 4 மாதம் கடுங்குளிரையும் அனுபவித்து உறைந்த அமெரிக்கர்கள் தங்கள் கம்பளி ஆடைகளுக்கு குட்பை சொல்லி அரைடிரவுசர் மட்டும் அணிந்து வெறும் உடலுடன் சுற்ற ஃப்ளோரிடா வருகின்றனர்  நம்ம ஊர் வெயில் போல ஆனால் மாலை கடற் காற்று சிலுசிலுக்கும்.. உலகப்புகழ் மியாமி கடற்கரை இங்குதான் உள்ளது.




அது மட்டுமின்றி உலகிலேயே மிகப் பெரிய டிஸ்னிலாண்ட் இங்கு தான் உள்ளது. வால்ட் டிஸ்னியின் 7 மெகா தீம் பார்க்குகள் ஆர்லாண்டோவில் அமைந்துள்ளது.. இது பற்றி தனிப்பதிவுகள் எழுத இருப்பதால் இங்கிருந்து தாவுவோம்.. ஆக எங்கும் சுற்றுலா பயணிகள் நிறைந்த ஊர். அருகிலேயே மேற்கிந்தியத் தீவுகள், தென் அமெரிக்கா, க்யூபா, போன்ற நாடுகள் இருப்பதால் ஃப்ளோரிடா முழுவதும் ஸ்பானிஷ் மொழி ஒலிக்கிறது.




ஃப்ளோரிடா என்றால் மலர்களின் பூமி எனச் சொல்லியிருந்தேன்.. ஆனால் மலர்களை விட இங்கு முதலைகள் அதிகம்.. ஆம் கிட்டத்தட்ட 3 மில்லியன் முதலைகளுக்கு மேல் இருக்கின்றன! லேண்ட் ஆஃப் அலிகேட்டர்ஸ் என்பது இவ்வூரின் செல்லப்பெயர். அந்த ஊரில் எங்கு தண்ணீர் தேங்கியிருந்தாலும் அதில் முதலை இருக்குமாம்! வீட்டிற்கு பின்னே இருக்கும் ஏரி, சாலை ஓர குளம் குட்டை இப்படி எங்கு பார்த்தாலும் முதலை முதலை முதலை.



இங்கு க்ரொகடைல்சும் அலிகேட்டர்சும் இம்மாநில மக்கள் தொகைக்கு இணையாக இருக்கிறது என்றார் ஆர்லாண்டோ வெங்கி. அதுசரி க்ரொகடைல் வேறு அலிகேட்டர் வேறா என்றோம்.! ஆமாங்க இரண்டும் வேறு வேறு தான் முதலையின் தாடை (வாய்) குறுகி இருந்தால் அது க்ரொகடைல்.. அகல தாடை இருந்தால் அது அலிகேட்டர்.. அலிகேட்டர் உப்புத் தண்ணீரில் வாழாது முதலை எவ்வகை நீரிலும் வாழும் என்றார்.

அட இதுல இவ்வளவு இருக்கா.. என்றதற்கு அடுத்து சொன்னார் இங்கு ஆள் விழுங்கும் மலைப்பாம்புகளும் அதிகம் என்றார்.. படையே நடுங்கும் போது நாங்கள் நடுங்க மாட்டோமா.!அந்த பாம்புகள் பற்றி கூறத் தொடங்கினார்.. அதைக் கேட்கக் கேட்க எங்கள் உடலிலிருந்து வியர்வைப் பாம்புகள் மெல்ல ஊறி ஓட ஆரம்பித்தன..(வரும்..)

No comments:

Post a Comment