Monday 20 June 2016

குற்றாலக் கும்மாளம் 2

#குற்றாலம்_கும்மாளம்

பகுதி - 2

அருவியில் நீர்வரத்து இல்லை என புலம்பி தூங்கப்போனேன் அல்லவா.. காலை 9 மணிக்கு சடசடவென சத்தத்தில் விழித்தேன்.. வெளியே மழை.! இதே போல மழையை கடந்த டிசம்பரில் சென்னையில் சந்தித்திருக்கிறேன் அப்போது பீதியளித்த இம்மழை இப்போது குதூகலத்தை தந்தது.வானில் கரு மேகங்கள் சூழ்ந்து  இரவு 7மணிபோல இருள்..மோகனும் தனசேகரனும் தூங்கி எழுந்து கொள்ள பரபரப்பாக அடுத்த ரவுண்டுக்கு தயாரானோம்.

இங்கே ரவுண்ட் என்பது குளியலை குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே எனது குற்றாலக் குளியல் புராணத்தில் இது பற்றி குறிப்பிட்டு இருப்பேன். இப்போது நாங்கள் மெயினருவிக்கு கிளம்பினோம் நெல்லை மாவட்ட டிஜிபி குற்றாலத்திற்கு ஆய்வுக்கு வந்திருந்ததால்.. எங்கும் ஒரு சிருஷ்டிக்கப்பட்ட ஒழுங்கு தெரிந்தது.. ஒரு மைல் நீளத்தில் க்யூ நின்றது அதில் நின்றால் மதியம் 3 மணிக்கு தான் அருவிக்கு போக முடியும்.

இவ்வளவு மழைக்குப் பின்னும் அருவியில் கஞ்சத்தனமாகத்தான் தண்ணீர் இருந்தது.. இதுக்கு காத்திருப்பதா? மனம் தளராது குறுக்கு வழியில் செல்ல தீர்மானித்தோம் 100 அடி தூரத்தில் குளித்து விட்டு வருபவர்கள் பாதை தெரிந்தது அதை கடந்தால் அருவிக்கு போக முடியும்.. எங்கும் போலீஸ் தொப்பிகள்.. வருவது வரட்டும் என நடந்தோம்  பாதையின் இறுதியில் செக் போஸ்ட் போல கயிறு கட்டியிருந்தார்கள்.. நல்லவேளை தடுக்கவில்லை.



டிஜிபி ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்க டி.எஸ்பி இன்ஸ்பெக்டர்கள் முதுகுப்புறமாக யானை ஒன்று பூனைபோல நடந்து அருவிக்கு போக என்னை ஃபேஸ்புக் போலவே இதிலும் ஃபாலோ செய்தனர் நண்பர்கள்.. தண்ணீரில் சற்று வேகம் இருந்ததே ஒழிய புகழ் மிக்க குற்றால அருவிக் குளியலுக்கான சுகமில்லை. போலீசார் எவரையும் 10 நிமிடத்திற்கு மேல் குளிக்க அனுமதிக்கவில்லை.. ஆகவே விரைந்து வெளியேறினோம்.

சாரல் மழை தூவ அம்மழையில் மலையாள,மலேசிய, தமிழக முகங்களையும் ஈரக் கூந்தலுடன் முத்து முத்தாக நீர் சொட்ட ஃப்ரெஷ் ஆப்பிள்கள் போல நனைந்து மலர்ந்த பெண்களையும் பார்த்துக் கொண்டே ந(னை)டந்தோம். சூடான மிளகாய் பஜ்ஜிக்கு காத்திருந்து அது பாதி மாவாக வேகாமல் கிடைக்க.. நுங்கு, மாங்காய், ரம்டன், மனோ ரஞ்சிதம், மங்குஸ்தான், பலாச்சுளை என பழவகைகளில் பிடித்ததை கொறித்தோம்.. வெறும் 20 நிமிடம் தான்.!



குளிக்க வந்தது குளித்தது சாப்பிட்டது எல்லாமே.. மற்ற அருவிகளில் எப்படி தண்ணீர் வருகிறது என யாரிடமும் கேட்கவில்லை.. எல்லாரும் தேர்தல் கருத்துக்கணிப்பு போல முடிவுகள் சொல்லிக் கொண்டிருந்தனர்.. அதிலும் ஒருவர் பாபநாசம் போங்க இல்லாட்டி ஆரியங்காவு போற வழியில் பாலருவி போங்க என்று நீங்க ஏண்டா குற்றாலம் வந்திங்க அங்க போங்கடா என்றார் மறைமுகமாக வருவது வரட்டும் என கொட்டும் மழையில் ஐந்தருவிக்கு கிளம்பினோம்.. 

வரும்...

No comments:

Post a Comment