Monday 20 June 2016

ஹைர ஹைர ஐரோப்பா..

ஐரோப்பா...

டென்மார்க் என்றவுடன் பால் பண்ணைகள் நம் நினைவுக்கு வரும்.. இந்த நாட்டில் ஏராளமான பால் ஆராய்ச்சி நிறுவனங்கள் அமைந்த்துள்ளது.. பால் பொருட்கள் தயாரிப்பில் நவீன தொழில்நுட்பம், கால்நடை வளர்ப்பு மற்றும் அவற்றின் ஆரோக்கியத்திற்கான நிறுவனங்களும் நிறைந்து உள்ளது.  

உலகில் சிறந்த பால் பண்ணைகள்  டென்மார்க்கில் அமைந்ததற்கு முக்கிய காரணம் நகர பகுதிகளை விட கிராமங்கள் மிக அதிகம்.கால்நடை வளர்ப்பு, மேய்ச்சல் நிலங்கள், தீவனங்கள் தயாரிப்பு இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து கிராம புறங்களை, நிலங்களை அக்கறையோடு  பாதுகாத்து வருகிறார்கள். 

முறையான ஆவணங்கள் இருந்தால் பால் பண்ணை அமைக்க 1மணி நேரத்தில் வங்கிக்கடன் கிடைக்கும்.. அதே ஒரு நட்சத்திர ஓட்டலோ, ஷாப்பிங் மாலோ அமைக்க என்ன முறையான ஆவணங்கள் இருந்தாலும் குறைந்தது 6 மாதங்கள் காத்திருக்க வேண்டும் கிராமங்களை போற்றுகின்றனர்.

இங்குள்ள "வாம்ப்பர்ட்" என்ற ஊரில் எங்கள் நிகழ்ச்சி..ஓஸ்லோவில் இருந்து பண்டிலா ஏர்போர்ட்டை அடைந்து அங்கிருந்து 1மணிநேர கார்ப் பிரயாணம் இரவுப்பயணம் என்பதால் ஒன்றும் தெரியவில்லை.. விடிந்ததும் வெளியே வந்து பார்த்தால்..ஆஹா.. அழகான ஐரோப்பிய கிராம வாழ்க்கை.

பசுமை வயல்களுக்கு நடுவே அழகிய பண்ணை வீடு நாங்கள் போனது கடும் பனி காலமனதால் அந்த காலத்தில் விளையும் ஒரு வகையான புற்களை பயிரிட்டு இருந்தார்கள்.. யூகலிப்டஸ் மரம் போன்ற ஒரு குட்டிச் செடி.. பண்ணை வீடுகள் என அந்தப்பகுதியே ரம்மியமாக இருந்தது.

அங்குள்ள பசுக்களை பார்க்க ஆவலாக இருந்தது குளிர் காரணமாக மாடுகளை வேறு கதகதப்பான கூடத்திற்கு மாற்றி விட்டதால் காண முடியவில்லை. வெளியே கிராமமாக இருந்தாலும் உள்ளே ஹைடெக் வசதி வீடு..200 தமிழ்க் குடும்பங்கள் வழக்கம்போல் அதே அன்பு உபசரிப்பு.

டென்மார்க்கில் நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு உறைய வைத்த குளிரான அனுபவம். அங்கிருந்து கோபன்ஹேகன் விமான நிலையம் சென்று மீண்டும் ஜெனீவாவில் இறங்கவேண்டும்.. அதிகாலை 3 மணிக்கு டிரெயின் நாங்கள் இரவு ஒருமணிக்கே அங்கு போய்விட்டோம்.

அந்த ரெயில் நிலையம் ஒரு 18 ஆம் நூற்றாண்டு கட்டிடம் மலைப் பகுதிகளில் உள்ளது போல கல்லால் கட்டப்பட்ட கட்டிடம்.. அடித்த குளிர் அப்படியே உள்ளே இறங்கியது அதிகபட்சம் அரைமணி நேரத்துக்கு மேல் தாங்க முடியவில்லை வெயில் தாங்கியது போல குளிர் தாங்க முடியவில்லை.

உல்லன் கிளவுசுகளுக்குள் விரல்கள் விறைத்ததை உணர முடிந்தது.. பற்கள் இறுகிக் கொண்டன.. உடல் நடுங்க ஆரம்பித்தது..எங்களை இறக்கி விட்டுவிட்டு நிகழ்ச்சி அமைப்பாளர்களில் ஒருவர் மட்டும் எங்களுடன் இருக்க மற்றவர்கள் போய்விட்டனர்.. இருந்தது ஒரே கார் நாங்கள் 13பேர்.

அதில் நான்கு பேர் பெண்கள் அவரது காரில் ஹீட்டரை போட்டுவிட்டு முதலில் ஒரு 6 பேர் 10 நிமிடம் அடுத்த 10 நிமிடத்தில் அடுத்த 6 பேர் இப்படி மாறி மாறி அமர்ந்து எங்களை வெப்பப் படுத்தி கொண்டோம். இப்படி ஒரு ஒரு மணிநேரம் திடீரென அய்யோ என்றார் அமைப்பாளர்.!

என்னங்க என்றோம் வண்டியை ஆன் செய்து ஹீட்டர் உபயோகித்ததால் பெட்ரோல் அளவு குறைந்திருந்தது இங்கிருந்து அடுத்த பெட்ரோல் பங்க் போக 35 கி.மீ தூரம் அவர் சுமார் 100 கி.மீ பயணிக்க வேண்டும்.. இப்போது இருக்கும் பெட்ரோல் அதிகபட்சம் 40 கி.மீ தான் வரும் ஆகவே..

வண்டியை அணைத்து விட்டு மீண்டும் குளிர் குகைக்கு திரும்பினோம். மணி 2 இனி அடுத்த ஒரு மணிநேரம் மீண்டும் குளிர் அரக்கனின் பிடி இறுகியது.. அப்போது தான் ஒரு யோசனை வந்தது பீட்ஸா அட்டைப்பெட்டிகள் காரில் இருந்தது ரயில் நிலைய குப்பைக்கூடையிலும் நிறைய காகிதங்கள்..!

ஆளுக்கு ஒரு கை அள்ளி ரயில் நிலையத்திற்கு வெளியே எடுத்து வந்து கொட்டி தீமூட்டினோம்... பற்றாக்குறைக்கு எங்கள் பெட்டியில் எங்களது அழுக்கு ஆடைகளும் அங்கு போடப்பட்டன அந்நிய துணிகளை எரித்து வெள்ளையரை எதிர்த்தது அன்றைய சுதந்திர போராட்டம் வெண்பனிக் குளிரை எதிர்த்து சொந்தத்துணிகளையே எரித்தது எங்கள் தந்திர போராட்டம். 

இப்போது மணி 2:45 ரெயில் 20 நிமிட தாமதம் என்றார்கள் கடும் பனிப் பொழிவு காரணமாக என்றார்கள்.. ஒரு வழியாக ரயிலில் ஏறியதும் தான் குளிர் அடங்கியது.. 3 மணிநேர பயணத்திற்கு பின் கோபன்ஹேகன் விமானநிலையத்திற்கு உள்ளேயே டிரெயினில் இருந்து இறங்கினோம்.

லட்சகணக்கான வெண் இறகுகள் பறப்பது போல பனி பெய்து கொண்டிருந்தது ஏதோ தேவர்கள் பூமாரி பொழிந்தது என்பார்களே அது போல் விமானமும் 3 மணிநேர தாமதம் என்றார்கள் ஆனால் கதகதப்பான அந்த அழகிய விமான நிலையத்தின் எழிலில் குளிரை மறந்தோம்.

விமானம் தாமதமானதால் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. ஐந்து நட்சத்திர ஓட்டல் உணவு.. டென்மார்க்கின் பாலினால் தயாரிக்கப்பட்ட பல வகை உணவுகளை கேட்டு வாங்கி சாப்பிட்டோம்.. செமி ஸ்லீப்பர் இருக்கைகள் கொண்ட லாஞ் தந்தார்கள் நன்கு தூங்கினோம். டென்மார்க்கிற்கு கனவில் 100 மார்க் போட்டேன்.

Bergen... உலக உருண்டையின் கழுத்துப்பகுதி.. இதற்கு மேலே க்ரீன்லாந்து அதன் பிறகு ஆர்டிக் பனிப்பிரதேசம் நார்வே நாட்டின் முன்னாள் தலை நகரம்.. ஸ்காண்டிநேவிய அரசு ஆட்சி புரிந்த இடம்.. நார்வேயின் உச்சியில் அமைந்த்துள்ள பழம் பெருமை வாய்ந்த அழகான நகரம்..

பனிச்சிகரங்கள், உறை பனிக் கடல், பழம் பெருமை வாய்ந்த கட்டிடங்கள், சிலைகள், அருங்காட்சியகங்கள் நிறைந்த நகரம்... உலகத் தரம் வாய்ந்த பனிச் சறுக்கு மைதானங்கள் இங்கு உண்டு.. மிகப்பெரிய கப்பல் துறைமுகமும் விதவிதமான நவீன படகுகளும் உள்ள அழகிய துறைமுகம்.

பனி மலைகளை குடைந்து போடப்பட்ட வெகு நீளமான மலைக் குகை பயணம் சிலிர்ப்பூட்டும் .. தற்போதைய தலை நகரான ஓஸ்லோவிலிருந்து 7 மணி நேர ரயில் பயணம். பசுமை புல்வெளிகள், அழகிய பனிமலைகள் என கண்கொள்ளாக் காட்சி.. கோ" படத்தில் என்னமோ ஏதோ பாடல் படமாக்கப்பட்ட இடம் என்றால் திரைப்பட ரசிகர்களுக்கு நன்கு புரியும்...

அங்கு ymca விடுதியில் உள்ள டார்மெட் ரி என்னும் வகை அறைகளில் தங்கியிருந்தோம்.. ஒரு அறையில் நான்கு பேர் இரட்டைக் கட்டில் அப்பர் பெர்த் உடன் இதற்கே 200 டென்மார்க் ரூபாய்கள்.. (டேனிஷ் டாலர்) கிட்டத்தட்ட நம்ம ஊர் காசுக்கு 10 ஆயிரம் ரூபாய்..! (2010இல்)

சாக்லெட் தூவப்பட்ட பன்.. கொய்யாப்பழ ஃபேளவரில் Fanta, மெகா சைஸ்களில் பீட்ஸா என எங்கள் பயணம் முழுவதும் (ஒரே டைப்) சாப்பிட்ட எங்களுக்கு YMCA வில் காலை ஆச்சரியம் காத்திருந்தது.. உணவு ஹாலுக்குள் நுழைந்ததும் பிரமிப்பானோம்.

சுடச்சுட இட்லிகள், தோசைகள், பூரிக்கிழங்கு, சட்னி, சாம்பார், ஈழத்து சிறப்பான சம்பல், ஆம்லெட்டுகள், இடியாப்பம் தேங்காய்ப் பால், அசைவர்களுக்கான பெப்பர் மட்டன் பாயா, தர்பூசணி&லெமன் ஜுஸ் என பிரமாதப்படுத்தியிருந்தார்கள். நெகிழ்ந்து புகுந்து விளையாடினோம்.

ஏனெனில் இங்கு வந்து 7 ஆம் நாளில் நாங்கள் சாப்பிட்ட முதல் தமிழ்நாட்டு உணவு இது.. மதியம் பருப்பு சாதம், சாம்பார், ரசம், தயிர்,கூட்டு, பொரியல், அவியல், அப்பளம் வடை, பாயாசம் என ஒரு நாள் சைவமும், மறுநாள் மட்டன் சிக்கன் மீன் என ஒவ்வொன்றிலும் 3 அயிட்டங்களில் விருந்து..!

அதிலும் ஒடியங்கூழ் எனப்படும் அரிசி மற்றும் மீன் இறால் உள்ளிட்ட பல வகை மீன்களில் தயாரான ஒரு கூழ் கொடுத்தார்கள் அசுராமிர்தம்... (தேவர்கள் அசைவம் உண்பதில்லை என்பதால்) அதற்கு தொட்டுக்கொள்ள ஒரு இஞ்சித் துவையல் வேறு.. 5 ஆண்டுகள் ஆனாலும் நினைவிலிருக்கிறது.

கிட்டதட்ட 2000 தமிழ்க் குடும்பங்கள் வசிக்கின்றனர் இனிய விருந்தோம்பல் மிகுந்த அன்பில் எங்களை குளிப்பாட்டி விட்ட அன்பு நெஞ்சங்களை என்றும் மறக்க இயலாது -6 டிகிரி உறைய வைக்கும் குளிரில் டிசம்பர் மாதத்தில் நடுக்கத்துடன் சென்று வந்தது இனிய நினைவுகளாய்.

சுவிஸ்

சுவிஸர்லாந்து... உலகின் அழகு மிக்க நாடு இங்குள்ள லுசான் நகரம் ... அழகிய நதிக்கரையில் அமைந்த நகரம். ஜூரிச்சில் இருந்து 60 கி.மீ வெறும் 20 நிமிட கார்ப் பயணம் ஸ்விஸில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஊர்களில் ஒன்று இந்த ஊரிலிருந்து பாராளுமன்றத்திற்கு ஒரு தமிழ் எம்.பியே இருக்கிறார்.

ஜூரிச், பேர்ன்,பேசில், லுசான், லெளசான், ஃபிரிட்பெர்க், இவையெல்லாம் தமிழர்கள் நிறைந்த ஊர்கள்..லுசானில் உள்ள ஏரியானது அமைதியான கடல் போல் இருக்கும் அவ்வளவு பெரிது.. நதிக்கரையில் புராதன கட்டிடங்கள், சிலைகள்,பாலங்களும் உண்டு.

அருமையான ரெஸ்ட்டாரண்டுகள் இசைக்கலைஞர்களின் நிகழ்வுகள்,பூங்காக்கள் என இதன் சுற்றுப் புறம் வண்ண மயமாய் இருக்கும்அதிலிருந்து அடுத்த சுற்றில் துணிக் கடைகள், சுவிஸ் வாட்சுகள், சாக்லேட்டுகள், ஆபரணங்கள்,கைப்பைகள் வாசனை திரவியங்கள், சர்வதேச உணவகங்கள், பொம்மைகள் என பெரிய தி.நகரே இருக்கிறது.

டிசம்பரில் இந்த ஆறு உறைந்து பனிக்கட்டி ஆகிவிடும் அந்த நேரத்தில் பனி சறுக்கி விளையாடுவது அதன் மேலே திறந்த வெளி உணவகங்கள் நடத்துவது எல்லாம் உண்டு அவர்களது தேசிய நாளை இந்த நதிக்கரையில் தான் கொண்டாடுவார்கள். பனிக் காலத்தில் கார்கள் பயன்படுத்தும் இம் மக்கள் கோடையில் சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.

அழகான சாலை, வண்ண மலர் மரங்கள், பசுமை மிளிரும் பூங்காக்கள் என்று எங்கு பார்த்தாலும் அழகு.. அழகு... பனிக்காலத்திலும் கோடை காலத்திலும் இரு முறை நான் சென்ற ஒரே ஊர் லுசான் தமிழகத்தில் எனக்கு எவ்வளவு நண்பர்களோ அதே அளவிற்கு ஏராளமான நண்பர்களும் அங்கு இருக்கிறார்கள் மறக்க முடியாது லுசானை..

ஜெர்மனி..... வரலாற்று சிறப்பு மிக்க நகரம் என்று சொன்னால் நீங்கள் ஹிட்லர் ஆகிவிடுவீர்கள்.. உலகிற்கு தெரிந்த உண்மை அது.

எனது பயணத்தில் மொத்தம் ஒரு 18 மணி நேரமே அங்கு இருக்க முடிந்தது.. முதலில் நார்வே செல்ல பெர்லின் விமான நிலையத்தில் சில மணி நேரங்கள்..

பிறகு பயணத்தின் கடைசி தினத்தின் முதல் நாள் ஜெர்மனியில் நிகழ்ச்சி.. அங்கு எசன் என்ற ஊரில் எங்கள் நிகழ்ச்சி... சுவிஸ் நாட்டின் ஃபிட்பெர்க் என்ற இடத்திலிருந்து கிட்டதட்ட 900 கி.மீ சாலை வழிப்பயணம். 

கொட்டும் பனியில் இரவு 8 மணிக்கு தொடங்கிய பயணம்... மறு நாள் காலை 8மணிக்கு முடிந்தது... ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு சாலை வழிப்பயணம் என்பது புதிய அனுபவமாக இருந்தது.. 

எல்லை நெருங்கும் போது நாங்கள் காரில் அயர்ந்து தூங்கிவிட்டோம். ஆனால் நாங்கள் கலை நிகழ்ச்சிக்கு வந்த கலைஞர்கள் என்று தெரிந்ததும் எங்களை எழுப்பாமல் நிகழ்ச்சி அமைப்பாளரிடம் மட்டும் தகவல்களை பெற்றுக் கொண்டு அனுமதித்த ராணுவத்தினர் பண்பு எங்களை கவர்ந்தது.

இதே நம் ஊராக இருந்தால்.. என்ற எண்ணம் வந்து போனது.. ஒரு வழியாக எஸன்" அடைந்தோம் அழகான நகரம் டென்னிஸ் வீராங்கனை  ஸ்டெபி கிராஃப் பிறந்த ஊர்... சுற்றி பார்க்கவெல்லாம் நேரமில்லை... கடும் பனி பெய்து கொண்டிருந்தது..

முகம் கழுவும் போது மூக்கில் இருந்து ரத்தம் வடிந்து எங்களை பயமுறுத்தியது.. போட்டிருந்த 5கிலோ ஆடையை மீறி குளிர் ஊடுருவி நடுங்கவிட்டது.  மதியம் 2மணிக்கு நிகழ்ச்சி .. ஆம் ஏனெனில் அடுத்த நாள் காலை எங்களுக்கு விமானம்.. 

அதுவும் ஜூரிச் நகரில்..மீண்டும்900 கி.மீ  சுவிஸ் வரவேண்டும்... மறு நாள் காலை 9 மணிக்கு விமானம் காலை 6 மணிக்கு அங்கு இருத்தல் அவசியம்.. மதியம் 3 மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி 6 மணிக்கு முடிந்தது.. 

சரி போக சரியாக இருக்கும் என்று நினைத்த போது அங்குள்ள சிலர் எங்களோடு புகைப்படம் எடுக்க வந்தார்கள்.. சரி ஒரு 10 நிமிடம் தானே என்று சம்மதித்த வேளை வெளியே கடும் பனிப் பொழிவுடன் காற்று என்பதால் நிகழ்ச்சியில் இருந்து வீட்டுக்கு செல்ல இருந்த மக்கள் அனைவரும் அரங்கம் திரும்பினர்.. 

உள்ளே புகைப்படம் எடுப்பது பார்த்தவுடன் அனைவரும் எடுக்க வேண்டும் என வரிசை கட்டி நின்றுவிட்டார்கள்... ஏறத்தாழ 2 மணி நேரம்.. இனி சாப்பிடாமல் கிளம்பினாலும் காலை 8 மணி ஆகிவிடும்...

சிவா அண்ணன் கூலாக இருந்தார்.. அவர் தான் எங்கள் ஓட்டுனர்.. வரும் போது கடும் பனிப்பொழிவில் அவர் சொன்னது பனி இல்லாவிட்டால் வேகமாக போகலாம் என்றார்.. ஆனால் தற்போது அதை விட அதிகமாக ஏன் மோசமாக இருந்தது..

வாங்க சாப்பிட போகலாம் என்றார்.. வேணாம் சிவாண்ணே நேரமாகிவிடும் என்ற சொன்னதை கேளாமல் மெக்டொனால்ட் அழைத்து சென்று சாப்பிட வைத்தார்.. நேரம் 9:30 மணி.. அண்ணே போய் விமானத்தை பிடித்துவிட முடியுமா? வாங்க அதே கூலான புன்னகை... 

காரில் நம்பிக்கை இல்லாமல் ஏறினோம்... சில கிலோமீட்டர் சென்ற பிறகு Express ways என்ற பலகை கண்ணில் பட்டது.. ஜெர்மனியில் மட்டுமே குறிப்பிட்ட சாலைகளில் வாகன வேகத்திற்கு எல்லை கிடையாது.. 

ரேஸ் பிரியர்களுக்கும் மோட்டார் கார் தயாரிப்பாளர்களுக்கும் மிகப் பிடித்த சொர்க்க (!!?) சாலை...  எவ்வளவு வேகத்திலும் பறக்கலாம்.. எடுத்தவுடன் 140கி.மீ வேகம் சில நேரம் 200 கி.மீ நம்ப மாட்டீர்கள்...

விடியற்காலை 6:30க்கு ஜூரிச் விமான நிலையம் வந்துவிட்டோம்.. இதில் இடையில் எல்லை தாண்டும் போது சோதனை இரண்டு இடங்களில் இளைப்பாற... வெறும் 9 மணி நேரத்தில் 900 கி.மீ அசுர வேகம்... மறக்கவே முடியாது ஜெர்மனியையும் சிவா அண்ணணையும்.

No comments:

Post a Comment