Monday 20 June 2016

பாரதி

பாரதி நினைவலைகள் - 2

எட்டயபுரத்து சமஸ்தானத்தில் காந்திமதி நாதன் என்ற புலவர் இருந்தார்... அப்போதைய புகழ் பெற்ற கவி அவர்தான். பாரதி அப்போது சிறுவனாக இருந்த போதும் சமஸ்தானத்தில் அவரது பாடல்கள் வெகு வேகமாக புகழ் பெற்றிருந்தது...காந்திமதிநாதனுக்கு பாரதியின் மீது பொறாமை இருந்தது.

அரசரும் பாரதி மீது மிக்க அபிமானம் கொண்டிருந்தார். இதுவும்கூட காந்திமதி நாதனுக்கு பிடிக்கவில்லை அவர் பாரதியை மட்டம் தட்ட காத்திருந்தார். அதற்கு ஒரு வாய்ப்பும் வந்தது அரசவையில் ஒருநாள் புலவர்களுக்கு ஒரு போட்டி நடந்தது... (ஈற்றடி) கடைசி வரி மட்டும் சொல்லி விடுவார்கள் பாடலை அந்த வரியில் முடிக்க வேண்டும்..

பாடலை பாடுபவர்களுக்கு வேறொருவர் தான் கடைசி வரி தர வேண்டும், பாரதிக்கு கடைசி வரி சொல்லும் வாய்ப்பு காந்திமதி நாதனுக்கு கிடைத்தது நல்ல வாய்ப்பை பயன் படுத்தாமல் இருப்பாரா! காந்திமதிநாதன் பாரதியாருக்கு கொடுத்த ஈற்றடி "பாரதிசின்னப்பயல்" அவையில் கொல் என்ற சிரிப்பு. இதை சிறுவனான பாரதி எப்படி பாட போகிறார் என்று அரசரும் ஆவலுடன் இருக்க.. பாரதி பாடினார்...

ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் - மாண்பற்ற
காரிருள்போ லுள்ளத்தான் காந்திமதிநாதனைப்
பாரதி சின்னப்பயல்.

தன்னை விட வயதில் இளையவன் நான் என்ற அகந்தையால் என்னை இகழ்ந்து ஏளனம் செய்த பெருமையற்ற கருமையான இருள் போல உள்ளங் கொண்ட காந்திமதி நாதனைப் பார் மிகவும் சின்னப்பயல்.. (பார் + அதி சின்னப்பயல் என்னும் அர்த்தத்தில்)

அவையினர் கரவொலிக்க காந்திமதிநாதன் அவமானத்தால் குறுகிப் போகிறார்.. இதை கவனித்த பாரதி அவரை மகிழ்வுற வைக்கவும்.. அடடா சிறியவன் நான் பெரியவரை அவமதித்து விட்டோமே என்ற ஒரு உணர்விலும் அந்தப் பாடலை சற்றே மாற்றிப்பாடுகிறார் இப்படி...

ஆண்டில் இளையவனென் றந்தோ அருமையினால்
ஈண்டு இன்றென்னை நீஏந்தினையால் மாண்புற்ற
காராதுபோ லுள்ளத்தான் காந்திமதிநாதற்குப்
பாரதி சின்னப் பயல்.

ஆண்டில் இளையவன் என்ற அருமையினால் ஈண்டு இன்று என்னை நீ ஏந்தினையால் மாண்புமிக்க கார் அது போல் உள்ளங்கொண்ட காந்திமதி நாதனுக்கு பாரதி சின்னப் பயல்.( கார் அது போல உள்ளத்தான் = மழை மேகம் போல கருணை மிகவுள்ளவன்) 

கருணை மிக்க காந்திமதிநாதனுக்கு முன் பாரதியான நான் சின்னப்பயல் என்றதும் காந்திமதி நாதனே ஓடி வந்து பாரதியை தழுவிக் கொண்டாராம்.
----
#பாரதியார்_எழுதிய_அல்லா_பாடல்.

அல்லா அல்லா அல்லா...

பல்லாயிரம் பல்லாயிரம் கோடிகோடியண்டங்கள்
எல்லாத் திசையிலுமோ ரெல்லையில்லா வெளிவானிலே
நில்லாது சுழன்றோட நியமஞ்செய்தருள் நாயகன்
சொல்லாலும் மனதாலுந் தொடரொணத பெருஞ்சோதி!
                                                    (அல்லா அல்லா அல்லா...)
கல்லாதவராயினும் உண்மை சொல்லாதவராயினும்
பொல்லாதவராயினும் தவமில்லாதவராயினும்
நல்லாருரை நீதியின்படி நில்லாதவராயினும்
எல்லாரும் வந்தேத்துமளவில் யமபயங் கெடச் செய்பவன்.
                                                     (அல்லா அல்லா அல்லா...)


வ.உ.சி.க்கு பாரதியின் வாழ்த்து..

வேளாளன் சிறைபுகுந்தான்  தமிழகத்தார்
மன்னனென மீண்டான் என்றே
கேளாத கதை விரைவிற் கேட்பாய் நீ
வருந்தலை என் கேண்மைக் கோவே!
தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம்
நீ இறைக்கு தவங்கள் ஆற்றி
வாளாண்மை நின் துணைவர் பெறுகெனவே
வாழ்த்துதி நீ வாழ்தி! வாழ்தி!

பாரதியார்_எழுதிய_இயேசுகிறிஸ்து_பாடல்

1.ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்
எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்
நேச மாமரி யாமக்த லேநா
நேரிலே யிந்தச் செய்தியைக் கண்டாள்
தேசத் தீர்! இதன் உட்பொருள் கேளீர்:
தேவர் வந்து நமக்குட் புகுந்தே
நாச மின்றி நமைநித்தங் காப்பார்.
நம் அகந்தையை நாம் கொன்றுவிட்டால்.
-----
கரண்டு தினம் வேண்டும் பராசக்தி கரண்டு தினம் வேண்டும் ...
வீட்டில் துணிகள் துவைப்பதற்காய் - தேங்காய்கள் சட்னி அரைப்பதற்காய் - அந்த கரண்டு வளத்துடனே ஓர் மாளிகை கட்டித்தர வேண்டும். அங்கு கேணி இல்லாவிடினும் போர் போட்டு மோட்டாரொன்றும்  பத்து பனிரெண்டு மணி நேர பவர்கட்டு  ஏதுமின்றி நித்தமுமே வேண்டும் சுக நித்திரை தர வேண்டும்.....

புதிய பாரதி...

காணிநிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும்
அந்தச் சென்னைக்கு அருகிலின்றி எங்காவது வாழ்ந்திட
நிலம் வேண்டும் பராசக்தி... மனிதர் வாழ்ந்திட நிலம் 
வேண்டும்..ஏரியைமேடாக்கி ஏரியா ஆக்கிடாத மனையடி 
தான் வேண்டும்...பராசக்தி..அங்கு கேணி இல்லாவிடினும்
போர் போட்டு மோட்டார் ஓட வேண்டும்.பத்து பனிரெண்டு 
மணிநேர பவர்கட்டு ஏதுமின்றி அங்கோர்மாளிகை கட்டித்
தரவேண்டும் பராசக்தி.. டெங்கு கொசுக்கடி ஏதுமின்றி சுக
நித்திரை நிதம் வேண்டும்.. ரியல் எஸ்டேட் விளம்பரங்கள்..
தடை செய்யப்படவேண்டும் அதில் நடித்த நடிகரெல்லாம்
சபித்து வேளச்சேரியில் விடவேண்டும்.. இல்லை பராசக்தி 
முடிச்சூரில் விடவேண்டும். சாக்கடை குழிகள் இன்றி 
சாலையில் தேங்கிடும் நீரும் இன்றி.. மழைநீர் சேகரித்து 
மண்ணில்மக்கள் பயனுறவே அறிவைத் தர வேண்டும் பராசக்தி
அதை நீ இன்றே தரவேண்டும். எங்களுக்கு இன்றே தரவேண்டும்.

#பாரதிக்கு_சமர்ப்பணம்

செந்தமிழ்நாடெனும் போதினிலே- மழை வெள்ளமும் பாயுது வீட்டினிலே- எங்கள் அமைச்சர்கள் யாவர்க்கும் பேச்சும் இல்லே- பெருமூச்சும் பிறக்குது மக்கள் மூக்கினிலே..

சோகம் நிறைந்த தமிழ்நாடு- வீண் விளம்பரம்  நிறைந்த தமிழ்நாடு- நிலவினில் கண்டிடும் குழிகளைப் போல் நெடுஞ்சாலைகள் கொண்ட தமிழ்நாடு..

காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்க் கண்டதோர் வையை பொருனைநதி- மணல் வாரி எடுத்து பின் வெள்ளத்திலே நன்கு மூழ்கிக் கிடக்கும் தமிழ்நாடு..

முத்தமிழ் பின்தள்ளி நல் ஆங்கிலத்தில் கல்விச் சாலைகள் கொண்ட தமிழ்நாடு-செல்வம் எத்தனை யுண்டோ அத்தனையும் விற்று கல்வி வியாபாரமான தமிழ்நாடு...

நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று மீனவர் வருவதை எதிர்பார்த்திருந்து அண்டை நாட்டிடம் அவர் மாட்டியதும் ஒரு கடிதம் எழுதுகின்ற தமிழ்நாடு...

வள்ளுவன் சிலப்பதி காரமென்று-மணியாரம் படைத்த தமிழ்நாடு
இதை புத்தகத்தில் மட்டும் படித்துவிட்டு வெட்டி ஜம்பம் அடிக்கும் தமிழ்நாடு...

சிங்கள நாட்டுக்கு கச்சத்தீவையுமே தாரையும் வார்த்த தமிழ்நாடு
புலிக்கொடி மீன்கொடி பறந்த இந்நாட்டினில் கட்சிக் கொடிகள் பறக்கவிட்ட திருநாடு..

ஏரிகள் எல்லாம் ஆக்ரமிப்பு அதை கேட்கவும் தைரியம் எழவும் இல்லை பிறர் வெள்ளத்து நிவாரணப் பொருட்களிலும் நன்கு ஸ்டிக்கர்கள் ஒட்டும் தமிழ்நாடு. 

<{புதிய பாரதி}>

No comments:

Post a Comment