Monday 20 June 2016

ஃப்ளோரிடா புராணம் 2

#ப்ளோரிடா_புராணம் (பார்ட் - 2)

நம்ம ஊரில் வீட்டில் பூனை நாய் வளர்ப்பது போல அமெரிக்காவில் வீட்டில் பாம்பு இனங்கள்,  ஓணான், ஆமை போன்றவற்றை வளர்க்கும் பழக்கமுண்டு இவையெல்லாம் இப்போது வரைமுறை படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க நாடு இதற்கு சட்டமே இயற்றியுள்ளது உலக வல்லரசான அமெரிக்காவே உப்புமாவை கண்ட வெங்கடேஷாக அலறி நடுங்கிப் போனதற்கு காரணம் தெரியுமா! பர்மியன் பைதான் எனப்படும் மலைப் பாம்பு இனம் தான்.

இந்த பாம்புகளை வீட்டில் குட்டியாக வளர்த்த யாரோ ஒரு புண்ணியவான் பாம்புகள் பெரிதாக வளர வளர அதன் முரட்டு குணமும் அகோர பசியும் கண்டு பயந்து போனார். தான் சம்பாதிக்கும் டாலர்கள் மலைப்பாம்பின் ஒருவேளை ஸ்நாக்சுக்கு கூட பத்தாது என அமெரிக்க புத்தனாக ஞானம் வர ஒரு சுபயோக சுபதினத்தில்(அவருக்கு சுபதினம்) பாம்புகளை காட்டில் டிராப் செய்துவிட்டு வந்துவிட்டார் ஆரம்பித்தது ஏழரை அமெரிக்காவிற்கு.

பசியோடு இருப்பவனுக்கு பால் பாயாசத்தோடு விருந்து கிடைத்தால் எப்படி இருக்குமோ அப்படி ஆனது அப்பாம்புகளின் வாழ்வு.! ஆம் ஃப்ளோரிடாவின் தட்பவெப்பம் அங்கிருக்கும் நீர் நிலைகள் புல்வெளிகள் அப்படியே பர்மிய சுழலுக்கு இருக்க பாம்புகள் சுகமாக தங்கள் சட்டைகளை கழற்றிவிட்டு ஃப்ளோரிடா வெயிலில் சன்பாத் எடுத்துக் கொண்டன. தடுக்க யாருமின்றி முன்னேறி கண்ணில் பட்டதையெல்லாம் சுருட்டி விழுங்கி வளர்ந்தன.

இதில் இன்னொரு கூத்து இவற்றை வீட்டில் வளர்த்து காட்டில் விட்டாரே அவர் இப் பாம்புகள் போட்ட முட்டைகளை அம்மாவின் விலையில்லா திட்டம் போல விருப்பமுள்ள நண்பர்களுக்கு கொடுத்துவிட.. இவரிடம் இருந்து வாங்கியவர்கள் அது வளர்ந்து தன் புத்தியைக் காட்டியதும் ஓடி வந்து இவரைக் கேட்க இவர் காட்டை கை காட்டினார்.. வீட்டில் வளர்ந்த பாம்புப் பிள்ளைகளை காடு எனும் கிரஷ்ஷில் விட்டனர் வளர்ப்பு பெற்றோர்.

பர்மிய பாம்புகள் சாம்ராஜ்யம் அமெரிக்காவில் துவங்கியது..காடுகளை ஒட்டி இருக்கும் பகுதிகளில் இருந்தது அய்யா என் மாட்டைக் காணோம் அய்யா என் ஆட்டைக் காணோம் போன்ற புகார்கள் அமெரிக்க நாட்டாமையின் பஞ்சாயத்துக்கு வர ஆரம்பித்தது.. விபரீதம் புரிந்து செயலில் இறங்கிய அமெரிக்கா கருணை உள்ளத்தோடு இந்த பாம்புகளை பிடித்து எவர்க்ளேடு என்னும் பகுதியில் விட்டுவிட்டு ஒரு கோடு போட்டுவிட்டு.. இந்த கோட்டை 

நீயும் தாண்டப்பிடாது நானும் தாண்டமாட்டேன் என கைப்புள்ளத்தனமாக கூறி கிளம்பியது.. எவர்க்ளே முதலைகள் அதிகம் இருக்கும் பகுதி சில நேரங்களில் முதலை பாம்புக்கும் பாம்பு முதலைக்கும் மாறி மாறி ரிவென்ஜ் எடுத்து இரையாகின. ஆனால் இவ்வளவிற்கும் பிறகு அமெரிக்கா அடுத்த ஆண்டு மலைப்பாம்புகளின் சென்ஸஸ் எடுத்து அதிர்ச்சியில் உறைந்தது.! ஆம் அவர்கள் விட்டு சென்றது 30000 பாம்புகள் தற்போது 2 இலட்சங்கள்.!

இத்தனைக்கும் முதலைகளுக்கு இரையானது கணக்கில் வாராது.. இங்கு 15 இலட்சம் முதலைகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.! அமெரிக்கா விழித்துக் கொண்டு உயிரியல் வல்லுநர்களை அழைத்தது. பர்மிய பாம்புகள் பற்றி அவர்கள் கொடுத்த அறிக்கையில் மீண்டும் குலை நடுங்கியது. இவற்றின் இனப்பெருக்கம் தான் அந்த நடுக்கத்திற்கு காரணம் சிங்கிளா சிவாஜி மாதிரி வராம மல்டிபிளா குசேலர் வீடு மாதிரி பெருக்கியது.

கொஞ்சம் டூ லேட் தான்.. ஆனாலும் இவற்றால் பல உயிர்கள் லேட்டாகி விடக் கூடாதே என்று 2012 முதல் இப்பாம்புகள் அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட உயிரினமாக அறிவிக்கப்பட்டது.. இப்போது ஆண்டு தோறும் பாம்பு வேட்டைக்கு அனுமதி அளிக்கிறது.. நீளமான பெரிய பாம்புகள் பிடிப்பவர்களுக்கு பரிசும் அளிக்கிறது.. (ஜல்லிக்கட்டு வேணாமுன்னு சொல்ற அமைப்புகள் இந்த வேட்டையை மட்டும் கண்டுக்காதே)

அந்த பாம்புகள் பற்றிய புகைப்படங்களெல்லாம் பார்க்கவே பயங்கரமாக இருந்தது.. ஆர்லாண்டோவில் வெங்கி வீடும் வந்தது வீட்டை விட்டு இறங்கியதுமே கழுத்தில் மலைப்பாம்பு ஒன்று வந்து பொத் என விழுந்தது அய்யோ.! என அலற அங்கு எல்லாரும் சிரித்தனர்.. என் கழுத்தில் வரவேற்க போட்ட மாலையும் சிரித்தது.. பின்னே பயம் இருக்காதா இது வரை காரில் நாங்கள் கேட்ட பாம்பு புராணத்தின் எஃபெக்ட் அப்படி.. சரிதானே.!

(வரும்..)

No comments:

Post a Comment