Saturday 4 June 2016

பசிபிக் மீனம்மா 3

#பசிபிக்_மீனம்மா

பார்ட் - 3

ஓபன் ஸீ என்னும் பகுதியில் தான்  ஜெல்லி மீன்கள் காட்சியகம் இருந்தது. முழுவதும் பிரத்யேகமாக ஜெல்லி மீன்கள் மட்டும்.. அவற்றில் இத்தனை ரகங்களா என வியப்பீர்கள் அவற்றில் இருளில் ஒளிரும் மீன் வகைகளும் இருந்தன.. ஆஹா என்ன ஒரு அழகான காட்சி.! சின்னச்சின்ன சீரியல் பல்புகள் சைசில் இருந்து ஆச்சி கடை ஆப்பம் சைஸ் வரை ரகம் ரகமான ஜெல்லி மீன்கள் அதிலும் இவை அனைத்தும் ஒளி வீசிடும் ஆற்றல் பெற்றவை.




திருப்பிப் போட்ட ஆப்பம் போல மிதக்கும் ஜெல்லி மீன்கள் அதன் வெளி வட்ட விளிம்புகளில் பட்டுச்சேலை முந்தானை குஞ்சம் போல மெல்லிய இழைகள் நெளிய அதன் வழியாக வெளிச்சத்தை உற்பத்தி செய்து கொண்டு இதயம் துடிப்பது போல அசைவில் மிதந்து கொண்டிருந்தது..டி.ஆர் போல சொன்னால் தெப்பம் போல மிதக்கும் அப்பம்..பிறகு குட்டி அப்பங்கள் மஞ்சள் நிற அப்பங்கள் ஆனால் மிக பிரமிக்க வைத்தது ஒரு ஜெல்லி மீன்.






ஆம் நீரின் நிறத்திலேயே ஒரு ஜெல்லி.! அதை எப்படி பார்ப்பது.? அதன் உடலுக்குள் இருக்கும் நீல நிற நரம்பு ஒளிரும் போது அதன் வடிவம் நமக்கு புலப்படுகிறது.. இறைவன் படைப்பில் எத்தனை விந்தைகள் முகத்தில் நாம் பவுடர் ஒத்த பயன்படுத்தும் ஸ்பாஞ்ச் போல தரையெங்கும் பரவிக்கிடந்த ஒன்றை கடல் தாவரம் என நினைத்தோம் அதுவும் ஒரு மீனினம் என்றார்கள்! தரையில் புதைந்து பாம்பு போல அசைந்து கொண்டிருந்தது ஒன்று.




இதுவும் மீன் தானே என்றோம்.. இல்லை இது தாவரம் என்றார்கள். நாங்கள் வாங்கிய பல்பில் ஜெல்லி மீன்களை விட அதிகம் ஒளிர்ந்தோம். சாலையில் பிரித்து போட்ட டேப்ரிகார்டர் நாடா சைக்கிள் பின்புறத்தில் மாட்டினால் இழுத்து போவது போல ஒரு மஞ்சள் ஜெல்லி உடலெங்கும் ஒளிரும் இடியாப்ப இழைகளுடன் மிதந்ததும் அழகு. Viva Baja என்ற அரியவகை மீன்கள் கலிபோர்னிய வளைகுடாவில் மட்டுமே வாழ்கிறதாம்.




இந்த மீன்களை இப்பகுதியின் கெளரவமாக கருதுகின்றனர். இதை வைவா பாஜா எனப் படித்தபோது கண்ணில் நீர் வர சிரித்தனர்.. ஏனெனில் இது ஸ்பானிஷ் சொல்லாம் அங்கு ஜெ என்னும் எழுத்தை ஹா என்று தான் உச்சரிக்க வேண்டுமாம்.. அது வைவா பாஹா.. அப்போ நம்ம முதல்வர் அங்கு போனால் ஹாயலலிதாவான்னு கேட்கக்கூடாது.. ஆரஞ்சு மற்றும் புலி உடல் வரி போன்ற வடிவில் மிக மிக அழகாக இருந்தன வைவா பாஹாக்கள். 



அடுத்த வியப்பு பாலைவன ஆமைகள்.! பாலை வனத்தில் எப்படி ஆமைகள்? இங்குதான் முதலில் இதை பார்க்கிறோம் விதவிதமான ராட்சத நண்டுகள் எல்லாம் பார்த்துவிட்டு வெளியேறும் அவசரத்தில் மீண்டும் ஆக்டோபஸ் பகுதிக்கு தவறாக வந்து விட்டேன்.




மாலை 5மணி..ஆட்கள் யாருமே இல்லை அரங்கம் மூடும் நேரம் எதிரே நான் கண்ட காட்சி அட.. எந்தக் காட்சியைக் காண மதியம் நாங்கள் கால் கடுக்க தவமிருந்தோமோ அதைக் கண்டேன்.





ஆம் அங்கே ஆக்டோபஸார் தன் 8 கால் விரித்து அரங்கேற்றம் நடத்திக் கொண்டிருந்தார் நான் வந்ததை கண்டு திரும்ப சுருண்டுவிடுவாரோ.. என பயந்தேன் ஆனால் சிவனை போல ருத்ர தாண்டவம் ஆடி தள்ளிவிட்டார் மொபைலில் அவர் நடனத்தை ஒளிப்பதிவு செய்யும் பாக்கியம் எனக்கு.. நிறைந்த மனதுடன் வெளிவந்தோம். சசி&கிறிஸ்டியிடம் அந்த ஆக்டோபஸ் நடனத்தை காட்ட சுற்றி இருந்தவர்கள் அங்கு கூடிவிட..

ரிலே ரேஸ் போல என் மொபைல் ஒருவர் கை மாற்றி ஒருவருவருக்கு பயணித்துக் கொண்டே இருந்தது அந்த செல்லில் பேட்டரி சார்ஜ் தீரும் வரை நிறைய மக்கள் அதைப் பார்த்து ரசித்தனர். பொறுமையாக காத்திருந்தோம்.. பின்னே பார்த்து ரசிக்கத்தானே இந்த உலகம்.!

- நிறைந்தது.


No comments:

Post a Comment