Thursday 16 June 2016

ஏ.சி.திரிலோக்சந்தர்

#தமிழ்சினிமாவின்_முதல்மணிரத்னம்

நியாயமாகப் பார்த்தால் மணிரத்னத்தை தமிழ் சினிமாவின் இரண்டாவது திரிலோக்சந்தர் என்றழைப்பது தான் சரியானது.. ஆனால் இன்றைய இளைஞர்களில் அநேகம் பேருக்கு அவரைத் தெரியாது என்பதால் அப்படி குறிப்பிட்டுள்ளேன். மொத்தமே 39 படங்கள் 4 இந்தி 4தெலுங்கு மீதி 31இல் 23 படங்கள் சிவாஜிக்கு மட்டும் எம்.ஜி.ஆருக்கு ஒரு படம் மட்டும் எஸ். எஸ். ஆருக்கு 2சிவக்குமாருக்கு 1 ஆனந்தனுக்கு 1 ரவிச்சந்திரனுக்கு 1..

முத்துராமனுக்கு 1 கடைசியாக சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு 1.. இவர் கதை எழுதிய முதல் படம் விஜயபுரி வீரன் ஜோசப் தளியத்தின் இயக்கத்தில் வெளி வந்து அது சூப்பர் டூப்பர் ஹிட்.. பிறகு நடிகர் அசோகன் மூலம் ஏ.வி.எம் சரவணனை சந்திக்கிறார்.. முதல் சந்திப்பில் சரவணனிடம் இரு கதைகள் சொல்ல அவர் நாளை முடிவு சொல்கிறேன் எனக் கூறி அனுப்புகிறார். அடுத்த நாள் சொன்னது போலவே அழைப்பு... ஆனால் பெரும் அதிர்ச்சி.!

இன்ப அதிர்ச்சி.! இரண்டு கதைகளையுமே அப்பா வாங்க சொல்லிட்டாரு என்றார் சரவணன் அதில் ஒன்று பார்த்தால் பசி தீரும் அதை பீம்சிங் இயக்கட்டும்.. இன்னொன்று ராஜா ராணி கதை ஏற்கனவே விஜயபுரி வீரன் ஹிட் என்பதால் அதே ஆனந்தனை வைத்து நீங்களே இயக்குங்கள் என்கிறார் சரவணன் அது தான் வீரத்திருமகன் கதை திரிலோக் சந்தர் இயக்கத்தின் வந்த முதல் படம்.. நடிகை சச்சு அறிமுகமான படம்...

படம் மேக்கிங்கே படு ஸ்டைலாக இருக்கும்.. பிறகு நடிகர் பாலாஜி மூலம் சிவாஜிக்கு அறிமுகமாகி எடுத்த படம் தங்கை அதிலிருந்து இவர் கடைசியாக இயக்கிய சிவாஜி நதியா நடித்த அன்புள்ள அப்பா வரை சிவாஜிக்கு மட்டும் 23 படங்கள் அதில் முதன்மையானது தெய்வமகன் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம். அப்போது தொழில்நுட்பங்கள் இப்போது போல இல்லை காமிராவும் இல்லை.

மூன்று வேடங்களில் சிவாஜி நடிக்கும் காட்சிகளை படமாக்க ரொம்பவே கஷ்டப்பட்டோம் என்றார் 2014 ஆம் ஆண்டு ஒரு பேட்டியில்.. திருடன், தங்கை, பாரதவிலாஸ், டாக்டர் சிவா, எங்கிருந்தோ வந்தாள், எங்க மாமா, பைலட் பிரேம்நாத் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.. அதிலும் பைலட் பிரேம்நாத் இலங்கையில் மெகா மெகா ஹிட்டடித்தது.. அந்தப் படம் போல இலங்கை தமிழ் மக்களிடம் தாக்கம் ஏற்படுத்திய படம் ஏதுமில்லை..!

அடுத்து எம்.ஜி.ஆருக்கு ஒரே படம்.. ஏன் அவருக்கு அடுத்த படம் அவர் எடுக்கவில்லை எனக் கேட்க வைக்காமல் இது ஒண்ணே போதுமய்யா என ரசிகர்களை சொல்ல வைத்த படம் "அன்பே வா" பொதுவாக ஏழையாக, தொழிலாளியாக, மக்களில் ஒருவனாக வந்த எம்.ஜி.ஆர் இதில் செல்வச் சீமான் வீட்டு பிள்ளையாக ஆடம்பர வேடத்தில் தோன்றுவார்.ஒரு எம்.ஜி.ஆர் படத்தில் எதுவெல்லாம் இருக்கணுமுன்னு ரசிகன் எதிர் பார்ப்பானோ..

அதெல்லாம் அந்த படத்தில் இருக்காது.. என்று தான் எம்.ஜி.ஆருக்கு கதையே சொன்னாராம்.. மெய்யப்ப செட்டியாரும் ரிஸ்க் எடுக்கத் தயங்க.. திரிலோகச்சந்தரின் முந்தைய படங்களையும் அவரது ஸ்டைலான மேக்கிங்கையும் அறிந்திருந்த எம்.ஜி.ஆர் தைரியமாக நடித்தார்.. படம் வெள்ளிவிழா கடந்து ஒடியது திரையரங்குகளில் எல்லாம் திருவிழா. MGR ஒரு பெண்ணிடம் ஐ லவ்யூ சொன்னதை ரசிகர்கள் அப்படிக்கொண்டாடினர்.



எல்லா விழாவிலும் MGR இதை குறிப்பிட்டு பாராட்டுவார் என நெகிழ்வுடன் சொல்வார்.. நடிகர் சிவக்குமாரை அறிமுகப்படுத்தியவரும் இவரே படம் காக்கும் கரங்கள்.. ரவிச்சந்திரனுக்காக இவர் எடுத்த அதே கண்கள் தமிழகத்தின் வெற்றிகரமான முதல் வண்ணப்படத் திரில்லர் (நெஞ்சம் மறப்பதில்லை முதலில்) அந்த படம் ஓடிய ஓட்டத்தில் அன்று ரவிச்சந்திரன் இப்போதைய சிவகார்த்திகேயன் ஆனார்.. அந்தளவு அந்தப்படம் ஹிட்.

அடுத்து பத்ரகாளி இது இவரது சொந்தப்படம்.. படம் 60 சதவீதம் முடிந்த நிலையில் படத்தின் நாயகி ராணிச்சந்திரா விமான விபத்தில் இறந்துவிட மனமொடிந்து போகிறார் சந்தர் விநியோகஸ்தர்களிடம் பெற்ற அட்வான்சை திருப்பித் தர அவர்கள் வாங்க மறுத்தனர். படத்தின் ஒளிப்பதிவாளர் விஸ்வநாத்ராய் இவரை தேற்றி லைட்டிங் அமைப்பை மாற்றி லாங் ஷாட்டுகள் வைத்து எடுக்கலாம் என ஐடியா சொல்கிறார்.

பர்ஃபெக்ட் சினிமா மேக்கரான சந்தருக்கு அதிலெல்லாம் உடன் பாடு இல்லை இருப்பினும் பணம் போட்ட நண்பர்கள் நஷ்டமடையக்கூடாது என காட்சிகளை படமாக்க ஒப்புக் கொண்டார் அதிலும் அவர் திருப்தியாகும் காட்சி மட்டுமே இடம் பெறும் என்ற நிபந்தனையுடன்.. படம் வெளிவந்தது திரிலோகச்சந்தரின் இயக்கம் இளையராஜாவின் இசை இரண்டும் கை கோர்க்க குறைகள் தெரியாது படும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது..

எழுத்தாளர் மகரிஷி எழுதிய கதை தான் பத்ரகாளி.. அதைத் தொடர்ந்து ESP என்னும் நடப்பதை முன்கூட்டியே அறியும் சக்தியை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் ராஜேந்திரகுமார் எழுதிய வணக்கத்திற்குரிய காதலி என்ற படத்தை இயக்கினார்.. விஜயகுமார் நாயகன் ஶ்ரீதேவி நாயகி இதில் தான் ரஜினிகாந்தும் நடித்திருப்பார்.. கமலுக்கு ஒரு பெருங்குறை இவர் படத்தில் தான் நடிக்காமல் போனது என அடிக்கடிச் சொல்லுவார்.

எஸ்.எஸ்.ஆர் விஜயகுமாரி நடித்த நானும் ஒரு பெண் ஒரு அற்புதமான படம்.. கரிய நிறம் கொண்ட ஒரு பெண்ணை தாழ்வு மனப்பான்மையில் வாழ விடாதீர்கள் அவளும் ஒரு பெண் தான் அழகு நிறத்தில் இல்லை குணத்தில் உள்ளது என்பதை வலியுறுத்திய படம் அது. ரங்காராவ், சுப்பையா, ஏவிஎம் ராஜன் விஜயகுமாரி எஸ்.எஸ்.ஆர் எல்லாம் போட்டி போட்டு நடித்து இருப்பார்கள். கதாநாயகியை மீரா ஆண்டாள் போல அமைத்திருக்கும் அழகான திரைக்கதை.. பாடல்களும் அருமையாக இருக்கும்.

இனி இந்தப் படங்களையெல்லாம் மீண்டும் பார்க்க முடிந்தால் நன்கு ரசித்து நிதானமாக பாருங்கள்  நிச்சயம் அதில் தனித்துவமான ஒரு ஸ்டைல் இருக்கும் மேக்கிங் அவ்வளவு அழகாக இருக்கும்.. முதன் முதலில் டைட்டில் கார்டில் A.C. திரிலோகச்சந்தர் M.A என தன் படிப்பையும் போட்ட முதல் இயக்குநர்.. இதுதான் எனக்கும் அப்படி போட உத்வேகமாக இருந்தது என்பார் டி.இராஜேந்தர்.. A.C.திரிலோகச்சந்தர் என்பதை ஆங்கிலத்தில் எழுதி சுருக்கினால் வருவது ACT..ஆம் அவர் நடிப்பை நடிக்க வைத்தவர்.

நெடு நெடுவென உயரம் உள்ளவர் திரிலோகச்சந்தர் அவர் மறைந்தாலும் நம் உள்ளங்களில் என்றென்றும் உயர்ந்தே இருப்பார்.. "கண்ணீர் அஞ்சலிகள் ஐயா"

No comments:

Post a Comment