Monday 20 June 2016

மழைடா


☔☔ மழையதிகாரம் ⚡⚡

☔பள்ளிகள் அடைத்திட பிள்ளைகள் குதித்திட

துள்ளி வருகுதே மழை. ⚡

☔அடகுவைத்து லோன்வாங்கி கட்டிய வீட்டிற்கு

படகுவைத்து போகவிடும் மழை.⚡

☔ பசுவளர்த்து வாழ்ந்த நற்றமிழர் வாழ்வை

கொசுவளர்க்க விட்டதாம் மழை. ⚡

☔ தேங்கிய மழைநீரில் கழிவுகள் தான்கலந்து

வாங்கித் தருவது நோய். ⚡

☔ மண்ணள்ளி நிரப்பி வீட்டுமனையான ஏரியால்

புண்ணள்ளித் தருமே மழை. ⚡

☔ வான்மழை நீரதைச் சேமிக்கா விட்டால்

வீணாய் கடலிலே விடும். ⚡

☔ கூவம்நீரினை ஊருக்குள் அனுப்பி மக்களைப்

பாவத்தில் விட்ட மழை. ⚡

☔ கரை புரண்டு வெள்ளம் சீறிப் பாய்ந்து

தரைப்பாலங்கள் அழித்த மழை. ⚡

☔ வடியும் வெள்ளநீர் சிலநாளில் இருந்தாலும்

விடியுமா இந்த நிலை. ⚡

☔ ஏரியா கவுன்சிலர் கால்படா தெருவுக்குள்

ஏரியாய் நுழையும் மழை. ⚡


☁⚡மழைச் செய்திகள் 💻

☔வேளச்சேரியில் சுறா மீன் தாக்கி இருவர் பலி..☔

 ☔ தாம்பரம் அருகே கரை ஒதுங்கிய 2டன் எடையுள்ள திமிங்கலம்.☔

☔ போரூர் அருகே அதிசய வகை ஆக்டோபஸ்கள்..☔

☔ பிசி மீன் பண்ணை நிறுவனத்தார் அறிமுகப் படுத்தும் வீட்டுக்கு வீடு டால்ஃபின் திட்டம்.." டால்ஃபின் வளர்த்துங்க டாப்பா சம்பாதிங்க" ஏராளமானோர் முதலீடு ☔

☔ வேளச்சேரி to தாம்பரம் கப்பல் போக்குவரத்து சேவை ஊலலாலா நிறுவனம் துவக்கியது.☔

☔ மடிப்பாக்கம் பகுதிக்கு நீர் மூழ்கி கப்பல் விட வேண்டும் மாநகராட்சி அலுவலகம் முன் ஏராளமானோர் படகில் வந்து முற்றுகைப் போராட்டம்.☔

☔ அடையாறு போட் கிளப் அடையாறு ஷிப்பிங் கிளப்பாக பெயர் மாறியது.☔

☔ ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் அனைத்திலும் ஸ்விம்மிங் பூல்கள் மூடப்பட்டன.☔

☔ சென்னைக்கு அருகே ஆற்றில் தண்ணீர் ஓடிய அதிசயம்.. பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கண்டுகளித்தனர்.☔

☔ நெடுஞ்சாலைத் துறை நீர்வழித்துறையாக மாற்றப்பட்டது முதல்வர் அறிவிப்பு.☔

☔ அந்தமான் முடிச்சூர் விரைவு கப்பல் சேவை நாளை பிரதமர் துவக்குகிறார்.☔

☔ தமிழகத்தின் கல்வித்துறை மந்திரியாக்கப் பட்டார் வானிலை ரமணன்..மகிழ்ச்சி 'வெள்ளத்தில்' தமிழக மாணவர்கள்.☔

☔☔ மழை பெய்தால்🚿 செய்திகள்  தொடரும்..😭😭🙏

✏ வெங்கடேஷ் ஆறுமுகம் 🏄

#மழைப்_பாக்கள்

மெல்லமாய் குளிர்விலகி கதிரவனொளி பட்டு
செல்லமாய் சோம்பலதை முறித்தனுப்பி விட்டு
கள்ளமாய் கண்மூடி உறங்குவதாய் பாவித்து 
என்னமாய் ஓர்சுகம் இவ்வதிகாலை வேளையிலே.

ஆற்றுப் பெருக்கெடுத்து சூழ்ந்திட்ட இந்நாளும்
ஊற்றுப் பெருக்கால் ஊர் மூழ்கித் தள்ளாடும்
ஏற்றவர்க்கு சொந்தவீடே என்றாலும் புறநகரில்
மாற்ற முடியாதிந்த மானங் கெட்டப்பிழைப்பு.

பேய்மழைக் காற்றுடன் சோவெனப் பெய்ய
நாய்நரி எல்லாம் பதுங்கிய தெருவில்
காய்கறி வாங்கிட வழியெதும் இன்றி
பாய்தனிலமர்ந்து பதிவுகள் இட்டேன்.

தெருவிலே ஓடிடும் தேங்கிய நீராம்
உருவிலே அதுவோர் சிறிய ஆறாம்
கருவிலிருக்கும் சுருண்ட சிசுபோல்
மருகினார் மக்களி வ்வூரில்.

இடியது முழங்கும் சத்தத்தில் நடுங்கி
தடியதால் தாக்குண்ட அரவமாய் நசுங்கி
விடியலில் கதிரவன் காட்சிக்கு ஏங்கி
கொடியது இந்த அடைமழை நன்னாள்.

காரிருள் சூழ் மழை அவனியில் பெய்ய 
ஊரினுள் சாலையில் ஏரியும் தேங்க
தேரதுபோல் மெல்ல வாகனம் ஊர
நாறுது வாழ்விங்கு மாநகர்தனிலே.

சீர்மிகு சென்னையில் மேவிய சாலைகள்
நீர்மிகு நதியாய் ஓடிடும் வேளைகள்
நேர்மிகு மனிதர்கள் இம்மழைக் காலையில்
பார்புகு(ந்து) போதையில் பணிந்தன ரன்றோ.

மும்மாரி பெய்த மாதங்கள் இல்லை
அம்மாரி ஒருநாளில் பெய்வதே தொல்லை
எம்மாரி பெய்தாலும் மக்களின் வாழ்க்கை
அதுமாறிப் போகா என்பதே இயற்கை.

வங்கக்கடல் சீற்றம் கண்டேன் இப்புயலில்
அங்கம் நடுங்கியது அப்பெரும் மழையில்
தங்கம் போல் விடுமுறை நாளது ஒன்று
சிங்கம் போல் சோம்பலில் கழிந்த தின்று.

புயல் அடிக்கும் இந்நாளில் நானும்
கயல் சமைத்து உண்கிறேன் வாரும்
முயல் அதுபோல் விரைந்தோடி
பயலிவன் கவிக்குப் பரிசு பல கோடி.

முன்னைப் பிறவியில் செய்திட்ட நற்பயன்
என்னை அழைத்திங்கு குடிபுக வைத்தது
சென்னை நகர்தனில் அமைந்திட்ட வாழ்வினை 
மொண்ணை யென்றாக்குதே பெய்கிற தொடர் மழை.

புள்ளின் வாய்மொழி கீழ்திசைக் கேட்க
வள்ளென ஞமலியின் போர்க்குரல் முழங்க
கள்ளென போதையாய் வந்ததோர் சேதி
நில் இன்று பணியில்லை விடுமுறை என்றால்.

#சென்னையைப் பத்தி என்னவோ ஒருப் பா.

1. 
சிற்றாறு சுழித் தோடுமந்த சிந்தாதிரியில்
காட்டாற்று வெள்ளமது பாய்கின்ற சைதை
அருவிகளைக் காண அசோக நகராம்
கேணிகள் பல காண் கே.கே.நகராம்
சுனைகள் குளங்கள் ஏரிகள் குட்டைகள்
மூழ்கியே போனது சென்னையின் பேட்டைகள்
நிலவிலே காணும் முழுவட்டக் குழிகள்
நிஜத்திலே பார்க்கலாம் சாலைகள் மீதே 
சிலநாள் மழைக்கே சிங்காரச் சென்னை
Sink ஆகிவிட்டதே அதுதான் உண்மை.

2. 
ஊறிய நெகிழிகள் ஊரெங்கும் மிதக்க
நிலத்தடிக் கழிவுகள் ஊர்வலம் நடத்த
வைகுந்த கைலாய லோகங்கள் அடைந்திட
சாக்கடை மூடிகள் அடைப்பது இல்லை 
சாலையில் தேங்கிய மழைநீர் அலைகள்
கழிவுநீர் கலந்து புரியுது கொலைகள்
பசுக்களை வளர்த்து வாழ்ந்த நற்றமிழர் 
கொசுக்களை வளர்த்து வீழ்ந்தன ரிங்கு
தலைநகர் இதுவென பெருமிதம் கொள்ள
எதுவொன்றுமில்லை என்னத்தைச் சொல்ல.



#வெளிவராத_நாளிதழ்_செய்திகள்

+தமிழகத்தில் கனமழையால் பாதிப்பு எங்கும் இல்லை அரசு எடுத்த முன்னெச்செரிக்கை நடவடிக்கைக்கு மக்கள் பாராட்டு...

+மழையால் சாலைகளில் நீர் தேங்காது நிலத்தடிக்கு நீர் திருப்பிவிடும் திட்டம் மூலம் 50 டி.எம்.சி நீர் சேமிப்பு.

+தமிழகம் எங்கும் கன மழையால் கொஞ்சம் கூடசாலைகள் சேதமாகவில்லை நெடுஞ்சாலைத் துறையினருக்கு பாராட்டு குவிகிறது.

+புறநகர் பகுதிகளில் நீர் புகாமல் நீர் நிலை ஆதாரங்களை தூர் வாரியதால் அந் நீர் சேகரிப்பு திட்டம் வெற்றியடைந்துள்ளது..

+பாதாள சாக்கடைகள் ஒழுங்கு படுத்தப்பட்டதால் மழையில் எங்கும் அது நிரம்பி வழியவே இல்லை அனைத்து மாநகராட்சி நகராட்சி நிர்வாகங்கள் சாதனை.

+அடுத்த 5 ஆண்டுகளுக்கு உடையாத ஏரிக்கரைகளை பலப்படுத்திய பொதுப் பணித்துறையினர் தேசிய விருது பெறுகிறார்கள்.

+தமிழகத்தில் அணைகள் ஏரிகள் நிரம்பின.. பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.. வெள்ள அபாய எச்சரிக்கை முறைப்படி அறிவிக்கப்பட்டு உயிர்சேதம் பொருட்சேதம் தடுக்கப்பட்டது.

+எவ்வளவு மழை வந்தாலும் இனி கடலூர் தாங்கும்.. கடலூர் கலெக்டர் பெருமிதம்.

+அடுத்த 1 ஆண்டுக்கு தேவையான தண்ணீர் தேவை இருப்பில் உள்ளது.

+மழையால் எங்கும் நிற்காமல் பழுதின்றி ஓடியும் ஒரு சொட்டு தண்ணீர் கூட உட்புறம் வராத அளவிற்கு நல்ல வசதியுடன் அரசுபேருந்துகள் இயங்கியன மக்கள் நெகிழ்ச்சி.

+சாலைகளில் நீர் தேங்கியதை பார்த்து 25 வருடங்கள் ஆயிற்று 85 வயது மூதாட்டி ருசிகர பேட்டி.

+மத்திய அரசின் வெள்ள நிவாரண நிதி வாங்காத மாநிலம் என்னும் பெருமையை தொடர்ந்து 10 வது ஆண்டாக தக்க வைக்கிறது தமிழகம்.

+தமிழகத்தில் உள்ள அனைத்து நதிகளும் இணைக்கப்பட்ட பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது.. தைப் பொங்கலன்று திறந்து வைக்கிறார் முதல்வர்.

+கன மழை வந்தால் எப்படி அதை எதிர்கொள்வது.. அதை தமிழகத்தில் கற்றுக் கொள்ளுங்கள் ஐ.நா.சபை அறிவிப்பு.

+நீர் மேலாண்மை பற்றி கற்றுக் கொள்ள தமிழகம் வருகிறார்கள் அமெரிக்க பல்கலைக் கழக மாணவர்கள்.

+தமிழகம் முழுவதும் 7894 புதிய நீர் நிலைகள் ஏற்படுத்தப்பட்டது.. பழைய நீர் நிலைகள் 8956 கண்டுபிடிக்கப்பட்டு தூர் வாரப்பட்டன.

+ஒரே நாளில் 300 செ.மீ மழை பெய்தாலும் பாதிப்பின்றி தாங்கும் உலகின் ஒரே இடம் தமிழ்நாடு தான்.. சர்வதேச பேரிடர் மேலாண்மை அமைப்பின் தலைவர் நற்சான்றிதழ்.

+எங்களுக்கு தண்ணீர் தாருங்கள் ஆந்திரா, தெலுங்கானா,கேரளா அரசுகள் தமிழகத்திடம் கெஞ்சல்.

+காவிரி நீர் இனித் தேவைப்படாது... நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் கர்நாடக அரசிடம் தமிழகம் திட்டவட்ட அறிவிப்பு.

+இவ்வாண்டும் தேசிய அளவில் வேளாண்மையில் முதலிடம் பிடித்தது தமிழகம்.

No comments:

Post a Comment