Monday 20 June 2016

குற்றாலக் கும்மாளம் 1

#குற்றாலம்_கும்மாளம்

பகுதி -1 

நேற்று மதுரையில் இருந்து குற்றாலம் கிளம்பவே இரவு 8 மணி ஆகிவிட்டது. வழக்கம் போல இராஜபாளையம் தாண்டியதும் தளவாய்புரம் மாடசாமி நாடார் கடையில் (கண்ணாடிக்கடை) இரவு உணவு.. முடித்துவிட்டு குற்றாலம் வந்து சேனைத்தலைவர் விடுதியில் சேனைகள் இறங்கின. யார் யார் வந்திருக்கிறோம் என்பதை இனி பதிவிடும் புகைப்படங்களில் பார்த்து தெரிந்து கொள்வீர்கள். இறங்கியதும் உறங்கச் சென்றது இச்சேனை.

எப்போதும் இரவுக் குளியல் போடும் நானே களைப்பு மிகுதியால் படுத்து விட்டேன். காலை 5:30க்கு முகனூல் தோழி ஒருவரின் இன்பாக்ஸ் காலை வணக்க நோட்டிபிகேஷன் எனக்கு அலாரமானது.. விழித்ததும் பரபரவென நண்பர் ரவி இந்திரனை எழுப்பி பல் துலக்கி விட்டு.. கீழே வந்து அபாரமான இஞ்சி டீயை மொறு மொறுப்பான மிளகு அதிகம் போட்ட இரண்டு உளுந்த வடைகளை சுவைத்துக் கொண்டே குடித்துவிட்டு மெயினருவி போனோம்.

குற்றால அருவிகள் எல்லாம் என் அந்தரங்க காதலிகள்.. கொஞ்சம் செக்சியாகச் சொன்னால் அவர்களின் தேக அமைப்புகள் எல்லாம் எனக்கு தரவு..எந்த இடத்தில் பள்ளங்கள் எந்த இடத்தில் சரிவு எங்கு அடிப்பாள் எங்கு அணைப்பாள் எல்லாமும் அத்துப்படி.. குற்றாலீசுவரர் கோவில் தாண்டும் போதே அவள் மாமோய் என இரைச்சலிட்டு கூப்பிடுவது கேட்கும் ஆனால் இன்று கேட்கவில்லை. காரணம் தண்ணீர் வரத்து குறைவு..! 

கோபத்தில் எனக்கு தன் பாறை முதுகை காட்டிக் கொண்டிருந்தாள்.. தட்டிவிட்ட குடத்தில் இருந்து கொட்டிய நீர் போல பாறைகளில் நீர் கசிந்து கொண்டு இருந்தது.. இரு தினங்களுக்கு முன்பு வெள்ளப்பெருக்கால் யாரையும் குளிக்கவே விடவில்லை.! ஆனால் இன்றோ குளிக்கவந்தவர்கள் குளிக்கவே நீர் இல்லை அது தான் குற்றாலம்.. கட்டிய மனைவி போல எப்போது சீறுவாள் எப்போது பம்முவாள் எனத்தெரியாது.. இன்றும்..

வழிந்த நீரில் உடலை நனைத்தோம் குளித்துக் கொண்டிருக்கும்போதே நீர் வரத்து அதிகரித்தது.. சில நிமிடம் தான் பின்பு பம்மினாள்.. க்ளைமேட் அருமையாக இருக்கிறது.. நாளை வரை இங்கு தான் குளித்து திரும்பும் போது காற்றில் நெய்மணம் சங்கர் விலாஸ் ஓட்டல் நெய்தோச தான்.. காலை 6:30 மணிக்கே கூட்டம் அள்ளியது.. தீக்கங்கை விட கொதிக்கும் சூட்டில் மல்லிகைப்பூ இட்லி 5 சாம்பார் சட்னி ஸ்பெஷல் மிளகாய் சட்னி..

ஆஹா..பரமானந்தம்.. டயட்டில் இருப்பதால் நெய் தோசையை வேண்டாம் என சொல்லிவிட்டு ஒரே ஒரு நெய் மசாலா தோசை சொல்லி சாப்பிட்டேன் ரவி தான் அநியாயமாக சாப்பிட்டார் இரண்டு இட்லியோடு நிறுத்திக் கொண்டார்.. இவரெல்லாம் எப்படி டயட்டில் இருக்கப் போகிறாரோ.? கடைசியில் திவ்யமாய் ஒரு பில்டர் காபி.. கடைசி மிடறு முடிக்கும் போதே தூக்கம் கண்ணைச் சுழற்ற.. இனி தூங்கி எழுந்து எழுதுகிறேன்.. பை..பை.

No comments:

Post a Comment