Friday 3 June 2016

பசிபிக் மீனம்மா 2

#பசிபிக்_மீனம்மா

பார்ட் - 2

Monterey Bay Aquarium பின்னால் பசிபிக் அலையடித்துக் கொண்டிருக்க அதன் கரையில் நேரடியாக கடல் மட்டத்தில் இருக்கிறது அப்படியே சரேல் என ஒரு அடித்தளமும் இறங்குகிறது.. அங்கு நேரடியாக கடல் நீரில் வாழும் மீன்களைப் பார்க்கலாம்.. சற்று இருண்ட நுழைவாயிலை சாக்கு வைத்துக் கொண்டு இதழ் உறிஞ்சிக் கொண்டிருந்தனர் சில ஜோடிகள்.! கடந்து போனோம்(வேறவழி) கூரையிலிருந்து வரவேற்றது ஒரு கரிய திமிங்கலம்.!



திமிங்கலம் கூரையிலா.? ஆம் அது தத்ரூபமாக செய்யப்பட்ட பொம்மை திமிங்கலம். இங்கும் மீனகத்தின் மேப் மீனகத்தில் நடைபெறும் காட்சிகள் பற்றிய பிரவுசர்கள் வழங்கப்பட்டன. நாங்கள் நுழையும் போது கடல் நாய்கள் என அழைக்கப்படும் சீல்களுக்கு உணவிடும் ஷோ நடந்து கொண்டிருந்தது அழகிய இரு பெண்கள் அவைகளுக்கு உணவிட்டனர். சீல்கள் அவர்கள் இட்ட உணவை தின்றன.. நாங்கள் பார்வையில் அவர்களைத் தின்றோம்.



அந்தப் பெண்கள் சொன்னதையெல்லாம் அந்த சீல்கள் அவர்கள் கையில் இருக்கும் மீன்களுக்காக செய்தன.. குழந்தைகள் கைதட்டி ரசித்தார்கள். அடுத்தப்பகுதி சிறு சிறு பிரத்யேக கண்ணாடித் தொட்டிகளில் வைக்கப்பட்ட மீன்கள் பகுதிக்கு வந்தோம்.. முதலில் கண்ணில் பட்டது ஆக்டோபஸ் வாழைப்பழத் தோலை உறித்து அதை குப்புற கவிழ்த்தியது போல தன் 8 கால்களையும் விரித்து நீரில் இருக்கும் பாறையில் ஒரு முனிவர் போல..



அமர்ந்திருந்தது.. மயில் தோகை விரிப்பதை காண்பது அரிது என்பார்கள் ஆனால் அதனினும் அரிது ஆக்டோபஸ் அதன் கொண்டை போன்ற தலை பாகம் தெரியாமல் நட்சத்திரம் போல அதன் 8 கைகளையும் விரிக்குமாம். நாங்களும் நெடுநேரம் காத்திருந்தோம் அந்த பஸ் வரவே இல்லை. பார்க்க எத்தனையோ மீன்கள் இருக்க ஆக்டோபஸ் ஒரு மீனுக்கு காத்திருக்கவா என கோபித்து அங்கிருந்து கிளம்பி சில நூறடிகள் போயிருப்போம்.

பின்னால் குழந்தைகள் மகிழ்ச்சி கூக்குரல்.. ஆக்டோபசின் 8 கால் விரிப்பு ஷோ.! ஆவலுடன் ஓடினோம் நாங்கள் போகும் போது மீண்டும் முனிவர் போசில் அமர்ந்திருந்தது ஆக்டோபஸ்.. இந்த ஆட்டைக்கு நாங்க வரலை என ஆக்டோபசிடம் வெறுப்புடன் சொல்லிவிட்டுக் கிளம்பினோம். வாளை, விலாங்கு, சென்னாகுன்னி, இறா, சுறா, ஜில்லா..மன்னிக்க ஒரு ஃப்ளோவில் வந்துவிட்டது என ரகம் ரகமாய் மீன்கள் எங்கள் இருபக்கமும் நீந்தின.





பிறகு வித விதமான வண்ணமீன்கள் கற்பனையிலும் இல்லாத வண்ண அமைப்புகள்..என்று ரெகுலராக எல்லா மீனகத்திலும் இருப்பதை சொன்னால் உங்கள் சுவாரஸ்யம் குறைந்துவிடும் ஆகவே என்னைக் கவர்ந்த  வித்தியாசமான விஷயங்களை பற்றி மட்டும் இனி சொல்லலாம் என்று நினைக்கிறேன் .. அப்படின்னா நாம ஓபன்ஸீ (open sea) பகுதிக்கு தான் போகணும்.. அதென்ன ஓபன் ஸீ..? நாளைக்கு தெரிஞ்சிக்கலாம்..

 (வரும்...)


No comments:

Post a Comment