Sunday 5 June 2016

சாண்டாக்ரூஸ் சந்தோஷம் 1

உலகப் புகழ் பெற்ற கடற்கரைகளில் சாண்டாக்ரூஸ் கடற்கரையும் ஒன்று. கலிபோர்னியாவில் நாங்கள் இருந்த ஃப்ரீமாண்டில் இருந்து ஒன்றரை மணி நேரக் கார்ப்பயணம். விழா குழுவின் சுகந்தி அவர்கள் வீட்டில் வல்லாரை தோசை, முளை கட்டிய பயிர் சுண்டல், பேரிச்சம் பழ சத்துமாவு உருண்டை, குழம்பில் பிரண்டை என சித்தர்கள் போல மூலிகை சமையலை சாப்பிட்டு சித்தி நிலையில் அமர்ந்திருந்தோம் அருள் பெற வந்தார் மருதபாண்டியன்.!

அடச்சே.. அழைத்து போக வந்திருந்தார் மருது.. அவரது மனைவி மல்லிகா எப்போதும் சிரித்த முகம்.. அவரது மூத்த பெண் லாவண்யா.. 13 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கலிபோர்னியா மாநிலத்தின் டேபிள் டென்னிஸ் சாம்பியன் லாவண்யா.. பெருமையாக இருந்தது.. பிறகு கடைக்குட்டி கோபிகா என குடும்ப சகிதம் வந்து எங்களை சுகந்தி வீட்டிலிருந்து சாண்டாக்ரூஸ் கடற்கரைக்கு அழைத்துப் போனார். கிளம்பினோம்.

அன்று ஞாயிற்றுகிழமை.. தீபாவளி நேர தி.நகர் ரங்கநாதன் தெரு மக்கள் கூட்டம் போல சாலையெங்கும் கார்கள் அடைத்துக்கிடந்தன விடுமுறையை கொண்டாட மொத்த கலிபோர்னியாவே அங்கு திரண்டு வந்திருந்தது.. நத்தை போல ஊர்ந்து கடற்கரை வர இரண்டரை மணிநேரம் ஆயிற்று. நல்லவேளை கார் பார்க்கிங் கிடைத்தது. கடற்கரை சாலையின் வலது புறத்தில் 2 கி.மீ. நீள பெரிய பாலம் கடல் மேல் கட்டப்பட்டு இருந்தது.

பிளாட்பாரங்களில் ஓபன் ஷவர் என்னும் நன்னீர் குளியல் பகுதி இருந்தது கடலில் குளித்துவிட்டு வருபவர்கள் அங்கே தங்களை நனைத்து எங்களை சூடாக்கிக் கொண்டிருந்தந்தனர்..10 மீட்டருக்கு ஒரு குளியல் பகுதி ஒவ்வொரு மீட்டரை கடக்கும் போதும் நாங்கள் ஹீட்டரானோம்.. கூடவே நண்பரின் குடும்பமும் வந்ததால் சில தியாகங்களைச் செய்யவேண்டியது இருந்தது. சித்த மூலிகைகளை சாப்பிட்டு இருந்ததால் சித்தம் கலங்காது..

பாலத்திற்கு வந்தோம்.. அந்த பாலத்தில் இருபுறமும் கடலையும் கடலில் குளிப்பவர்களையும் பார்க்க முடிந்தது.. சிலர் பாலத்தின் மேலிருந்து  தூண்டில் மூலம் மீன் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.. அந்த பாலத்தில் குளியல் உடைகள், பீச் கண்ணாடிகள், டவல்கள், டி-சர்ட்டுகள் ஆகிய பொருட்களை விற்கும் கடைகளும், நல்ல சீஃபுட் ஓட்டல்களும் இருந்தன, கிடார் மீட்டிப் பாடும் தெருப்பாடகர்களை ரசித்துக்கொண்டே நடந்தோம்.

திடீரென ஒரு நவீன சொகுசு ஸ்போர்ட்ஸ் கார் ர்ர்ர்ர்ரூம் என எங்களருகில் வந்து க்றீச்சிட்டு நின்றது..!  (வரும்..)

No comments:

Post a Comment