Wednesday 15 June 2016

இராஜராஜன் சொ(வெ)ந்த மண்ணில்..

கும்பகோணத்தில் ஒரு க்ளையண்ட் மீட்டிங்கிற்கு மாலை வந்ததடைந்து வேலைகளை முடித்துவிட்டு அங்கே இரவு தங்கல் பின்பு காலை தஞ்சையில் விளம்பர கேம்பைன் ஒன்றை துவக்கிவிட்டு அங்கு இன்னொரு மீட்டிங் மதிய உணவிற்கு பின் மீண்டும் மதுரை என ராஜமவுலியின் பாகுபலி ஸ்கிரிப்ட் போல பக்கா ப்ளான். தஞ்சை விளம்பர கேம்பைன் வரை திரைக்கதை நூல் பிடித்தாற்போலத் தான் சென்றது.. ஆனால் அந்த இன்னொரு மீட்டிங்..

தான் திடீரென கேன்சலாகியது.. மணி காலை 10:30 இந்த நேரத்துக்கு மதுரை கிளம்பினால் மதியம் 1:30க்கே போய்விடலாம்.. போகலாமா அல்லது வேறு புதிய வாடிக்கையாளர்களை பார்க்கலாமா என யோசித்து வியாபாரம் தான் முக்கியம் என முடிவெடுத்து புதியவர்கள் 3 பேரை தொடர்பு கொண்டோம்.. அனைவருமே விளம்பரமா? என அலறி (மைண்ட் வாய்ஸ் கேட்டது) அவர்களது தொகுதி தேர்தல் தேதி போல கூட குறிப்பிடாது..

அப்புறம் பாக்கலாங்க என்னும் வெண்டைக்காய் விளக்கெண்ணெய் பதிலைச் சொல்லி போனிலேயே அறைந்து வைத்தார்கள். சரியென கிளம்பும் போது பெரிய கோவில் கோபுரம் கண்ணில் பட்டது உள்ளே போய் 15வருஷம் ஆச்சே இப்ப போகலாமா என்றேன் மேலிருந்த ராஜராஜனின் ஆவியும் ததாஸ்து என்றது.. கோவிலுக்கு எதிரேயே கார் பார்க்கிங் கிடைக்க ஆஹா நமக்கு ஆரம்பமே அமர்க்களம் என மகிழ்ந்தோம் வருவதறியாது.



செருப்புக்கு ஒரு ரூபாய் டோக்கன் சார்.. காரிலேயே கழட்டிவிட்டுறுங்க என்றார் எங்கள் டிரைவர் கணேசன்.. ஆகா..ஆகககா.. கம்பெனி பணத்தை எப்படி மிச்சம் பிடிப்பது என கடந்த வாரம் என் அலுவலகத்தில் நான் ஆத்து ஆத்துனு ஆத்திய உரையின் எதிரொலி ஒலித்தது அவர் குரலில் மகிழ்ந்தேன் என்னிடம் குடித்த ஞானப்பால் அல்லவா சாலையில் இறங்கி ரோடை கிராஸ் செய்யும் போது புண்ணில் மிளகாய் பொடி தடவியது போல பாதத்தில் வலி.!



ஆம்..காலில் தீப்பிடிக்க துவங்கியது.. சரி ரோடு தானே இதோ கோவில் பாதை வந்துவிட்டது என கால் வைத்தேன் அது வெந்துவிட்டது.. பார்த்து பார்த்து என் முப்பாட்டன் ராஜராஜனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாரம்பரிய மிக்க கற்கள் அங்கு புரோட்டா கடை தோசைக் கல்லாய் மாறியிருந்தது. அங்கிருந்து 100 அடியில் தான் கோபுர நிழல் தெரிய ஒருவாறு காலை தூக்கி அங்கு ஓடியதற்கு தகிட ததிமி தகிட ததிமி தந்தானா என்னும்... 

சலங்கைஒலி பாடல் ஒலித்திருந்தால் மூவ்மெண்ட் பக்காவாக இருந்திருக்கும் விரைந்து ஓடி அங்கே நின்று பாதத்தை தூக்கி பார்த்தால் தோல் உரிந்திருந்தது.. என்ன புகை தான் வரவில்லை.. இப்போது தான் பார்த்தேன் எங்களை கடந்து கோவிலுக்குள் போகும் அனைவரும் செருப்பணிந்து இருந்தார்கள்..அதற்கு அடுத்த கோபுரம் வரை செருப்புக்கு அனுமதி உண்டாம்.. சூரியனை விட சூடாக நான் என் டிரைவரைப் பார்க்க..

அவர் அடுத்த கோபுரம் அருகே புள்ளியாய் தெரிந்தார்.. 4 ரூபாய் மிச்சம் பிடிக்கிறேன்னு இப்படி காலை பொசுக்கிட்டியேடா என் லகுடபாண்டி என்ற என் மை.வா வை கேட்ச் பிடித்து விட்டார் போல.. இனி காருக்கு திரும்பி நடந்தாலும் அதே தூரம் தான் நடக்கவேண்டும்.. விதியை நொந்தபடி மீண்டும் தகிட ததிமி தகிட ததிமி.. ஒருவழியாக கோவில் ஆரம்பத்திலிருந்து தென்னை நாரால் ஆன மேட் நீளமாக விரித்து இருந்தார்கள்.. அப்பாடா.



பெரிய நந்தி இருக்கும் அந்த மண்டபத்தில் சுற்றிலும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொது மக்கள் இப்படி அனைவரும் அமர்ந்து இருக்கிறார்களே எனக் கருதாமல் சில இளஞ்ஜோடிகள் கடலை வறுத்துக் கொண்டிருந்தனர். நமக்கே இவ்வளவு கடுப்பு ஆனால் நந்தியார் இதெல்லாம் எனக்கு ஆயிரங் காலத்து எக்ஸ்பீரியன்ஸ் என்பது போல சாதுவாக அமர்ந்திருந்தார். அடித்த எதிர் வெயிலில் நந்தி முன் நின்று எடுத்த செல்ஃபி கருப்பாக போய்விட்டதே

என ஒரு இளம்பெண் சென்னை வெள்ளத்தில் வீடு மூழ்கிய சோகம் போல சொல்லி வருத்தத்தில் போனார். ஆஜானுபாகுவாக வீற்றிருந்த பிரகதீஸ்வர லிங்கத்தின் தரிசனம் ஆஹா.. கூட்டம் இல்லை எல்லாருக்கும் சொடக்கு போடுவது போல சிட்டிகை விபூதி பிரசாதம் அளித்தனர்.. தட்டில் விழும் காந்தி சிரிக்கும் காகிதத்தின் மதிப்பிற்கு தக்க தாமரை மலர்,வாழைப்பழம், விபூதி பாக்கெட்,மாலை போன்ற கிஃப்டுகள் வேல்யு அடிஷனாக கிடைத்தன.

அன்று வெயில் அடித்த அடிக்கு சத்தியமாக ராஜராஜ சோழனின் ஆவி கூட அங்கிருக்காது என யார் மீது அடித்துக் நான் சத்தியம் செய்வேன்.. எங்கள் மீது தான் ஆவி பறந்தது.. எங்கும் சூடு வெப்பம்.. முதுகில் உருவான கங்கை நெற்றியில் உருவான யமுனா இரு தோள்களிலும் உருவான சரஸ்வதி ஆகிய வியர்வை நதிகள் எல்லாம் என் உடல் வழியாக பயணித்து என் பாதத்தில் வந்து சொட்டு சொட்டாக சங்கமித்தது.. என் கவலை..

என்ன ஸார் சின்ன புள்ள மாதிரி பேண்ட்லயே போயிட்டிங்களா.. இது கோவில் சார் வெளியே போங்கன்னு சொல்லிடுவாங்களோன்னு பயம் அவ்வப்போது ஓரங்கட்டி நனைந்த பேண்ட்டை பிழிந்து விட்டுக் கொண்டே நடந்தேன்.. லிங்கங்கள் இருக்கும் சுற்றுப் பிரகாரத்தில் நடக்க ஆரம்பித்த பிறகு தான் கொஞ்சம் உயிர் வந்தது.. கொஞ்சம் காற்றும் வந்தது இங்கும் ஆங்காங்கே மறைவில் காதல் வளர்த்துக் கொண்டிருந்தனர் சிலர்.



இராஜராஜன் ஆவி இவர்களை கவனித்துக் கொள்ளக் கடவதாக என அவர்களுக்கும் சேர்த்து வேண்டிக்கொண்டு காமிராவில் கோவிலை சிறை பிடித்துக் கொண்டே நடந்தோம். ஓரிடத்தில் நன்கு காற்று வந்தது நித்தியானந்தா கதவு திறந்திருப்பார் போல 5 நிமிடம் அமரலாம் என அமர்ந்தால் கிளம்ப 20 நிமிடம் ஆனது அவ்வளவு ஆனந்தம்.! மீண்டும் தகிட ததிமி பாடலுக்கு ஆடியபடியே வெளியேறி காருக்குள் ஏறினோம்.

கால் கேப்டன் கண்போல் சிவந்திருந்தது சதைகள் தோரணம் போல் உரிந்து தொங்கியது.. கண்ணீருடன் டிரைவரை பார்த்தேன்.. இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான்மா வடிவேலு தொனியில் சாரி சார் என்றார்.. என்னது.! டாக்டருக்கு எவ்வளவு ஆச்சா? அது ஆச்சு 200 ரூபா..ஏன் சிரிக்கிறிங்க இப்போ நான் எந்தத் தீக்குண்டத்திலும் தெகிரியமா இறங்குவேன் அந்த அனுபவத்தை தந்துடுச்சுயா பெரிய கோவிலு.. அலோ எச்சூச்மி இங்க பூ மிதிக்கிற நோம்பி எங்க நடக்குது.? இருந்தா கூப்பிடுங்க நான் வர்றேன்.

#அஞ்சாணி

No comments:

Post a Comment