Thursday 9 June 2016

பரபர விமானப்பயணம்

#பரபர_விமானப்பயணம்

கலிஃபோர்னியாவில் இருந்து நாங்கள் ஃப்ளோரிடா வந்ததே ஒரு திக் திக் பயணம். ஆம் நாங்கள் விமானநிலையம் கிளம்பிப் போகும் வழியில் ஒரு கண்டெயினர் லாரி சாலையில் கவிழ்ந்து விட சாலை ரோட் ஃபுல் ஆனது. சாலையில் டிரம் டிரம்மாக டிராபிக் ஜாம் பரவியது எல்லாம் 20 நிமிஷத்துல க்ளியராகிடும்.. அமெரிக்கான்னா சும்மாவா என்றார் நண்பர் முத்தழகு.

ஏனெனில் எங்களுக்கு இன்னும் 2 மணிநேரம் இருந்தது விமானம் கிளம்ப ஆகவே இந்த 20 நிமிடம் பெரிதாக தெரியவில்லை.. ஜாலியாக அரட்டைக் கச்சேரி நடந்தது.. 30 நிமிடம் கடந்தது லேசாக இப்போது சந்தேகமெழ கூகுளில் என்கொயரினார் முத்தழகு அது இன்னும் 20 நிமிடங்கள் தோராயமாக என ஆன்சரியது.அப்ப இருங்க சேஃபா ஆன் லைனில் செக் இன் பண்ணிருவோம் என முயற்சித்தார் முத்தழகு.. விக்ரமாதித்தன்..

கதையாக பலமுறை முயற்சித்து 15 நிமிடங்களுக்கு பின் இணைப்பு கிடைத்து ஆன்லைன் செக் இன் நேரம் முடிந்தது நீங்க நேரில் வாங்க என அது மூஞ்சியலடித்து பதில் தந்தது.. ஒரு மணிநேரம் கடந்திருந்தது டிராபிக் கிளியரானால் கூட போக இருபது நிமிடம் ஆகும் இந்த ஃப்ளைட்டை அநேகமாக கோட்டை விடும் அபாயம்.நாங்கள் இறங்க வேண்டிய ஊர் மியாமி அங்கிருந்து ஆர்லாண்டோ என்னும் ஊருக்குப் போக வேண்டும்.

அது 4 மணிநேர கார்ப்பயணம் கிட்டத்தட்ட மதுரை விழுப்புரம் தொலைவு.. அதற்காக அங்கு வந்து காத்திருந்தனர் இரு நண்பர்கள். ப்ளைட் மிஸ் ஆனால் அவர்களுக்கும் அலைச்சல்.. இக்கட்டான சூழல் மிகச்சரியாக அடுத்த 5 நிமிடங்களில் டிராபிக் க்ளியராக வருவது வரட்டும் என கிளம்பினோம் காருக்கு இறக்கை கட்டிவிட்டார் நண்பர் முத்தழகு. அடுத்த 15 நிமிடத்தில் நெருப்பு பறக்க விமான நிலையத்தில் க்றீச்சிட்டது.

எங்கள் காரின் ரப்பர் கால்கள்.. கிறிஸ்டோவும் சசியும் லக்கேஜை எடுத்துக் கொள்ள நான் டிக்கெட் கவுன்டருக்கு பறந்தேன்.. சரியாக 40 நிமிடம் இருந்தது விமானநிலைய நுழைவாயிலில் இருந்து டிக்கெட் கவுன்டர் தள்ளி உள்ளே இருந்தது அங்கு போகவே 5 நிமிடம் ஆக இதோ ஒரே ஒருவர் மட்டும் செக் இன் அவருக்கு பின்னால் போய் நின்று மூச்சு வாங்கினேன். அவருக்கு அடுத்து என்னை அழைத்தார் கவுன்டரில் இருக்கும் பெண்.

எங்கள் பாஸ்போர்ட்டை சரி பார்த்து டிக்கெட் பிரிண்ட் எடுத்த வினாடியில் லக்கேஜுடன் சசி & கிறிஸ்டோ பின்னால் வந்து நிற்க அடுத்த நொடி கிளிக் என்ற சத்தம்.. ஆம் கவுன்டர் க்ளோஸ் செய்யப்பட்டது. விமானத்திற்கு மிகச்சரியாக 30 நிமிடங்களே இருந்தது.. உங்கள் விமானம் 15 நிமிடம் லேட் நீங்கள் டிராபிகில் சிக்கிவிட்டீர்கள் என தெரியும் என்றார் அப்பெண்.!

ஆன்லைனில் முயற்சித்தபோதே கூகுளில் நாம் இருந்த பகுதியை வைத்து பிரச்சனையை அறிந்து கொண்டார்கள் என பின்னர் அறிந்தோம்.. இதயம் இப்போது நார்மலாக துடிக்க மெல்ல செக் இன் ஆனோம் அங்கே300 பேர் இருக்கும் க்யூவில் 301 வது ஆளாக தான் இடம் கிடைக்க இப்போ மறுபடியும் துடிப்பு அதிகரித்தது.. ஆனால் போர்டிங் பாஸ் இருக்கும் போது நாம் இல்லாமல் விமானம் கிளம்பாது என நம்மூர் போல நினைத்தோம்.

அங்கு மூன்று அறிவிப்புகள் தந்துவிட்டு வரவில்லை என்றால் போய்கிட்டே இருப்பாங்க எனத் தெரிந்தது.. மோப்பநாய்கள் எல்லாம் செக் இன் செய்பவர்களிடம் வந்து மோப்பியது.. ஏதோ ஒரு தகவலின் பேரில் அன்று சோதனை கடுமையாக இருக்க முதல் அறிவிப்பு எங்கள் பேர் சொல்லி வந்தது.. மீண்டும் பதறி அங்குள்ள போலீஸ்காரரிடம் போலீஸ்கார் போலீஸ் கார் என புலம்ப தயவு தாட்சண்யம் இன்றி கொஞ்சம் நில்லுங்க என்றார்.

இந்தப்பக்கம் வாங்க என ஒரு பெண் குரல் பார்த்தால் ஒரு பெண் போலீஸ் ஆனால் வேறு சீருடையில் ஆண் போலீசுக்கும் பெண் போலீசுக்கும் வெவ்வேறு சீருடையா என வியந்து கொண்டே அந்த ஆண்போலீஸ்காரை பார்க்க அப்போது தான் தெரிந்தது அவர் ஒரு பைலட் என்று..! அவரே பாதுகாப்பு சோதனைக்கு நிற்க அவரிடம் போய் அனுமதி கேட்டால் எப்படி! நாங்கள் வாங்கிய பல்பு பளீரென எரிய சோதனைகளை முடித்தோம்.

நல்லவேளை பரிசோதனைப் பகுதியிலிருந்து விமானத்தின் கேட் ரியல் எஸ்டேட் விளம்பர வார்த்தை போல மிக மிக அருகில் இருந்தது.. ஓடிப்போய் நிற்க இரண்டாவது அறிவிப்புக்கு விமான சிப்பந்தி மைக் எடுத்து ஆர்மொகாம் விங்கடாசன்...என விளிக்க கவுன்டரில் இருந்து ஆங்கிலத்தில் உள்ளேன் ஐயா என கத்த சிரித்தபடி மைக்கை வைத்துவிட்டு..டிக்கெட்டை ஸ்கேனினார். விமானத்தில் ஏறி அமர்ந்து சீட் பெல்ட் அணிந்தோம்.

அடுத்த விநாடியே விமானம் ரன்வே செல்லப் புறப்பட்டது.. இவ்வளவு துல்லியமாக ஒரு விமானப்பயணம் இதுவே முதல் முறை.. கிட்டத்தட்ட நாங்கள் விமானத்தை விட்டுவிட்டோம் என நினைத்துக் கொண்டிருந்த மிசவுரி நண்பர் விஜயும் மேடிசன் நண்பர் இளங்கோவும் எப்படிய்யா விமானத்தை புடிச்சிங்க கில்லாடிங்கய்யா நீங்க என வாட்சப்பி இருந்தார்கள்.. விமானம் வேகம் பிடித்து மேலேற பதட்டம் கீழிறிங்கியது.

No comments:

Post a Comment