Wednesday 15 June 2016

ரிச்மாண்ட் நினைவுகள் 3

 ரிச்மாண்டில் ரீ(பே)ச்சானோம்.. 3

வாசுவின் நண்பர்கள் இன்றும் குழுமியிருந்தனர்.. நேற்றிரவு நாங்கள் வந்த போது வெறும் முட்டையும் தோசைப் பொடியும் தந்ததால் இன்று நன்கு கவனிக்க வேண்டும் என பாகிஸ்தான் பிரியாணி, மட்டன் வருவல், சாதம், மிளகுரசம், வழக்கம் போல முட்டை வகைகள் என டைனிங் டேபிளை நிறைத்து இருந்தார்கள்.. கலிபோர்னிய திராட்சை ஆரஞ்சுகளும், ஸ்டிராபெர்ரி, ஆப்பிள், வாழைப் பழங்களும் என ஒரு மினி பழத்தோட்டம் டேபிளில் வீற்றிருந்தது.

ஸ்பெயின் நாட்டு ஒயின் (அட..கவிதை மாதிரி இல்ல) க்யூபாவில் தயாரான ரம்... ஸ்காட்ச் வகைகள் என தண்ணீர் வெள்ளம் குடுவைகளுக்குள் அடைப்பட்டு மடை திறக்க (அட..மீண்டும் கவித) காத்திருந்தது.. வழக்கம் போல நான் கான்பெர்ரி ஜூஸ் எடுத்துக் கொண்டேன் (உங்கள் மை.வா கேட்கிறது) இரண்டு துண்டு மாம்பழம் கிடைத்தது பின் மிளகு போட்ட ஒன் சைடு ஆம்லெட்.. ஆஹா ட்வைன்..

யாரோ ஒரு புண்ணியவான் இளையராஜா மியூசிக் என்னும் வற்றாத இளமை ததும்பும் டாபிக்கை ஓபன் பண்ண சேம் டைம் பாட்டில்களும் ஓபன் பண்ண இரு வெள்ளங்களும் இடைவிடாது ஓடியது.. ஒருவழியாக இரவு ஒரு மணிக்கு தான் ஓரளவு கட்டுக்குள் வந்து அடுத்த நாள் எங்கள் நிகழ்ச்சி என்பதால் ஸ்விட்ச் அணைத்தது போல டாபிக்கை நிறுத்தி எங்களை தூங்க அனுப்பினார்கள். இன்னும் பேசியிருக்கலாம் என்னும் ஆதங்கம் அனைவர் முகத்திலும் அப்பட்டமாக தெரிந்தது.வேறு வழியின்றி விடை பெற்றோம்.

அடுத்த நாள் காலை மீண்டும் சந்தியா கை மணத்தில் பொங்கல் தோசை நல்ல ஓய்வு மதியம் முத்துசாமி வீட்டில் தமிழ்ச்சங்க உறுப்பினர்களோடு ஒரு மதிய விருந்து.. அறிமுகங்கள், புகைப்படங்கள், செல்ஃபிகள்.. மணி 1:45 நேராக நிகழ்ச்சி நடக்கும் அரங்கம் சென்றோம் மதியம் 2:30 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய நிகழ்ச்சி 3 மணிக்கு துவங்கியது.. ஆரம்பத்தில் சிறிது நேரம் மைக் மக்கர் செய்ய சசியும் கிறிஸ்டோவும் அதையே காமெடி நிகழ்ச்சியாக்கி...

பட்டையை கிளப்ப 6 மணி வரை அரங்கம் சிரிப்பலைகளால் அதிர்ந்து கொண்டே இருந்தது.. நிகழ்ச்சி நிறைவடைந்ததும் மலைச்சாமி ஓடிவந்து கட்டிக் கொண்டார்.. அனைவரின் பாராட்டையும் பரிசுகளையும் பெற்று வாசு வீடு வந்து ஓய்வெடுத்தோம்.. அடுத்த நாளே வாஷிங்டன் நிகழ்ச்சி ஆகவே இரவு கொண்டாட்டங்கள் இருக்காது என நம்பினோம்.. ஆனால் நிகழ்ச்சி வெற்றிகரமாக நடந்ததால் மீண்டும் மலைச்சாமி வீட்டில் டிரீட்..

ஆனால் இம்முறை இரவெல்லாம் நீளவில்லை மீண்டும் அனைவரும் பாராட்டி எங்களை உடல் கூசச் செய்தனர்.. அடுத்த நாள் நிகழ்ச்சிக்கான தொகை தரும் போது ஆனந்த அதிர்ச்சி நாங்கள் பேசியதை விட அதிக தொகை இருந்தது.. பதறி திருப்பித் தரப்போனோம்.. சிரித்துக் கொண்டே மலைச்சாமி இல்ல நாங்க தான் விரும்பி தந்திருக்கோம் சங்கத்தில் அனைவருமே இதற்கு மறுப்பு சொல்லவில்லை வச்சிக்கோங்க என்றார்.

வாசு வீட்டிலிருந்து எங்கள் பெட்டிகள் காரில் ஏற்றப்பட்டது.. தகப்பனை பிரிந்து கணவன் வீட்டுக்கு போகும் பெண்ணின் நிலையில் இருந்தது மனம் வெறும்3 நாட்கள் தான் இருப்பினும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் நம் மண்ணின் மைந்தர்களது உணர்வென்னும் விதை விருட்டென விருட்சமாகி வளர்ந்து நிற்கும் என்பதற்கு வாசு, மலைச்சாமி உள்ளிட்ட நட்புகள் உதாரணம்.. உதட்டில் சிரிப்போடும் உள்ளத்தில் கண்ணீரோடும் விடை பெற்றோம்.

பை..பை.. ரிச்மாண்ட்.

No comments:

Post a Comment