Tuesday 30 December 2014

பாசுரம் - 28

எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (28)புத்தகத்திலிருந்து...

28. திவ்யப் பிரபந்தமும் திருக்குறளும்..   

திவ்யப் பிரபந்தத்தில் சில பாடல்களில் திருக்குறளின் வரிகள் பயன்பட்டு இருக்கின்றன. சில அப்படியே, சில வேறு அர்த்தத்தில் இதைப் பற்றி ஆராய்ச்சியே செய்யலாம்.திருமழிசை ஆழ்வாரின் நான்முகன் திருவந்தாதியில்23ஆம் பாடல் இது.

வித்தும் இடவேண்டும் கொல்லோ விடை அடர்த்த 

பத்தி உழவன் பழம்-புனைத்து?--மொய்த்து எழுந்த

கார் மேகம் அன்னகரு மால் திருமேனி

நீர் வானம் காட்டும்,நிகழ்ந்து.

[விடை அடர்த்த - எருதுகளை கொன்ற, மொய்த்தெழுந்த - திரண்டு வந்த]

இதில் திருக்குறள் 85ஐ வேறுவிதமாகப் பயன் படுத்தியிருக்கிறார் வள்ளுவர். விருந்தோம்பல் என்ற அதிகாரத்தில்...

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி

மிச்சில் மிசைவான் புலம். 

எனும் குறளின் பொருள்: விருந்தாளிகளுக்கு கொடுத்து மிச்சத்தை உண்பவன் தன் நிலத்தில் விதை போடக்கூட தேவையில்லை என்று விருந்தினரைப் போற்றுதலை அழுத்தமாகச் சொல்வதற்குப் பயன்படுத்தினார். ஆழ்வார் இந்தக் குறளை வேறு பரிமாணத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார்.

பக்தி உழவனான பகவானின் நிலத்தில் நாம் ஒரு விதையும் விதைக்க வேண்டாம். அவனே கவனித்துக் கொள்வான் என்கிறார். வைணவ மரபின் அடிநாதம் இது. நாம் எதுமே செய்ய வேண்டியதில்லை. அவனை நம்பினால் மட்டும் போதும். மிச்சத்தை அவன் பார்த்துக் கொள்வான். இந்தப் பாட்டில் 2ஆம் பாதியில் மழை திரண்டு வரும்
நீலவானம் மேக வண்ணனான திருமாலைக் காட்டுகிறது ஆழ்வாருக்கு.

வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்கிற பழமொழியின் பயப்படுத்தாத வடிவம் இந்தப்பாடல். -எழுத்தாளர் சுஜாதா

No comments:

Post a Comment