Monday 22 December 2014

திருவெம்பாவை - கோழி சிலம்ப...

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 

(தோழியர்)

கோழி கூவிட அதோடு இணைந்து சிறு பறவைகளும் கீச்சிட

இசைக்கருவிகள் இசைக்க வெண் சங்கு எங்கும் முழங்கிட

ஒப்பில்லா பரஞ்சோதியாம் சிவனையும் ஒப்பில்லா அவர்தம்

பெருங்கருணையையும் ஒப்பற்ற மேன்மையான சிவநெறிப்

பொருட்களையும் பாடினோம் அது உனக்கு கேட்கவில்லையா?

அப்படி என்ன இங்கு பொல்லாத உறக்கம்? சொல்லிவிடு அந்தத்

திருமாலைப் போல் பள்ளிக் கொண்டு இருக்கின்றாயே இதுவா

உன் பக்திக்கு அழகு? ஊழிகள் யாவும் தொடங்கி அழியாது 

நிற்கும் எம் அர்த்தநாரியைப் பாடிட எழுந்து வா எம்பாவாய்.

 பாடல்: 08 

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங்காளனையே பாடேலோர் எம்பாவாய். 

குருகு - பறவை; ஏழ் - ஏழு சுரங்களால் ஆன இசை(க்கருவி);
கேழ் - ஒப்பு; விழுப்பொருள் - மேன்மை தங்கிய பொருள்; ஆழி - சக்கரம்;
ஏழை - பெண்(சக்தி).

No comments:

Post a Comment