Saturday 20 December 2014

BJP Films

லோட்டஸ் இந்துஸ்தான் பிலிம்ஸ் பெருமையுடன்

வழங்கும்.. "ஊரெல்லாம் உன் பாட்டு தான்"

சிவாஜி பிலிம்ஸ் வெளியீடு... தயாரிப்பு: அமித்ஷா& ராம்குமார், நடனம் : காயத்ரி ரகுராம், இயக்கம்/இசை& பாடல்கள்: கங்கை அமரன். நடிகர்கள் நெப்போலியன், நமீதா, மற்றும் பலர்..

கதைச்சுருக்கம் / திரை விமர்சனம்...

குஜராத்தம்பட்டி எனும் ஊரில் கோவில் சிலைகள் செய்யும் நரேந்திர முத்தையன் (நெப்போலியன்) அந்த ஊரின் புகழ் பெற்ற சிற்பி.. சிறுவயது முதலே அவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் ஊர்ப் பெரிய சிற்பி சண்முக அத்வானி.. அவரிடம் தொழில் கற்றுக்கொள்ளும் நரேந்திரன் குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனாகிறான்.. அவனது திறமையால் குஜராத்தம் பட்டியெங்கும் ஏராளமான கோவில்கள் நிறுவப்படுகின்றன.. அவரது புகழும் நாடெங்கும் பரவுகிறது.!

அவனது முறைப்பெண் காமாட்சி (நமீதா) சிறந்த நாட்டியக்காரி அவள் நரேந்திரனை ஒரு மனதாக காதலிக்கிறாள்.. சிறு வயதில் நடந்த விளையாட்டுத் திருமணத்தை மனதில் நினைத்து வாழ்ந்து வருகிறாள்.. ஆனால் நரேனுக்கு அதில் இஷ்டமில்லை சிற்பங்களும் கோவில்களும் தான் என் வாழ்க்கை என தீர்மானித்து திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கிறார்.. இந்நிலையில் நரேந்திரனின் குரு சண்முக அத்வானிக்கு ஒரு பெரிய பதவி தேடி வருகிறது அவர் பதவியேற்பார் என அனைவரும் எதிர்பார்த்திருக்க திடீர் திருப்பம் ஏற்படுகிறது..!

அதே ஊரைச் சேர்ந்த நரேந்திரனின் உயிர் நண்பர் சந்தானபாரதி இந்தப் பதவிக்கு உரியவர் நரேந்திரனே என அதிரடியாக அறிவிக்கிறார்.. இதைக் கேட்டவுடன் பவுர்ணமியாக ஜொலிக்க வேண்டிய குரு சண்முக அத்வானிக்கு முகம் அமாவாசையாக இருள்கிறது.. தொடர்ந்து ஊர் மக்கள் ஆதரவும் பெருக வேறு வழியில்லாத குரு சண்முகமும் அரை மனதாக அதை ஒப்புக்கொள்ள நரேந்திரனுக்கு பதவி போகிறது.. குஜராத்தம்பட்டியையே ஜொலிக்கச்செய்தவர் இனி இந்த பெரிய பதவியால் நாட்டையே மாற்றுவார் எனும் நம்பிக்கை அனைவருக்கும் வருகிறது.!

அதே போல பதவிக்கு வந்ததும் தனக்கு பிடிக்காதவர்களை ஓரம் கட்டி பல அதிரடி அறிவிப்புகளை வெளியிடுகிறார்.. கறுப்புப்பணம் நாட்டில் இருக்க அதிலிருக்கும் காந்திபடமே காரணம் என அறிவிக்கிறார்.. கறுப்புப்பணத்தை மீண்டும் நாட்டுக்கே கொண்டு வருவேன் என முழக்கமிடுகிறார்.. அதற்கு முன் ஊர் சுத்தமாக கோவில் போல இருக்கவேண்டும் அதற்காக பாடுபடுவேன் எனக்கூறி உலகம் சுற்றக் கிளம்புகிறார்.. நரேந்திரனுக்கு நண்பர் சந்தானபாரதி பக்க பலமாக இருக்கிறார்.. இந்நிலையில் உலகின் மிகச்சிறந்த மனிதர் பட்டம் அவரைத் தேடி வருகிறது..!

அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் எடுத்த கருத்துக் கணிப்பில் அவரது பெயர் வருகிறது, பத்திரிக்கை, டிவி, மீடியா, சமூக வலைத்தளங்கள் எல்லாமே அவர் புகழ் பாடுகின்றன.. ஊரெல்லாம் அவர் பாட்டு கேட்க விமானத்தில் ஏறி கையசைப்பதுடன் படம் நிறைவடைகிறது.. சொன்னதெல்லாம் அவர் செய்வாரா என்பதை இரண்டாம் பாகத்தில் காணலாம் என்ற எண்ட் கார்டுடன் படம் நிறைவடைகிறது.

நரேந்திரனாக நடித்திருக்கும் நெப்போலியன் திறமையாக நடித்துள்ளார்.. அவரது நண்பர் சந்தான பாரதியாக அமித்ஷாவே நடித்துள்ளார்.. ஆட்டக்காரி நமீதாவுக்கு பெரிய ஸ்கோப் இல்லை நரேந்திரனை நினைத்து அவர் உருகும் காட்சியில் மட்டும் மிளிர்கிறார்.. கதைக்கு சம்பந்தமே இல்லாத தனிடிராக்கில் சுப்ரமணியசாமி செய்யும் காமெடி முகம் மலரவும் முகஞ்சுளிக்கவும் வைக்கிறது.. 

கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஆபாச வீடியோ பார்க்கும் இரண்டு கவுன்சிலர்களின் நடிப்பு அருமை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் அனைவர் மனதும் கவர்கிறது.. ஆஸ்திரேலியா, அமெரிக்கா, என உலகம் முழுவதும் நரேந்திரனுடன் சுற்றும் காமிரா அவரையே மையப்படுத்தியிருக்கிறது ஒளிப்பதிவாளருக்கு ஒரு கொட்டு..!

கோட்சேவுக்கு சிலை வல்லபாய் படேலுக்கு சிலை என்று காமெடி செய்பவர்கள் கவுண்டமணி செந்திலை தூக்கிச் சாப்பிட்டு மக்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார்கள்.. படத்தில் ஒரு காட்சியில் மெல்லிசை என்ற பெயரில் வரும் ஒரு பெண்மணி கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடுத்து நாங்கள் 122 இடங்கள் தமிழகத்தில் பிடிப்போம் என்ற வசனம் பேசுகையில் திரையரங்கமே சிரிப்பொலியில் அதிர்கிறது.. 

தமிழகத்தில் நரேந்திரன் அறிமுகமாகும் சொர்க்கமே என்றாலும் அது நம் ஊரைப் போல வருமா பாடலும் வெளிநாட்டில் போய் பாடும் ஊரு விட்டு ஊரு வந்து பாடலும் மிக மிக அருமை.. இசை பாடல்கள் இயக்கம் அனைத்தும் கங்கை அமரன் இன்னொரு கரகாட்டக்காரன் வில்லுப்பாட்டுக்காரன் படங்களின் கலவையாக இதை தந்துள்ளார்.. சிவாஜி பிலிம்ஸ் வெளியீடாக ராம்குமார் தயாரித்து வெளியிட்டு இருக்கும் ஊரெல்லாம் உன் பாட்டு தான் படத்தின் ஒரு வரி விமர்சனம்..

#ஒரே_ஜிங்_ஜாக்

No comments:

Post a Comment