Wednesday 31 December 2014

பாசுரம் - 34

எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (34) புத்தகத்திலிருந்து...

34. ஏழாம் நூற்றாண்டின் சப்தங்கள்...

காலையில் என்னை எழுப்புவது முதல் காகங்கள், ஒற்றைக் குயில், சிங்கப்பூரில் இருந்து வந்து தாழ்வாகப் பறந்து மீனம்பாக்கத்தில் தரையிறங்கும் விமான சப்தம், ஸ்டேட் பாங்க் காலனியில் கறிகாய் விற்பவரின் சப்தம், பிள்ளைகளை பள்ளிக்கு அழைக்க அவசரப்படுத்தும் வேனின் ஹாரன் ஒலி, தரையடித் தண்ணீரை உறிஞ்ச மோட்டார் போட்ட சப்தம் இவையெல்லாம் இன்றைய அதிகாலை சப்தங்கள்.!

தொண்டரடிப் பொடியாழ்வார் காலத்தில் திருவரங்கத்தில் அதிகாலை சப்தங்கள் வேறு. காலை வேளையில் ஆழ்வாருக்கு முதல் வேலை உறங்கிக் கொண்டிருக்கும் அரங்கனை எழுப்புவது.

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்;
கன இருள் அகன்றது காலை அம் பொழுதாய்;
மது விரிந்து ஒழுகின மா மலர் எல்லாம்;
வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி,
எதிர்திசை நிறைந்தனர்; இவரொடும் புகுந்த
இருங் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்
அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்;
அரங்கத்தம்மா! பள்ளி எழுந்தருளாயே.

(அணைந்தான் - அடைந்தான், ஈண்டி - திரண்டு, ஈட்டம் - கூட்டம்)

அதிகாலை, சூரியன் கிழக்கே சிகரத்தை அணுகிவிட்டான். இருள் நீங்கியது. பூக்கள் எல்லாம் தேன் சொரிந்தன. தேவலோகத்து மன்னர்கள் ஒவ்வொருவராக நெருங்கி வந்து நிற்கிறார்கள். இவர்களோடு வந்த யானைக் கூட்டமும் அதிரும் முரசங்களும் அலைகடல் போல் ஒலிக்கின்றன..!

"அரங்கநாதனே படுக்கையிலிருந்து எழுந்து எங்களுக்கு அருள்வாய்" இதெல்லாம் ஏழாம் நூற்றாண்டில்..! இன்றைய தின நாராசங்களில் அரங்கன் உறங்கவே மாட்டார் என்று தான் தோன்றுகிறது.   - எழுத்தாளர் சுஜாதா...



No comments:

Post a Comment