Thursday 18 December 2014

தேவதைகளின் தேசம் ஸ்விஸ் - 4

#லுசான்_சுவிட்சர்லாந்து

பார்ட் - 4

லுசானேவில் இருந்து லுசான் 140 கிமீ தூரம் காரில் 45 நிமிடப் பயணம் தான்.. இரவு 2:30க்கு கிளம்பினோம்.. இங்கு ஒரு முக்கியமான விஷயம்  சுவிஸ் நாட்டில் கோடையில் நீண்ட பகல் நேரம் இரவு ஒரு மணி வரை பகல் இருக்கும் திரும்ப 5 மணிக்கே விடிந்துவிடும்.. இங்கு நான் போட்டிருக்கும் புகைப்படங்கள் இரவு 11 மணிக்கு எடுக்கப்பட்டது என்பது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும்.!

சரியாக லுசான் நகருக்கு 40 கி.மீ இருந்தபோது எங்கள் வண்டியை ஓட்டி வந்த நண்பர் கண்ணயர்ந்து விட்டார்.. வினாடிக்கும் குறைவான நேரத்தில் சாலை தடுப்புகளில் மோதியதில் விழித்து கொண்டவர் திடீர் பிரேக் போட்டதால் கார் சாலையின் மறு ஓரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது.. வண்டிக்கு பெருத்த சேதம் எங்களுக்கும் காரின் குலுக்கல் இழுத்து செல்லப்பட்ட வேகம் ஆகியவற்றால் அடி.

பெரிய காயங்கள் எதுவுமில்லை என்ற போதும் உடல் வலி பின்னி எடுத்தது.. சரியாக 60வது வினாடியில் போலீஸ் வண்டி வந்தது அதைவிட ஆச்சர்யம்.. கனிவோடு விசாரித்து எங்களுக்கு காபி தந்து விபத்தின் காரணத்தை எழுதிக் கொண்டார்கள்.. முதலுதவி பெட்டி தேவைப்படுமா என்றார்கள் வேறு வண்டி ஏற்பாடு செய்து அருகிலேயே ஒரு மருத்துவர் இருப்பதையும் அங்கு எப்படி போவது என்பதையும் குறித்து தந்தார்கள்.. இவையெல்லாம் 15 நிமிடத்தில் முடிவடைந்தது.

நாங்கள் வந்த காரின் சாவியை வாங்கிக் கொண்டு அதற்கு ரசீதும் தந்தார்கள்.. இவை அனைத்தும் வீடியோவும் எடுத்து வைத்துக் கொண்டனர்.. மெல்ல எங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டு போலீசாரால் ஏற்பாடு செய்த வண்டியில் லுசான் திரும்பினோம்.. விபத்தினால் சுற்றிப்பார்க்க எங்கும் போகவில்லை அன்று முழுவதும் ஓய்வு.. அடுத்த நாள் நாங்கள் சென்றது சுவிஸ் நாட்டின் கிராமம் ஒன்றிற்கு.! நிச்சயம் அது ஒரு வித்யாசமான அனுபவமாக இருந்தது.

பச்சைப்பசேல் வயல்கள், கொழுத்த ஆடு மாடுகள் , கரை புரண்டோடும் ஆறு, செர்ரிப்பழ மரங்கள் என அமர்க்களமான கிராமம்.. அது மில்ச் என்ற ஊர்.. ஆற்றின் கரையில் விழுந்த மரங்களில் எல்லாம் மர சிற்பங்கள் செய்து வைத்து அதை ஒரு திறந்தவெளிஅருங்காட்சியமாக ஆக்கி இருந்தனர்.. ஒரு புறம் சலசலக்கும் ஆறு அதன் கரை நெடுக மண் பாதை வரிசையான மர சிற்பங்கள் சிறு சிறு பூங்காக்கள் என அந்த இடமே மிக மிக அற்புதமாக இருந்தது.!

பெரிய பண்ணை வீடு ஆயிரக்கணக்கான மாடுகள் கட்டப்பட்டு இருக்கும் பிரம்மாண்டமான தொழுவம் கிராமங்கள் நகரத்தின் சாயல் ஏதுமின்றி அதன் தனி அழகோடு இன்றும் இருக்கிறது.. டெக்னாலஜிகள் வந்து அதை பயன்படுத்தினாலும் கிராமத்தின் பாரம்பரியம் மாறாதிருப்பது சிறப்பு.. பெரிய மர வீடுகள் புல்வெளி தோட்டம் என அற்புதமாக இருந்தது.. வைக்கோல் போர்கள் அதற்கான இயந்திரங்களால் உருவாகும் அழகை கண்டேன்.. கைக்கு எட்டும் தூரத்தில் தித்திப்பான செர்ரிப்பழங்கள் எடுத்து சாப்பிட எந்தத்தடையும் இல்லை.!

அங்குள்ள ஒருவகை குட்டி ஆடுகள் அவை அவ்வளவு தான் வளருமாம் ஆனால் தினசரி 5 லிட்டர் பால் தருமாம்.! ஆச்சர்யமாக இருந்தது.. கிராமத்து பண்ணை வீடு ஒன்றில் அற்புதமான யோகர்ட் ஒன்று தந்தார்கள்.. நமது இந்தியாவைப் பற்றி பெருமிதமாக குறிப்பிட்டார்கள் விவசாய நாடு உங்கள் நாடு என்று.. பாவம் இப்போது நம் விவசாயிகளின் நிலை தெரியாது போல..பிறகு நாங்கள் கை நிறைய பறித்த செர்ரிப் பழங்களோடு அந்த ஆற்றின் கரையில் மர சிற்பங்களுடன் நடந்தது ஆற்றில் கால் நனைத்து அமர்ந்தது எல்லாம் ரம்மியமாக இருந்தது.!

காலை முதல் மாலை வரை அலுப்பு தீராது ஒரு முழு நாளை அங்கு கழித்தது மனதிற்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது.. நேற்று நடந்த விபத்தின் கசப்பை முற்றிலும் விழுங்க வைத்தது இந்த கிராம அனுபவம்.. சிற்பக்கலைஞர்கள் சிற்பக் கல்லூரி மாணவர்கள் அங்கு குவிந்து இருந்தனர்..அவர்களோடும் உரையாடினோம் அவர்கள் சிலாகித்துச் சொன்னது நம் தமிழக சிற்பக்கலையை..! அன்று எனக்கு தமிழனாக பிறந்ததில் மிகப் பெருமையாக இருந்தது.. இனிய பயணத்தை முடித்துக் கொண்டு நாங்கள் அடுத்த நாள் போன இடம்.. சுடுகாடு... அது...

தொடரும்...









No comments:

Post a Comment