Saturday 6 December 2014

2034கி.பி.

திடும் என விழித்தான் வருண் அலாரம் அடித்துக்கொண்டிருந்தது கண்களை கசக்கி அதன் தலையில் தட்டி அணைத்துவிட்டு மணி பார்த்தான் விடியற்காலை 4 மணி படுக்கையில் இருந்து எழுந்தான் இருட்டில் தீப்பெட்டியைத்தேடி எடுத்து தலை மாட்டில் இருந்த சிம்னி விளக்கை ஏற்றினான் அறையெங்கும் மெல்லிய வெளிச்சம் பரவியது அருகில் குழந்தைகள் வர்ஷாவும் வினோத்தும் தூங்கிக் கொண்டிருந்தனர்.. 

அடுப்படிக்குள் சத்தம்.. நிஷா என்று அழைத்தான் மனைவியை.. எழுந்துட்டிங்களா போய் பால் வாங்கிட்டு வாங்க என்றாள் அங்கிருந்தே அசரீரியாக.. சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு கையில் சொம்புடன் வெளியே வந்தான்.. அபார்ட்மெண்ட் காரிடார்களில் லாந்தர் விளக்குகள் சோகையாய் ஒளிவீசிக் கொண்டிருந்தன.. காரிடாரின் மூலைக்கு அருகே இருந்த லிப்டில் பழைய சாமான்களுடன் வாடகை தராது தங்கி விட்ட சிலந்தி குடும்பத்தை பார்த்தவாறே வாசலுக்கு வந்தான்..

சக ப்ளாட் வாசிகள் தென்பட்டனர்.. இருளில் முகம் தெரிந்தவர்களுக்கு குட்மார்னிங்கும் புலப்படாதவர்க்கு புலப்படாத புன்னகையும் தந்து தெருவில் இறங்கி நடந்தான்.. தெரு முனையில் பசு மாடுகள் வைத்து பால் கறந்து தந்து கொண்டிருந்தார்கள்.. அங்கு வரிசையில் நின்று பாத்திரத்தில் ஒரு லிட்டர் பால் வாங்கிக்கொண்டு.. தம்பி இரண்டு கட்டு வைக்கோல் போர் ப்ளசண்ட் அபார்ட்மெண்ட் செகண்ட் ப்ளோர் 3Aக்கு கொடுத்து விடுறியா எனக் கேட்டு அதற்கும் பணம் தந்து விட்டு வீடு திரும்பினான்..

வீடு புகை மண்டலமாய் காட்சியளித்தது.. என்ன நிஷா என்ன இது.. என்றான் பரபரப்பாக.. என்னங்க வெறும் ஈர விறகா வாங்கிட்டேன் போல எரியவே மாட்டேங்குது.. சமையல் ஆகலை பசங்க ஸ்கூலுக்கு நேரமாச்சு ஸ்கூல் குதிரை வண்டி கரெக்டா 7 மணிக்கு வந்துடும்.. சரி இரு இன்னிக்கு சமைக்க வேணாம் நான் ஓட்டலுக்கு போறேன் என்றான்..சரி போய் பிள்ளைகளை எழுப்புங்க என நிஷா சொல்வதற்குள் புகையில் கண் எரிய குழந்தைகள் எழுந்து டாடி கண் எரியுது டாடி என அழுது கொண்டே வர சரி வாங்க டாடியோட வெளியே போகலாம் என்றான். 

குழந்தைகளுக்கு முகம் கழுவி பல்தேய்க்கவிட்டு அவனும் அதை முடித்து விட்டு வாசலுக்கு வர வைக்கோல் கட்டுகள் வாசலில் கிடந்தன அதை எடுத்து தலையில் சுமந்த படி கீழிறங்கி ப்ளாட்டின் பார்க்கிங் பகுதிக்கு வர அங்கு அவரவர் வசதிக்கு ஏற்ப ஒற்றை ரெட்டை மாட்டு வண்டிகள் தனித்தனியே ப்ளாட் எண் எழுதப் பட்ட இடங்களில் சாய்த்து வைக்கப்பட்டிருக்க எதிரே தொழுவத்தில் மாடுகள்.. தொழுவம் சென்று தனது மாட்டுக்கு வைக்கோல் போட்டு தண்ணி காட்டி விட்டு மாட்டை அழைத்து வண்டியை பூட்டினான்.. 

பிள்ளைகளை அதில் ஏற்றிக்கொண்டு சாலைக்கு வந்தான் சென்னை கே.கே.நகர் மாறாதிருந்தது.. இன்று வலதுபுற மின்சார நாள் என்பதால் சாலையின் வலது புறம் மட்டும் வெளிச்சமாக பரபரப்பாக இருந்தது.. அதுவும் காலை 3 மணி நேரம் இரவு 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம்.! மக்கள் தங்கள் மொபைல் லேப்டாப் சார்ஜ் செய்வதில் மும்முரமாக இருந்தனர் நேற்று இவர்கள் பக்கம் மின்சாரம் அதில் அவன் பேக்கப் எடுத்து வைத்திருந்ததால் இன்று கவலை இல்லை..!

வருணும் வேலை பார்க்கிறான் அவன் மனைவி நிஷாவும் வேலை பார்க்கிறாள்.. இருப்பது கே.கே நகர் 7மணிக்கு கிளம்பினால் தான் வருண் நுங்கம்பாக்கம் செல்ல 9 மணியாகிவிடும் நிஷாவுக்கு அலுவலகம் வடபழனி அவளை வழியில் இறக்கிவிட்டு செல்ல வேண்டும் மணி பார்த்தான் சோலார் கடிகாரம் 5:20 என காட்டியது பரவாயில்லை இன்னும் நேரமிருக்கிறது என்று நினைத்துக் கொண்டான்..

ஒரு வழியாக ஓட்டல் சென்று டிபன் சாப்பிட்டுவிட்டு பார்சல் வாங்கிக் கொண்டு வீடு திரும்பும் போது வினோத் கேட்டான் டாடி எங்க ஸ்கூலில் உங்க டாடி எங்க ஒர்க் பண்றாருன்னு ஆகாஷ் கேட்டான் நீங்க எங்க வொர்க் பண்றிங்க டாடி..? மெல்ல கூறினான் நானா நான் செளத் இந்தியா மைக்ரோ சாஃப்ட் CEO.. அப்போ மம்மி..? அவங்க செளத் ஏசியா இன்போசிஸ் டைரக்டர்..நேரமாகிடுச்சு பேசாதிங்க,,, ஹை..ஹை..ஹை..டுர்..டுர்..டுர்..டுர்ர்ர்ர்றா......

{பெட் ரோல், மின்சாரம், மண்ணெண்ணெய் போன்றவை தட்டுபாடு ஏற்பட்டால் எவ்வளவு வசதி இருந்தாலும் இது தான் நிலை.. எரிபொருளை சிக்கனமாக உபயோகிப்போம்.. எதிர்காலம் காப்போம்}

No comments:

Post a Comment