Saturday 27 December 2014

திருவெம்பாவை - பைங்குவளைக்..

#திருவெம்பாவை_எளிய_தமிழில் 

கரிய நிறத்து குவளை மலர்களும் செந்நிறத்து தாமரை மலர்களும்

நிறைந்த இக்குளத்தில் சிறு உடலை உடைய வண்டுகள் செய்யும்

பேரொலி நிரம்பியுள்ளது! தம்முடைய பாவங்களை நீக்க வேண்டும்

என நினைப்பவர்கள் வந்து மூழ்கிட எம் அம்மையப்பனைப் போல்

காட்சியளிக்கிறது இந்நீர்நிலை! இதில் குதித்து நீந்தி நீராடி நாம்

அணிந்து இருக்கும் சங்குகள் சலசலக்க அத்தோடு இணைந்து நம் 

சிலம்புகள் ஆரவாரிக்க நம் மார்பகங்கள் பூரித்து விம்ம அத்தோடு

இக்குளத்து நீரும் பூரித்து பொங்கி அலையடித்து மேலும் பெருக

தாமரை மலர் நிறைந்த இக்குளத்தில் நீராடுவோம் எம்பாவாய்.

பாடல்: 13

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்குமடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 

கார் - கறுப்பு; போது - மலர்; கொங்கை - பெண்ணின் மார்பகம்;
பங்கயம் - தாமரை; புனல் - நீர். மலம்-அழுக்கு (பாவம்)


No comments:

Post a Comment