Tuesday 16 December 2014

தேவதைகளின் தேசம் ஸ்விஸ் - 3

#லுசானே_சுவிட்சர்லாந்து

பார்ட் -3

லூசானே நகரில் நான் பார்த்து வியந்தது அந்நகரின் ஏரியை.. சத்தியமாக அதை ஏரி என்றால் நீங்கள் நம்பவே மாட்டீர்கள் அவ்வளவு நீளம் அகலம்.. நான் லூசான் நகரில் பார்த்த ஏரியே கடல் என்றால் இது சமுத்திரம்.. நீல நிறத்து நீர் பின்னணியில் வெள்ளி நிறத்து ஆல்ப்ஸ் பனி மலை ரம்மியமாக இருந்தது அக்காட்சி.! அந்த ஏரியின் பெயர் ஜெனீவா அலையடித்து ததும்பிக் கொண்டிருந்தது அதில் கப்பல் போக்குவரத்தும் உண்டு.. நம்மூரில் இது போல ஒரு ஏரி இருந்தால் எப்போதோ ப்ளாட் போட்டு இருப்பார்கள் என்பது ஏனோ நினைவில் வந்து போனது.

லுசானே நகரம் பழம் பெருமை வாய்ந்த நகரம் ஸ்விஸ் நாட்டின் பிரஞ்சு காலனி.!
ஆம். ஸ்விஸ் நாட்டில் டச்சு மொழியும் ஜெர்மன் மொழியும் தான் பேசுவார்கள் ஆனால் இங்கு மட்டும் பிரெஞ்சு பேசுகிறார்கள்.. பிரெஞ்சு கலாசாரத்து தெருக்கள் கட்டிடங்கள், பிரெஞ்சுக் காரர்களுக்கே புகழ் சேர்க்கும் மியூசியங்கள் இங்கு அதிகம்.. வழக்கம் போல நாம் பெருமூச்சு விடும் சுத்தமான சாலைகள் ஒழுங்கான போக்குவரத்து வண்ணமலர்கள், தோட்டம் என்று எல்லாம் நம்மை பொறாமைப்பட வைக்கும்.. அதே போல் 90 டிகிரி செங்குத்தான மலையைக் குடைந்து வீடுகள் கட்டியுள்ளார்கள் அதற்கு 90 டிகிரியிலேயே பயணம் செய்யும் விஞ்ச் டிரெயின்களும் உண்டு..அங்கு வசிப்பவர்கள் சர்வ சாதாரணமாக அதில் பயணித்து வருகிறார்கள்.!

நான் சென்றது அல்காஸார் எனும் மியூசியம்.. 13 ஆம் நூற்றாண்டில் இருந்து 18 ஆம் நூற்றாண்டு காலம் வரை உள்ள பழங்கால கோச் வண்டிகள், பாவ மன்னிப்பு கூண்டுகள், மேஜை நாற்காலிகள், விருந்து கிண்ணங்கள், கோப்பைகள், ஓவியங்கள் சிலைகள், சவுக்குகள், கண்ணாடிக் கிண்ணங்கள், என ஏராளமான பொருட்களின் அருங்காட்சியமாக அது விளங்கியது.. அத்தனையும் அவர்கள் வைத்திருக்கும் பாங்கு உரிய விளக்கங்கள், சிறு சிறு படக்காட்சிகள் மூலம் விளக்கங்கள் என அழகாக பார்ப்பவருக்கு புரியும் படி விளக்கினார்கள்.. அருமையான புதுமையான அனுபவம்.!

பிறகு ஊர் சுற்றி பார்க்க கிளம்பினோம்.. எங்கு பார்த்தாலும் முத்தமிட்டுக் கொண்டிருக்கிற இளம்ஜோடிகள் இரண்டு அடிக்கு ஒருவர் என தென்பட்டனர்.. கோச் வண்டி சவாரி, ஃபெரி எனப்படும் சிறு விரைவு படகில் ஜெனீவா ஏரியில் ஒரு சூப்பர் ஃபாஸ்ட் பயணம் ..வெஜ் பர்கருடன் ப்ரெஞ்ச் ஆம்லெட் உணவுகள் என ஆனந்தமாக கழிந்தது அப்பயணங்கள். ஸ்விஸ் செல்பவர்கள் ஒரு இரு நாள் தங்க வேண்டிய ஊர் லுசானே.. மீண்டும் அடுத்த நாள் லூசான் கிளம்பினோம்.. சரியாக  இரவு 3 மணிக்கு எங்களது கார் விபத்துக்குள்ளானது.. அது..

தொடரும்...



No comments:

Post a Comment