Tuesday 30 December 2014

பாசுரம் 1

எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (1) புத்தகத்திலிருந்து..

1.விளக்கேற்றி துவக்குவோம்.

எந்த நல்ல காரியத்தையும் விளக்கேற்றித்தான் துவக்கி வைக்கிறோம். இன்றைய தினங்களில் கம்ப்யூட்டர் விழாக்கள் கூட குத்துவிளக்கேற்றித்தான் துவங்குகின்றன. குத்துவிளக்கைத் தேடி அலைய முடியாது, நமக்கு ஓர் அகல் விளக்கு போதும்.

"தகளி" என்ற அருமையான கடைச் சங்க காலத் தமிழ் வார்த்தையை நாம் மலையாளத்துக்கு இழந்து விட்டோம். மண் விளக்குக்கு பயன்பட்டு வந்த சொல். கார்த்திகை மாதத்தில் வீடெங்கும் ஏற்றி வைப்பார்களே அந்த விளக்கு. அம்மாதிரியான ஒரு விளக்கை ஏற்றி வைத்து இத்தொடரை துவங்குவோம்.

விளக்கேற்றுவது இருள் நீங்குவதற்கு இடர்ப்பாடுகள் சுனாமி ஆழிப்பேரலைப் போல வந்தாலும் அதை நீக்க ஒரு பெரிய விளக்கை ஏற்றி வைத்தால் போதும். அதற்கு தேவையான சமாச்சாரங்கள் என்னென்ன? முதலில் ஒரு தகளி வேண்டும். அதற்கு இந்த உலகத்தையே (வையம்) எடுத்துக் கொள்ளலாம்.

அதில் எண்ணெய் ஊற்றவேண்டும் ;அதற்கு (வார்கடல்) சமுத்திரத்தைப் பயன்படுத்தலாம்.திரியேற்ற வேண்டும் ; கதிரவனில் பற்ற வைக்கலாம் அதை கடவுளின் பாதத்தில் வைத்தால் போதும் காரியம் முடிந்தது. இப் பெரிய விளக்கை ஏற்றுவதுகொஞ்சம் கஷ்டம்தான் என்றாலும் கற்பனை செய்தாவது பார்க்கலாமே.

அட சொல்லியாவது பார்க்கலாமே! காசா பணமா? அந்தச் சொல் மாலையாலேயே இடர்ப்பாடுகள் அனைத்தும் நீங்கி விடும் என்கிறார் பொய்கையாழ்வார். 

வையம் தகளியா வார்கடலே நெய்யாக

வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய

சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை

இடராழி நீங்குகவே என்று.

[வெய்ய -வெப்பமிக்க, செய்ய - சிவந்த, சுடராழி - ஒளிச்சக்கரம், இடராழி - துன்பக்கடல்]

இதைப்பாடிய பொய்கையாழ்வார் 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். திருவெஃகா என்ற பழைய பெயர் கொண்ட காஞ்சிபுரத்துக்காரர் -துறவி. இந்தப்பாடல் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் 2082 வது பாசுரம். இயற்பா என்கிற பகுதியில் முதல் திருவந்தாதியில் முதல் பாசுரம். நேரிசை வெண்பாவில் அமைந்த பாசுரம்.

பொய்கையாழ்வார் பாடிய 100 பாடல்களால் புறவிருள் அகன்றது என்பது வைணவர்கள் நம்பிக்கை.அதிகாலையில் கடற்கரையில் இருள் பிரியும் வேளையில் நின்றுகொண்டு தொடு வானத்தில் சூரியன் உதிக்க எழுந்து உலகெலாம் வெளிச்சத்தில் நனைவதை பார்க்கும் போது"சகஸ்ரகோடி பாஸ்கர நாமம்" என்று சொல்லும் "கதிராயிரம் இரவி கலந்தாற்" போன அந்தக் கணத்தில் பொய்கையாழ்வாரை நினைவில் கொள்ளுங்கள். - எழுத்தாளர் சுஜாதா



No comments:

Post a Comment