Wednesday 31 December 2014

பாசுரம் - 15

எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (15 ) புத்தகத்திலிருந்து...

15. காற்றினிலே வரும்...

பெரியாழ்வாரைப் போல கண்ணனின் மேல் ஈடுபாடு கொண்டவர் யாருமே இல்லை கண்ணன் குழல் ஊதுவதை அவர் வர்ணிக்கும் இந்தப் பாடலைப் படிக்கும் உங்களுக்கும் காற்றில் அந்த கீதம் நிச்சயம் கேட்கும்.

கருங்கண் தோகை மயிற்பீலி யணிந்து
கட்டி நன்கு(உ)டுத்த பீதக ஆடை
அருங்கல உருவின் ஆயர் பெருமான்
அவன் ஒருவன் குழல்ஊதின போது
மரங்கள் நின்று மதுதாரைகள் பாயும்
மலர்கள் வீழும் வளர்கொம்பகள் தாழும்
இரங்கும் கூம்பும் திருமால் நின்றநின்ற
பக்கம் நோக்கி அவை பெய்யும் குணமே.

(பீலி - இறகு, பீதக ஆடை - பீதாம்பரம், அருங்கலம் - அருமையான ஆபரணங்கள், இரங்கும் - உருகும், கூம்பும் - குவியும்)

மயிலிறகும் பட்டாடையும் கட்டி அழகிய நகைகள் அணிந்து அந்த மாயக் கண்ணன் குழலூதுகையில் மரங்களில் இலை அசைவது நின்று விடுகிறது, மலர்கள் தாமாக தேனைப் பொழிகின்றது,மரக்கிளைகள் கூட தாழ்ந்து கை கூப்புவது போல் நிற்கின்றன அந்தக் குழலோசை வருகின்ற திசை நோக்கி இயற்கையே திரும்புகிறது

சுற்றிலும் இருப்பதையெல்லாம் ஸ்தம்பிக்க வைத்து விட்ட அந்த மாயக்கண்ணனின் குழலோசையில் அவன் பால் திரும்பிய பூமி தான் சுழல்வதை சற்று நேரம் நிறுத்திவிடுகிறது.  - எழுத்தாளர் சுஜாதா...

No comments:

Post a Comment