Wednesday 31 December 2014

பாசுரம் - 9

எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (9) புத்தகத்திலிருந்து...

9. ஒரே ஒரு பாசுரம்..

வைணவர்களுக்கு மிக முக்கியமான பாசுரம் எது? அதை மட்டும் தெரிந்து கொண்டால் திவ்ய பிரபந்தத்தையே தெரிந்து கொண்ட மாதிரி. அப்படி ஒரு பாசுரம் இருக்கிறதா? என்று அவசர உலகத்தில் கேள்விகள் கேட்பவர்களுக்கு சுஜாதா அவர்கள் பரிந்துரைக்கும் பாசுரம் இது. இதோ இனி அவர் கூறியது போல...

என் தந்தை "இந்தப் பாசுரம் ஒன்றே போதும். திவ்யப் பிரபந்ததின் சாரம், திரு மந்த்ரார்த்தம் இதுதான்'என்பார். இறக்கும் தருவாயில் இந்த ஒரு பாசுரத்தை காதில் சொன்னால் போதும் என்று கூட சொல்வார்கள். திருமங்கையாழ்வார் திவ்ய பிரபந்தத்தில் அதிக எண்ணிக்கையுள்ள பாடல்களைப் பாடினவர்.

அதிகம் வைணவத் தலங்களுக்கு சென்று தரிசித்தவர். வடநாட்டில் தேவப் பிரயாகை நைமிசாரண்யம் பத்ரிகாசிரமத்திலிருந்து துவங்கி தென்னாட்டில் அத்தனை கோயில்களையும் தரிசித்து பாடியுள்ளார்.அவர் பாடாத வைணவக் கோயில் இருந்தால் அது சமீபத்தியதாக இருக்கும்.. இனி பாசுரம்..

குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம்தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா எனும் நாமமே.

நாராயணன் என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு.எளிமையானது - கடலில் சயனித்திருப்பவன். நாரா- உலகின் அத்தனை சேதன அசேதன பொருள்களையும் தன்னையும் சேர்த்து அயனன் இருப்பிடமானவன் திருமால் என்பதே இதன் ஆழமான பொருள். அந்தச் சொல்லை கைகண்டு கொண்டுவிட்டால் போதும்..

நமக்கு நல்ல குலம் அமையும்; செல்வம் பெருகும். அடியவர்களுக்கு ஏற்படும் துயரங்கள் எல்லாம் மட்டமாகும் (நிலந்தரம்) பரமபதத்தை காட்டும். பெற்ற தாயை விட அதிகமாகச் செய்யும். நாராயணன் என்ற ஒரே சொல்லை மட்டும் கண்டு கொண்டால் போதும்.இதெல்லாம் உத்திரவாதம் என்கிறார் திருமங்கையாழ்வார்.

-எழுத்தாளர் சுஜாதா.


No comments:

Post a Comment