Wednesday 31 December 2014

பாசுரம் -19

எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (19) புத்தகத்திலிருந்து...

19. எந்த வாரம் இந்த வாரம்...

தஞ்சைப்பகுதியில் நிலச் சொந்தக்காரர்களையும் குத்தகைக் காரர்களையும் மேல் வாரம், குடிவாரம் என்று இன்றும் சொல்கிறார்கள். திருப்பாணாழ்வாரின் இந்தப் பாடலில் வாரம் வருகிறது...

பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கிவைத்தான் வைத்ததன்றி யென்னுள் புகுந்தான்
கோரமாதவம் செய்தனன் கொலறியேனரங்கத்தம்மான் திரு
ஆரமார்பதன்றோ அடியேனை யாட்கொண்டதே.

சுமையாக நின்ற பழைய பாவங்களின் சம்பந்தத்தை தொலைத்து என்னைத் தன்னிடத்தில் அன்புடையவனாகப் பண்ணிவைத்தான். அதுமட்டுமில்லாமல் என் இதயத்துக்குள் நுழைந்து விட்டான். உக்ரமான தவம் ஏதாவது நான் முற்பிறவியில் செய்திருக்க வேண்டும். தெரியவில்லை,திருவரங்கனின் மார்பன்றோ என்னை ஆட் கொண்டது. திருப்பாணாழ்வார் திவ்யப் பிரபந்தத்தில் 10பாடல்களே பாடியுள்ளார்.

அத்தனையும் முத்துக்கள்.! இந்த உருக்கமான பாடலில்"வாரம்" என்பதற்கு பல பொருள்கள் உள்ளன.என்னை குத்தகைக்கு எடுத்து விட்டான். பகவான் என் எஜமானன், நான் அவரிடம் வாடகைக்கு இருக்கிறேன் என்கிற அர்த்தம் கவிநயமும் ஆழமும் மிக்கது. பங்காக பற்றும்படி செய்தான் என்ற பொருளிலும் வருகிறது.

வாரமாக ஓதுவார்கள் என்றால் நிஷ்டையாக நியமமாக ஓதுகிறவர்கள்.வாரம் நடப்பது என்பது கோயிலுக்கு பிரார்த்தனை செய்து கொண்டு போவது. 'வாரமோதல்'  என்பது உருச்சொல்வது (மனப்பாடம்) Litany நியமமாகச் சொல்லுதல் இப்படி பல படிமங்கள் கொண்டது வாரம் எனும் சொல்.

இதில் திருப்பாணாழ்வார் சொல்வது எந்த வாரம் என்று நீங்களே தீர்மானிக்கலாம். இந்த கட்டுரையில் வாரம் ஒரு பாசுரம் என்ற ஒரே பிரயோகத்தில் மட்டும் இன்று இந்தச் சொல் முடங்கிக் கிடக்கிறது.  - எழுத்தாளர் சுஜாதா

No comments:

Post a Comment