Wednesday 31 December 2014

பாசுரம் - 37

எழுத்தாளர் சுஜாதாவின் "வாரம் ஒரு பாசுரம்" (37) புத்தகத்திலிருந்து...

37. மிகக் கடினம்...

"கோணை" என்ற ஒரு சொல்லுக்கு பொருள் என்ன என்று சமீபத்தில் பார்க்க வேண்டியிருந்தது. கோணை என்றால் Crookedness,வளைவு. கோணைக் கத்தி, கோணைக் கழுத்தன், கோணைப் பேச்சு, கோணை வாயன்.. இது போன்ற பிரயோகங்களில் இச் சொல் பயன்படுகிறது.

திவ்யப் பிரபந்த காலத்தில் அதற்கு மிறுக்கு, பிரயாசம், அனுபத்தி போன்ற அர்த்தங்கள் இருந்தது. சம்சாரிகளின் கோணைப் போக்கி என்று ஒரு வியாக்கியானம் உள்ளது. Difficulty - கஷ்டம் என்ற அர்த்தத்தில் நம்மாழ்வார் திரு வாய்மொழியில் திருமாலை வர்ணிக்க முயல்கையில் இச்சொல்லில் விளிக்கிறார்..

ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்
காணலும் ஆகான் உளனல்லன் இல்லையல்லன்
பேணுங்காற் பேணும் உருவாகும் அல்லனுமாம்
கோணை பெரிதுடைத்து எம் பெம்மானைக் கூறுதலே.

(அல்லா - பயனல்லாத, பேணுங்கால் - விரும்பும் போது)

உலகில் நாம் பார்க்கிற ஆண்களைப் போல் அல்லன்,அவன். பெண்களைப் போலோ உதவாத அலியோ அல்லன் அவன். அவனைக் கண்ணால் பார்க்க முடியாது. இருப்பவனில்லை; இல்லையும் இல்லை. வேண்டும் போது வேண்டும் உருவில் தோன்றுவான்; தோன்றமாட்டான் எம்பெருமானைக் கூறுவது ரொம்பக் கஷ்டம்.

உலகின் சிறந்த கவிஞர்களில் ஒருவரும் பிரபந்தத்தின் திருவாய்மொழி மூலம் வேதத்தின் சாரத்தை கொண்டு வந்த நம்மாழ்வாரே திருமாலை இன்னவன் என்று கூற எப்படிக் கஷ்டப்படுகிறார் பாருங்கள். நம்மால் முடியுமா? வார்த்தைகளால் அவனைச் சிறைப் பிடிக்க முடியாது.  - எழுத்தாளர் சுஜாதா..

No comments:

Post a Comment